1 இராக்கேல் தான் மலடியாய் இருந்தது கண்டு, தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டு, தன் கணவனை நோக்கி: நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லாவிடில் நான் சாவேன் என்றாள்.2 யாக்கோபு அவள் மீது சினம் கொண்டு: உன்னைக் கடவுள் மலடியாக்கினதற்கு நான் பொறுப்பாளியா? என்றான்.3 அவள்: என் பணிப்பெண் பாளாள் என்னோடு இருக்கிறாள். நீர் அவளோடு கூடியிரும். அவள் பெற்று என் மடியிலே கொடுக்க, அவளாலே நான் பிள்ளைகளை அடையக் கடவேன் என்று கூறி,4 அவனுக்குப் பாளாளை மனைவியாகக் கொடுத்தாள்.5 இவள், யாக்கோபோடு சேர்ந்து கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள்.6 இராக்கேலும்: ஆண்டவர் என் வழக்கைத் தீர்த்து, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு புதல்வனைத் தந்தார் என்று சொல்லி, இதன் பொருட்டு அவனுக்குத் தான் என்னும் பெயரை இட்டாள்.7 பாளாள் மீண்டும் கருத்தரித்து வேறொரு (புதல்வனையும்) பெற்றாள்.8 இவனைக் குறித்து இராக்கேல்: ஆண்டவர் என் தமக்கையோடு என்னைப் போராடச் செய்திருக்க, நான் வெற்றி கொண்டேன் என்று கூறி, அவனை நெப்தலி என்று அழைத்தாள்.9 லீயாள் தனக்குப் பிள்ளைப் பேறு நின்று விட்டதென்று கண்டு, தன் வேலைக்காரி ஜெல்பாளைக் கணவன் பால் ஒப்புவித்தாள்10 இவள் கருத்தரித்து ஒரு புதல்வனைப் பெற்ற போது, லீயாள்:11 இது நல்லதாயிற்று என்று கூறி, குழந்தைக்குக் காத் என்று பெயரிட்டாள்.12 ஜெல்பாள் மேலும் வேறொரு புதல்வனைப் பெற்றாள்.13 லீயாள்: இது என் பாக்கியமாயிற்று. இதனால் பெண்கள் என்னைப் பேறு பெற்றவள் என்பார்கள் என்று கூறி, அவனை ஆசேர் என்று அழைத்தாள்.14 கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல் வெளிகளுக்குப் போயிருந்த போது, தூதாயிக் கனிகளைக் கண்டெடுத்து, அவற்றைத் தன் தாய் லீயாளிடம் கொண்டு வந்தான். இராக்கேல் அவளை நோக்கி: உன் மகனுடைய தூதாயிப் பழங்களில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.15 அதற்கு அவள்: நீ என்னிடத்தினின்று என் கணவரை அபகரித்துக் கொண்டது உனக்குச் சொற்பமாகத் தோன்றுகிறதோ? இன்னும் என் மகனுடைய தூதாயிக் கனிகளையும் பறிக்கவிருக்கிறாயோ என, இராக்கேல்: உன் மகனுடைய தூதயிப் பழங்களுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும் என்றாள்.16 மாலை வேளையில் யாக்கோபு காட்டினின்று திரும்பி வரும் போதே, லீயாள் அவனுக்கு எதிர் கொண்டுபோய்: நீர் என்னோடு, கூடியிருக்க வேண்டும். ஏனென்றால், என் மகனுடைய தூதாயிப் பழங்களை விலையாகக் கொடுத்து உம்மை நான் (வாங்கிக்) கொண்டேன் என்றாள். அவன் அவ்விதமே அன்றிரவு அவளோடு கூடியிருந்தான்.17 கடவுள் அவளுடைய மன்றாட்டுக்களை நன்றாகக் கேட்டார். எனவே, அவள் கருத்தரித்து ஐந்தாம் புதல்வனைப் பெற்று:18 நான் என் வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்தமையால், கடவுள் எனக்குச் சம்பாவனை தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.19 மீண்டும் லீயாள் கருவுற்று ஆறாம் புதல்வனைப் பெற்று:20 கடவுள் எனக்கு நன்கொடை தந்தருளினார். இம் முறையும் என் அன்பர் என்னுடன் இருப்பார். நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றேனன்றோ, என்று கூறி, அதனாலே அவனுக்குச் சாபுலோன் என்னும் பெயரைச் சூட்டினாள்.21 மேலும் அவள் ஒரு புதல்வியைப் பெற்றாள். அவள் பெயர் தீனாள்.22 பின் ஆண்டவர் இராக்கேலை நினைத்தருளினார்; அவள் மன்றாட்டுக்களுக்குச் செவி கொடுத்து, அவள் கருத்தரிக்கச் செய்தார்.23 ஆதலால் அவள் கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்று கடவுள் என் நிந்தையை நீக்கினார் என்றும்,24 ஆண்டவர் இன்னொரு புதல்வனை எனக்குத் தருவாராக என்றும் கூறி, குழந்தையை சூசை என்று அழைத்தாள்.25 சூசை பிறந்த பின் யாக்கோபு தன் மாமனை நோக்கி: என் சொந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்பிப் போக எனக்கு விடை கொடுத்து அனுப்புவீராக.26 நான் போகும் படி என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும். அவர்களுக்காக நான் ஊழியம் செய்தேன். நான் உமக்குச் செய்துள்ள சேவை இன்னதென்று உமக்குத் தெரியுமே என்றான்.27 லாபான் அவனை நோக்கி: நான் உன் முன்னிலையில் தயவு பெறக்கடவேன். உன் பொருட்டே ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார் என்று நான் எனது சொந்த அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.28 (ஆகையால்) உனக்கு நான் செலுத்த வேண்டிய வெகுமதி இவ்வளவென்று நீயே சொல் என்றான்.29 அதற்கு அவன்: நான் உமக்குப் பணிவிடை செய்த முறையும் உமது சொத்து என் திறமையினாலே விரத்தியடைந்த விதமும் நீர் அறிவீரன்றோ?30 நான் உம்மிடம் வருமுன் நீர் சொற்பச் சொத்தே உடையவராயிருந்தீர். இப்பொழுதோ பெருஞ் செல்வாராயினீர். நான் வரவே, ஆண்டவர் உம்மை ஆசீர்வதித்தார். இனிமேலாவது நான் என் சொந்தக் குடும்பத்திற்குப் பொருள் ஈட்டுவது முறையல்லவா என்றான்.31 அதற்கு லாபான்: உனக்கு என்ன வேண்டும் சொல் என, அவன்: எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. ஆயினும், நான் சொல்லுகிறபடி செய்விரானால், மறுபடியும் உமது மந்தைகளை மேய்த்துப் பாதுகாப்பேன்.32 அதாவது, நீர் போய் உமது எல்லா மந்தைகளையும் பார்வையிட்டு, அவற்றில் வெவ்வேறு நிறமாயிருக்கிற ஆடுகளைப் பிரித்து விடும். புள்ளிபட்ட ஆடுகளையும் தனியே புரியும். இனிமேல், செம்மறியாடுகளிலும் வெள்ளாடுகளிலும் வெள்ளையும் கறுப்பும் கலந்த குட்டிகளும், புள்ளி புள்ளியாய் இருக்கும் குட்டிகளும் எனக்குச் சம்பாத்தியமாய் இருக்கட்டும்.33 எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும் போது என் கபடின்மை என் பக்கமாய்ச் சாட்சி சொல்லும். அந்நாளிலே செம்மறியாடுகளிலும் வெள்ளாடுகளிலும் எவை புள்ளி புள்ளியும் பல நிறமும் இல்லாதவையோ அவை என்னைத் திருடனென்று சொல்லிக் காட்டுமே என்றான்.34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என,35 அன்றே அவன் புள்ளியும் மறுவுமுள்ள வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும், வெள்ளாட்டுக் கிடாய், செம்மறியாட்டுக் கிடாய்களையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்தான். வெள்ளை அல்லது கறுப்பு ஆகிய ஒரே நிறமாய் இருந்த மந்தைகளையோ, தன் மக்களுடைய காவலில் ஒப்புவித்ததுமல்லாமல்,36 தான் வாழ்ந்து வந்த ஊருக்கும் தன் மற்ற மந்தைகளை மேய்த்து வந்த தன் மருமகனுக்கும் இடையிலே மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்தான்.37 அது கண்டு யாக்கோபு போப்பில், வாதுமை, பிலாத்தன் என்னும் மரங்களின் பசிய மிலாறுகளை வெட்டி, அவற்றில் இடையிடையே பட்டையைச் சீவி உரித்தான். இப்படி அவன் சீவி உரித்த இடங்கள் வெள்ளையாகவும், சீவி உரிக்காத இடங்கள் பச்சையாகவும் தோன்றுவதனால் மேற்சொல்லிய மிலாறுகள் இருநிறமுள்ளவை ஆயின.38 மேலும், தன் மந்தைகள் (நீர்) குடிக்க வரும்போது, ஆடுகள் மேற்படி வரியுள்ள மிலாறுகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, அவன், நீர் வார்க்கப்படும் தொட்டிகளில் அம்மிலாறுகளைப் போட்டு வைத்தான்.39 இதனால் நிகழ்ந்ததென்னவெனில்: பொலியும் நேரத்தில் (இரு நிறமான) மிலாறுகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் புள்ளியும், வரியும், கலப்பு நிறமுள்ள குட்டிகளை ஈன்று வந்தன.40 யாக்கோபு பல நிறமான குட்டிகளை வெவ்வேறாகப் பிரித்து வைத்து, மிலாறுகளைக் கிடாய்களின் பார்வைக்கு நேராகத் தொட்டிகளில் வைப்பான். பின், மந்தைகள் வெவ்வேறாகப் பிரிந்திருந்தமையால், சுத்த வெள்ளை அல்லது சுத்தக் கறுப்பு நிறமுள்ளவை லாபானுக்கும், மற்றவை யாக்கோபுக்கும் உரியனவாகும்.41 ஆதலால், முதல் பருவத்திலே பொலியும் போது வரியுள்ள மிலாறுகளைக் கண்டே ஆடுகள் சூல் கொள்ளும் பொருட்டு, யாக்கோபு கிடாய்களுக்கும் ஆடுகளுக்கும் எதிராக இரு நிறமுள்ள மிலாறுகளைப் போட்டு வைப்பான்.42 பின்பருவத்துப் பொலிவுக்கோ, சூல் கொள்ளும் தன்மையுள்ள ஆடுகளின் பார்வைக்கு எதிரே யாக்கோபு மிலாறுகளைப் போட்டு வைக்க மாட்டான். அவ்வாறே முன் பருவத்தின் ஈற்று லாபானைச் சேரும்; பின் பருவத்தின் ஈற்று யாக்கோபுக்குச் சொந்தமாகும்.43 இவ்வாறு யாக்கோபு பெரும் செல்வந்தனானான்; திரளான மந்தைகளுக்கும் வேலைக்காரர் வேலைக்காரிகளுக்கும் உரிமையாளன் ஆனான்.