1 பொய் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதே. அக்கிரமிக்கு வேண்டிப் பொய்ச்சாட்சி சொல்வதற்கு அவனுக்குக் கை கொடுக்கலாகாது.2 தீமை செய்வதில் மக்களைப் பின்பற்றாதே. நீதிமன்றத்திலே பெரும்பான்மையோரைச் சார்ந்து சத்தியச் சதி செய்யாதே.3 நீதிமன்றத்தில் ஏழையின் முகத்தையும் பார்க்காதே.4 உன் பகைவனின் தப்பியோடிப் போன மாடாவது கழுதையாவது காணப்பட்டால், அதை அவனிடத்தில் திரும்பக் கொண்டு போய் விடுவாய்.5 உன் பகைவனுடைய கழுதை, சுமையோடு விழுந்து கிடக்கக் கண்டால், அப்பாலே போகாமல், அது எழுந்திருப்பதற்கு உதவி செய்வாய்.6 ஏழையொருவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.7 கள்ளமான காரியத்துக்கு விலகி இருப்பாயாக. குற்றமற்றவனையும் நீதிமானையும் கொலை செய்யாதே. ஏனென்றால், நாம் தீயவனை வெறுக்கிறோம்.8 கைக்கூலி வாங்காதே. ஏனென்றால், கைக்கூலிகள் ஞானிகளையுமே குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளையும் புரளச் செய்யும்.9 அந்நியனைத் துன்புறுத்தாதே. ஏனென்றால், நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தமையால், அந்நியரின் மனநிலையை நீங்களுமே அறிவீர்கள்.10 ஆறாண்டுகள் நீ உன் நிலத்திலே பயிரிட்டு அதன் பலன்களைச் சேர்த்துக் கொள்வாய்.11 ஏழாம் ஆண்டிலோ, உன் மக்களுள் எளியவர்கள் உண்ணவும், மீதியானவையெல்லாம் காட்டுப் பிராணிகள் தின்னவும் உன் நிலங்கள் சும்மா கிடக்க விட்டுவிடுவாய். உன் திராட்சைத் தோட்டத்தையும் ஒலிவத் தோட்டங்களையும் குறித்து அவ்விதமே செய்வாயாக.12 ஆறு நாள் நீ வேலை செய்து, ஏழாம் நாளிலே உன் ஆடு, மாடு, கழுதை முதலியன இளைப்பாறத் தக்கதாகவும், உன் அடிமைப்பெண்ணின் மகனும் அந்நியனும் இளைப்பாறத் தக்கதாகவும் ஓய்வு கொள்வாயாக.13 நாம் உங்களுக்குச் சொன்னதெல்லாம் அனுசரியுங்கள். மேலும், அந்நிய தெய்வங்களின் பெயரைக் கொண்டு ஆணையிடாதீர்கள். உங்கள் வாயினின்று அது யாராலேயும் கேட்கப்படலாகாது.14 ஆண்டுதோறும் மும்முறை நமக்கு வணக்கமாய்த் திருவிழாக்கள் கொண்டாடுவீர்கள்.15 (அதாவது) புளியாத அப்பத் திருவிழா நீ எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட போது புதுப் பலன்களின் மாதத்தில் ஏழு நாளளவும் புளியாத அப்பத்தை உண்ண வேண்டுமென்று நாம் உனக்குக் கட்டளையிட்டோம். நீ அவ்விதமே செய்தாய். (அன்றியும்) வெறுங்கையோடு நம் முன்னிலையில் வராதபடி கவனமாய் இருப்பாய்.16 உன் நிலத்திலே நீ எதை விதைத்திருந்தாலும் உன் வேலையால் கிடைத்த முதற் பலன்களின் அறுப்புக் காலத் திருவிழாவையும், ஆண்டு முடிவிலே உன் நிலங்களில் விளைந்த எல்லா விளைச்சல்களையும் சேர்த்துத் தீர்ந்த போது சேர்ப்புக்காலத் திருவிழாவையும் கொண்டாடி வருவாய்.17 உன் ஆண்மக்கள் யாவரும் ஆண்டில் மும்முறை உன் கடவுளாகிய ஆண்டவராம் நம்மிடம் வருவார்கள்.18 நமக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளியாத அப்பத்தோடு சேர்த்துச் செலுத்தாதே. நமக்கு இடப்பட்ட பலியின் கொழுப்பையும் விடியற்காலை வரை வைத்திராதே.19 உன் நிலத்தில் விளைந்த புதுப் பலன்களை உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்திற்குக் கொண்டு வருவாய். வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்காதிருப்பாய்.20 உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாப்பதற்கும், நாம் உனக்குத் தயார் செய்திருக்கும் இடத்திற்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும், இதோ நாம் ஒரு தூதரை அனுப்புவோம்.21 அவரை வணங்கவும், அவருடைய வாக்குக்குச் செவி கொடுக்கவும், அவருக்குப் பயந்து நடக்கவும் கடவாய். ஏனென்றால் உன் பாவத்தை அவர் பொறுப்பதில்லை. நமது பெயர் அவரிடம் உள்ளது.22 நீ அவரது வாக்குக்குச் செவிகொடுத்து, நாம் திருவுளம் பற்றுகிறது எல்லாம் அனுசரிப்பாயாகில், நாம் உன் பகைவர்கட்குப் பகைவராகி உன்னை வதைப்பவர்களை வதைப்போம்.23 நம் தூதர் உனக்கு முன்னே சென்று, ஆமோறையன், ஏத்தையன், பெறேசையன், கானானையன், ஏவையன், யெபுசேயன் ஆகியோரின் இடத்தில் உன்னைப் புகச் செய்வார். இவர்களை நாம் அழித்தொழிப்போம்.24 நீ அவர்களுடைய தெய்வங்களை ஆராதிக்கவும் தொழவும் வேண்டாம். அவர்கள் செய்கைகளை நீங்கள் பின்பற்றாமல் அவர்களை அடியோடு அழித்து, அவர்களின் சிலைகளையும் உடைத்துப் போடுவீர்கள்.25 உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் தொழுது வந்தால், நீங்கள் உண்ணும் அப்பத்தையும், குடிக்கும் நீரையும் நாம் ஆசீர்வதித்து நோயை உங்களிடமிருந்து விலகச் செய்வோம்.26 உன் நாட்டிலே வறட்டு மலடிகள் இரார்; உன் வாழ்நாளை நிறைவுபடுத்தி வருவோம்.27 என்றும் அச்சம் உங்களை ஆட்கொள்ளச் செய்வோம். எந்த நாட்டில் நீ புகுவாயோ அந்நாட்டுக் குடிகளையெல்லாம் கலங்கடித்து, நீ வரவே உன் பகைவர் எல்லாரும் புறமுதுகு காட்டச் செய்வோம்.28 நீ அவர்களின் நாட்டிலே புகுமுன்னே நாம் பெரிய குளவிகளை அனுப்பி, ஏவையரையும் கனானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம்.29 அந்நாடுகள் பாழாய்ப் போகாதபடிக்கும், காட்டு விலங்குகள் பலுகி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஓராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்தி விடமாட்டோம்.30 நீ பெருகி நாட்டை உரிமை கொள்ளும்வரை அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்திவிடுவோம்.31 (மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலிஸ்தியரின் கடல் வரையிலும், பாலைவனம் தொடங்கி நதி வரையிலும் உன் எல்லைகளை விரியச் செய்வோம். நாம் அந்நாட்டுக் குடிகளை உங்கள் கையில் ஒப்புவிப்போம்.32 அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே.33 நமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யும்படி உன்னை அவர்கள் செய்துவிடா வண்ணம், அவர்கள் உன் நாட்டிலே குடியிருக்க வேண்டாம். நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதால், அது உனக்கு இடறுகல்லாய் இருக்கும் (என்றருளினார்).