1 யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமாகிய யோவாக்கீமின் நான்காம் ஆண்டில்- அதாவது பபிலோனிய மன்னன் நபுக்கோதனசாரின் முதல் ஆண்டில்- யூதாவின் மக்கள் அனைவரையும் குறித்து எரெமியாசுக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே:2 அதை இறைவாக்கினரான எரெமியாஸ் யூதாவின் எல்லா மக்களுக்கும், யெருசலேமின் குடிகள் அனைவருக்கும் அறிவித்தார்.3 அவர் அறிவித்தது: "அம்மோனின் மகனும் யூதாவின் அரசனுமாகிய யோசியாசின் பதின்மூன்றாம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது: நான் உங்களுக்கு ஒன்றும் விடாது அதைச் சொன்னேன்; நீங்களோ கேட்கவில்லை.4 ஆண்டவர் தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பினார்; ஆனால் நீங்கள் கேட்கவுமில்லை, கேட்பதற்குக் காதுகளைச் சாய்க்கவுமில்லை.5 ஆண்டவர் அவர்கள் வாயிலாய், ' உங்களுள் ஒவ்வொருவனும் தன் தீநெறியையும் தீய செயல்களையும் விட்டுத் திரும்பட்டும்; அப்போது ஆண்டவர் முன்னாளில் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்த நாட்டில் என்றென்றும் வாழ்வீர்கள்.6 அந்நிய தெய்வங்களைச் சேவித்து வழிபாடு செய்ய அவர்களைத் தேடி ஓடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமக்குக் கோபமூட்டாமலும் இருப்பீர்களாகில், நாம் உங்களைத் துன்புறுத்தமாட்டோம்' என்று உங்களுக்குச் சொல்லி வந்தார்;7 இருப்பினும், நீங்கள் நமக்குச் செவிசாய்க்காமல், உங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமக்குக் கோபமூட்டி உங்கள் மேல் தீமையை வருவித்துக் கொண்டீர்கள், என்கிறார் ஆண்டவர்.8 ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேளாததால்,9 இதோ, வடநாட்டின் எல்லாக் குலத்தினரையும், பபிலோனிய அரசனும் நம் ஊழியனுமாகிய நபுக்கோதனசாரையும் சேர்த்து, இந்த நாட்டுக்கும், இதன் குடிகளுக்கும், சுற்றுப்புற நாடுகள் எல்லாவற்றுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவோம்; கொண்டு வந்து இவர்களை எல்லாம் முற்றிலும் அழித்து, நகைப்புக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கி, அவர்களுடைய நாடு என்றென்றும் காடாகக் கிடக்கச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்.10 மேலும் அவர்களிடமிருந்து மகிழ்ச்சியின் சந்தடியையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளன், மணவாட்டியின் குரலொலிகளையும், இயந்திரங்களின் ஓசையையும், விளக்குகளின் ஒளியையும் ஒழியச் செய்வோம்.11 இந்நாடு முழுவதும் பாழாகி, பார்ப்பவர்களுக்குத் திகைப்பை விளைவிக்கும்; இம்மக்கள் எல்லாரும், பபிலோனிய மன்னனுக்கு எழுபது ஆண்டுகள் அடிமை வேலை செய்வார்கள்.12 அவ்வாறு எழுபது ஆண்டுகள் கடந்த பின்னர், பபிலோனிய மன்னனையும், அந்த நாட்டினரையும், கல்தேயர் நாட்டையும் அவர்களுடைய அக்கிரமத்துக்காகத் தண்டிப்போம்; அதனை என்றென்றைக்கும் பாலை நிலமாய் ஆக்கிவிடுவோம், என்கிறார் ஆண்டவர்.13 இந்நாட்டுக்கு விரோதமாய் நாம் சொன்ன வாக்குகளும், இந்த நூலில் எழுதப்பட்டவை அனைத்தும், எரெமியாஸ் எல்லா இனத்தார்களுக்கும் விரோதமாய்ச் சொன்ன யாவும் நாம் இந்த நாட்டின் மேல் பலிக்கச் செய்வோம்."14 எரெமியாஸ் வேற்றினத்தாரைப் பற்றிக் கூறியவை: ஏனெனில் அவர்களையும் கூட வேறு பல நாட்டினரும், மாமன்னர்களும் அடிமைகளாக்குவார்கள்; அவர்களுடைய செயல்களுக்கும், கை வேலைகளுக்கும் ஏற்றவாறு அவர்களுக்குக் கைம்மாறு தருவோம்.15 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இந்தக் கோபத்தின் கிண்ணத்தை நம் கையினின்று எடுத்து, நாம் உன்னை அனுப்பும் மக்கள் எல்லாருக்கும் அதனின்று குடிக்கக் கொடு.16 அவர்கள் அதனைக் குடித்து மயங்கி, நாம் அவர்கள் நடுவில் அனுப்பும் வாளைக் கண்டு வெறி கொள்ளுவார்கள்."17 அவ்வாறே நானும் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை வாங்கி, ஆண்டவர் என்னை அனுப்பிய மக்கள் அனைவருக்கும் அதனைக் குடிக்கக் கொடுத்தேன்.18 யெருசலேமுக்கும், யூதாவின் பட்டணங்களுக்கும், அதன் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்; இன்றிருப்பது போல் அவை காடாகித் திகிலுக்கும் நகைப்புக்கும் சாபனைக்கும் உள்ளாகும்படி கொடுத்தேன்.19 எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்கள், தலைவர்கள்,20 குடிமக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவில் வாழ்ந்த வேற்று நாட்டவர்களுக்கும், ஓசித்து நாட்டு மன்னர்கள், பிலிஸ்தேய நாட்டு மன்னர்கள், ஆஸ்காலோன், காஜா, அக்காரோன், ஆஜோத்து முதலிய நாட்டு மன்னர்கள் எல்லாருக்கும்;21 இதுமேயா, மோவாபு, அம்மோன் மக்களுக்கும்;22 தீரின் அரசர்கள், சீதோனின் மன்னர்கள், கடற்கரை நாடுகளின் மன்னர்கள் யாவருக்கும்;23 தேதான், தேமா, பூஸ் முதலிய இனத்தவர்க்கும், தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்ளும் அனைவருக்கும்;24 அராபிய அரசர்கள் அனைவருக்கும், பாலைவெளியில் வாழ்ந்த கலப்பு இனத்தவர்களின் அரசர்கள் எல்லாருக்கும்;25 ஜாம்பிரின் மன்னர்கள், ஏலாமின் அரசர்கள், மேதியரின் மன்னர்கள் ஆகிய எல்லா அரசர்களுக்கும்;26 அருகிலும் தொலைவிலுமிருக்கிற வடநாட்டு மன்னர்கள் யாவருக்கும், பூமியில் உள்ள நாடுகளின் அரசர்கள் எல்லாருக்கும் அந்தக் கிண்ணத்தினின்று குடிக்கக் கொடுத்தேன்; இவர்கள் அனைவருக்கும் பிறகு, சேசாக்கின் அரசன் கடைசியில் குடிப்பான்.27 மீண்டும் நீ அவர்களுக்குச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: குடியுங்கள், (குடித்து) மயங்குங்கள், கக்குங்கள், விழுங்கள்; நாம் உங்கள் நடுவில் அனுப்புகின்ற வாள் முகத்தினின்று எழவே மாட்டீர்கள்.'28 அவர்கள் குடிப்பதற்கு உன் கையிலிருந்து கிண்ணத்தை வாங்க மறுப்பார்களாயின், அவர்களுக்கு நீ இவ்வாறு சொல்: 'சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் குடிக்கத் தான் வேண்டும்;29 ஏனெனில், இதோ, நமது திருப்பெயரைத் தாங்கியுள்ள இந்த நகரத்திலேயே முதலில் துன்புறுத்தப் போகிறோம்; நீங்கள் மாசில்லாதவர்களைப் போலத் தண்டனை பெறாமல் போவீர்களோ? நீங்கள் தண்டனைக்குத் தப்பவே மாட்டீர்கள்; ஏனெனில் பூமியில் வாழும் மனிதர்கள் அனைவர் மேலுமே வாளை வரச் சொன்னோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.'30 ஆகையால் நீ அவர்களுக்கு விரோதமாய் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு அறிவி: 'ஆண்டவர் வானத்தினின்று கர்ச்சிப்பார்; தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து தம் குரலெழுப்புவார்; தம் மந்தைக்கு விரோதமாய்க் கர்ச்சிப்பார்; திராட்சைக் கனிகளை மிதிப்போரின் ஆர்ப்பரிப்புக்கொத்த கூக்குரலைப் பூமியின் மக்கள் யாவர்க்கும் எதிராய் எழுப்புவார்.31 அந்த முழக்கம் பூமியின் கடை கோடி வரை முழங்கும்; ஏனெனில் மக்களினத்தோடு ஆண்டவர் வழக்காடுவார்; எல்லா மனிதர்களையும் தீர்ப்பிடத் தொடங்குகிறார்; கொடியவர்களை வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.'32 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, துன்பம் ஓரினத்தாரிடமிருந்து இன்னுமோர் இனத்தாருக்குச் செல்லும்; பெரும் புயல் பூமியின் கோடிகளினின்று புறப்பட்டு வரும்!33 அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள் பூமியின் ஒரு கோடி முதல் மறு கோடி வரையில் (நிரம்பிக்) கிடப்பார்கள்; அழுவாரற்று, எடுப்பாரற்று, புதைப்பாரற்றுக் குப்பை போல் அவர்கள் பூமியில் கிடப்பார்கள்.34 ஆயர்களே, அழுது புலம்புங்கள், கதறுங்கள்; மந்தையின் தலைவர்களே, சாம்பலில் புரளுங்கள்; ஏனெனில் நீங்கள் கொலையுண்டு சிதறிப் போகும் நாட்கள் வந்துவிட்டன; விலையுயர்ந்த பாத்திரத்தைப் போல நம் கையினின்று விழுந்து போவீர்கள்.35 ஆயர்களுக்கு புகலிடம் இராது, மந்தையின் தலைவர்களும் தப்பித்துக் கொள்ள வகையிராது.36 ஆயர்களின் அழுகுரலும், மந்தையின் தலைவர்களுடைய கூக்குரலும் கேட்கிறது. ஏனெனில் ஆண்டவர் அவர்களுடைய மேய்ச்சல் நிலத்தைப் பாழாக்கி விட்டார்.37 ஆண்டவருடைய கோபத்தின் காரணமாய் அமைதியாயிருந்த கிடைகள் பாழாயின.38 குகையினின்று வெளியேறும் சிங்கத்தைப் போல், இந்த நாட்டை விட்டு அவர் வெளியேறினார்; கொலைஞனின் வாளாலும், அவருடைய கோபத் தீயாலும், அவர்களின் நாடு பாழாயிற்று."