1 புறவினத்து மக்களுக்கு விரோதமாய் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:2 யோசியாசின் மகனான யோவாக்கீம் என்னும் யூதா அரசனுடைய நான்காம் ஆண்டில் பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் எப்பிராத் நதியருகிலுள்ள கார்க்காமீசில் முறியடித்த எகிப்து மன்னன் நெக்கோவோ என்னும் பார்வோனின் சேனையையும் எகிப்தையும் பற்றிய வாக்கு:3 வாள், கேடயங்களைத் தயார் செய்யுங்கள், போருக்குப் புறப்படுங்கள்;4 குதிரைகள் மேல் சேணங்களைப் பூட்டுங்கள், வீரர்களே, குதிரை மேல் ஏறுங்கள். தலைச்சீராவை அணிந்து கொள்ளுங்கள், ஈட்டிகளைத் தீட்டுங்கள், மார்க் கவசங்களைப் பூணுங்கள்;5 என்ன இது? அவர்கள் திகில் கொண்டு பின்னிடுகிறார்கள், புறமுதுகு காட்டி ஓடுகிறார்கள்; அவர்களுடைய வலிமை மிக்க வீரர்கள் முறியடிக்கப்பட்டனர், போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள்; திரும்பிப் பாராமல் ஓடுகிறார்கள், எப்பக்கமும் திகில், என்கிறார் ஆண்டவர்.6 ஓட்டத்தில் வல்லவனும் ஓடித் தப்ப முடியாது, வலிமை மிக்கவனும் தப்பித்துக் கொள்ள முடியாது; வடக்கே எப்பிராத்து நதியோரத்தில், தோல்வியடைந்து சிதைந்து போனார்கள்.7 நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வரும் இவன் யார்?8 நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வருபவன் எகிப்தியனே! 'பொங்கியெழுவேன், பூமியை மூடிக்கொள்வேன், நகரங்களையும் குடிமக்களையும் அழிப்பேன்' என்கிறான்.9 குதிரைகளே, முன்னேறித் தாக்குங்கள், தேர்ப்படைகளே, கொதித்தெழுங்கள்! போர் வீரர்கள் முன்னேறித் தாக்கட்டும்; எத்தியோப்பியரும் லிபியரும் கேடயம் பிடித்துப் போங்கள்; லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றுங்கள்.10 அந்த நாளோ சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரின் நாள், தம்முடைய பகைவர்களைப் பழிவாங்கும் நாள்; அவர்கள் வாளுக்கு இரையாக்குவார்கள், வாளும் அவர்களின் இரத்தத்தை நிறையக் குடிக்கும்; குடித்துத் திருப்தியடைந்து வெறித்திருக்கும்; வடநாட்டில் எப்பிராத்து நதியருகில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு வேள்வி உண்டு.11 எகிப்து என்னும் கன்னிப் பெண்ணே! கலாயத்துக்கு ஏறிப்போய்க் களிம்பு மருந்து தடவு; பல்வகை மருந்துகளைப் பயன்படுத்துவது வீணே, உன் காயங்கள் ஆறவே ஆறா.12 வேற்றினத்தார் உன் மானபங்கத்தைக் கேள்விப்பட்டார்கள், உனது கூக்குரல் உலகெங்கும் பரவிற்று; ஏனெனில் போர்வீரர் ஒருவர் இன்னொரு வீரரோடு மோதிக் கொண்டு, இருவரும் ஒருமிக்க இடறி விழுந்தார்கள்."13 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் எகிப்து நாட்டை அழிக்கப் படையெடுத்து வருவதைப் பற்றி ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு:14 எகிப்திலே அறிவியுங்கள், மிக்தோலிலே முரசொலியுங்கள், மேம்பீசிலும் தப்னீசிலும் பறைசாற்றுங்கள்: 'தயார் செய்யுங்கள், தயாராய் நில்லுங்கள்; ஏனெனில் உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்' என்று கூறுங்கள்.15 ஆப்பிஸ் விழக் காரணம் என்ன? உன் பலவான் விழுந்த காரணமென்ன? ஆண்டவர் அவனைத் தள்ளினதால் அன்றோ?16 பல பேர் சோர்ந்து வீழ்ந்தனர், அவனவன் தனக்கடுத்தவனிடம், 'எழுந்திரு,கொடியவனின் வாளுக்குக் தப்பித்துக் கொள்ள, நம் இனத்தாரிடமும் பிறந்த நாட்டுக்கும் திரும்பிப் போவோம்' என்று சொல்வான்.17 எகிப்து அரசன் பார்வோன் பெயரை, 'வெறும் ஆரவாரம், காலத்தை நழுவ விட்டான்' என்று சொல்லுங்கள்.18 சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மாமன்னர் கூறும் வாக்கு இதுவே: மலைகளுக்குள் தாபோர் மலை போலவும், கடலோரத்துக் கர்மேல் போலவும் வருவான்.19 எகிப்து நாடென்னும் உரிமை மகளே, நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றை மூட்டை கட்டிக்கொள். ஏனெனில் மேம்பீஸ் காடாகும், பாழடைந்து குடியற்றுப் போகும்.20 எகிப்து அழகும் சிறப்பும் வாய்ந்த ஓர் இளம் பசு, தாற்றுக் கோல் அதற்கு வடக்கிலிருந்து வருகிறது;21 கொழுத்த காளைகள்போல் அதன் நடுவிலுள்ள கூலிப் படைகள் கூட எதிர்த்து நிற்க முடியாமல் ஒருமிக்க ஓட்டம் பிடித்தார்கள்; ஏனெனில் அவர்களுடைய அழிவின் நாள் அவர்கள் மேல் வந்துற்றது; அதுவே அவர்களுக்குத் தண்டனை நாள்.22 நழுவிச் செல்லும் பாம்பைப் போல் எகிப்து சீறும், அதன் பகைவர்கள் அணி அணியாய் வருவார்கள், மரம் வெட்ட வருகிறவர்களைப் போலக் கோடாரிகளோடு வருவார்கள்;23 அவர்கள் அதன் காட்டை வெட்டுவார்கள், அது ஆள் நுழைய முடியாத காடாயினும் வெட்டப்படும். வெட்டுகிளிகளைப் போல் எண்ணிக்கையில் அடங்காதவர்கள், அவர்களைக் கணக்கிட முடியாது, என்கிறார் ஆண்டவர்.24 எகிப்து என்னும் மகள் அவமானத்துக்குள்ளாவாள், வடநாட்டு மக்கள் கையில் அகப்படுவாள்."25 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, தீப்ஸ் நகரத்தின் அம்மோனையும் பார்வோனையும் எகிப்தையும் அதன் தெய்வங்களையும், அரசர்களையும் பார்வோனையும், அவன் மேல் நம்பிக்கை வைக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறோம்.26 அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவனுடைய ஊழியர் கையிலும், அவர்களை ஒப்புவிப்போம்; பிறகு பண்டை நாளில் இருந்தது போல், எகிப்து குடியேற்றப்படும், என்கிறார் ஆண்டவர்.27 ஆனால் நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, நீ கலங்காதே; ஏனெனில் உன்னைத் தொலை நாட்டினின்று மீட்போம், உன் சந்ததியை அடிமைத்தனத்தினின்று விடுவிப்போம்; யாக்கோபு திரும்பி வந்து அமைதியுடன் இளைப்பாறுவான், அவனை எவனும் அச்சுறுத்த மாட்டான்;28 நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் உன்னோடு இருக்கிறோம்; நீ சிதறி வாழ்ந்த நாட்டு மக்கள் அனைவரையும் முற்றிலும் அழிப்போம்; ஆனால் உன்னை முற்றிலும் அழிக்க மாட்டோம்; உன்னை நீதியோடு தண்டிப்போம்; உன்னைத் தண்டியாமலும் விட மாட்டோம்."