1 கொள்ளையடிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீயும் கொள்ளையடிக்கப்பட மாட்டாயோ! மற்றவர்களுக்குத் துரோகம் செய்கிறவனே, உனக்கும் துரோகம் செய்ய மாட்டார்களோ! நீ கொள்ளையடித்து முடிந்ததும் பிறர் உன்னைக் கொள்ளையடிப்பர், துரோகம் செய்த உனக்கும் துரோகம் செய்வர்.2 ஆண்டவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும், ஏனெனில் உமக்காகவே காத்திருந்தோம்; காலை தோறும் எங்கள் புய பலமாகவும், துன்ப காலத்தில் எங்கள் மீட்பாகவும் இரும்.3 பேரிரைச்சல் கேட்டு வேற்று நாட்டினர் ஓட்டமெடுக்கிறார்கள், நீர் எழுந்து வரும் பொழுது மக்களினங்கள் சிதறிப் போகின்றன.4 தத்துக் கிளி சேர்ப்பது போல நம் மக்கள் கொள்ளைப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். வெட்டுக் கிளிகள் பாய்வது போல் அவற்றின் மேல் பாய்கிறார்கள்.5 ஆண்டவர் மேன்மையுள்ளவர், ஏனெனில் அவர் உன்னதத்தில் வாழ்கிறார்; சீயோனை நீதியாலும் நேர்மையாலும் அவர் நிரப்புகிறார்.6 நீ என்றென்றும் நிலைப்பாய் என்பது உறுதியாயிற்று, ஞானமும் அறிவுமே மீட்பு தரும் செல்வங்களாம்; ஆண்டவரைப் பற்றிய அச்சமே அவர்கள் கருவூலம்.7 இதோ, வலிமை மிக்க வீரர்கள் வீதியில் ஓலமிடுகிறார்கள், சமாதானத்தின் தூதுவர் கதறி அழுகிறார்கள்.8 நெடுங்சாலைகள் பாழாகிக் கிடக்கின்றன, வழிப் போக்கர்களும் இல்லாமற் போயினர்; உடன்படிக்கைகள் முறிக்கப்படுகின்றன, சாட்சிகள் அவமதிக்கப்படுகின்றனர், மனிதனுக்கு மதிப்பே கிடையாது.9 நாடு கதறியழுது சோர்வடைகிறது, லீபான் கலங்கித் தளர்ச்சியடைகிறது; சாரோன் பாலைநிலம் போல் இருக்கிறது, பாசானும் கார்மேலும் இலைகளையுதிர்க்கின்றன.10 ஆண்டவர் சொல்லுகிறார்: "இப்பொழுது நாம் எழுந்திடுவோம், இப்பொழுது நாம் நம்மை உயர்த்துவோம், இப்பொழுது நாம் நம்மை மகிமைப்படுத்துவோம்.11 நீங்கள் செத்தையைக் கருத்தரித்து வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்; உங்கள் மூச்சு தீயைப் போல் உங்களையே விழுங்கும்.12 மக்களினங்கள், எரித்து பூத்த சாம்பல் போலும், வெட்டுண்டு நெருப்புக்கிரையான முட்கள் போலும் இருப்பர்."13 தொலைவில் இருப்பவர்களே, நாம் செய்தவற்றைக் கேளுங்கள், அருகில் உள்ளவர்களே, நமது வல்லமையை அறிந்து கொள்ளுங்கள்.14 சீயோனில் உள்ள பாவிகள் அச்சங் கொண்டனர், இறைப்பற்றற்றோரைத் திகில் ஆட்கொண்டது. "உங்களில் எவன் விழுங்கும் நெருப்போடு வாழக் கூடும்? என்றென்றும் எரியும் தழலோடு குடியிருக்கக் கூடும்?"15 நீதி நெறியில் நடப்பவனும் நேர்மையைப் பேசுபவனும், புறணியால் கிடைக்கும் பணத்தின் ஆசையை வெறுப்பவனும், கையூட்டு வாங்காமல் கையை உதறி விடுபவனும், இரத்தப் பழியின் செய்தியைக் கேட்காமல் காதை மூடுபவனும், தீமையைப் பார்க்காமல் கண்ணைப் பொத்திக் கொள்பவனும்,16 உன்னதத்தில் குடியிருப்பான்; அவனது காவலரண் பாறைகளின் கோட்டைகளாகும், அவனுக்குத் தவறாமல் உணவு தரப்படும், தண்ணீரும் அவனுக்குக் குறைபடாது.17 உன்னுடைய கண்கள் அரசனை அவனது மகிமையில் அழகில் பார்க்கும்; மிகுந்த பரப்பும் நீளமும் உடைய நாட்டை அந்தக் கண்கள் நோக்கும்.18 உன்னுடைய உள்ளம் பண்டைய திகிலையே இன்னும் நினைத்து, "நாம் செலுத்தும் திறையைக் கணக்குப் பார்ப்பவன் எங்கே? திறைப் பொருளை நிறுத்துப் பார்ப்பவன் எங்கே? நகைகளைச் சோதித்து வாங்குபவன் எங்கே?" என்று வியக்கும்.19 இனித் திமிர்பிடித்த மக்களைக் காணமாட்டாய்; விளங்காத மொழி பேசுகிறவர்களையும், புரிந்து கொள்ள முடியாதபடி தெற்றித் தெற்றிப் பேசுகிறவர்களையும் நீ பார்க்க மாட்டாய்.20 நாம் திருவிழாக்கள் கொண்டாடும் நகரமாகிய சீயோனைப் பார்! உன் கண்கள் யெருசலேமைப் பார்க்கும், அது அமைதியான இருப்பிடம், அசைக்க முடியாத கூடாரம்; அதனுடைய முளைகள் எக்காலத்தும் பிடுங்கப்பட மாட்டா, அவற்றில் பிணைத்துள்ள கயிறுகள் அறுந்து போகவு மாட்டா.21 ஏனெனில் அங்கு தான் நம் ஆண்டவர் மகிமையோடு விளங்குவார்; அகலமான ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைத்தான இடம் அது; துடுப்புகளால் செலுத்தப்படும் படகு அங்கே போகாது, போர்க்கப்பல் அவ்விடத்தில் நுழையாது.22 ஏனெனில் ஆண்டவர் நம்முடைய நீதிபதி, ஆண்டவர் நமக்குச் சட்டம் இயற்றுகிறவர், ஆண்டவர் நம்முடைய அரசர், அவரே நம்முடைய மீட்பர்.23 உன்னுடைய கப்பற் கயிறுகள் தளர்ந்து போயின, பாய் மரத்தைக் கெட்டியாய் அவை பிடித்திருக்கவில்லை, அதில் உங்களால் பாயைப் பரப்பவும் முடியாது. உன் திரளான கொள்ளைப் பொருட்கள் பங்கிடப்படும், முடவர்களும் அதில் பாகம் பெறுவார்கள்.24 நான் நோய்வாய்ப் பட்டிருக்கிறேன்" என்று எவனும் சொல்ல மாட்டான், அங்கு வாழ்கிற மக்களின் அக்கிரமம் அகற்றப்படும்.