1 அப்பொழுது இஸ்ராயேல் மூப்பர்களுள் சிலர் என்னிடம் வந்து, என் முன் உட்கார்ந்தார்கள்.2 அந்நேரத்தில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:3 மனிதா, இந்த மனிதர்கள் அருவருப்பான சிலைகளின் பற்றைத் தங்கள் உள்ளத்தில் கொண்டிருக்கிறார்கள்; தங்களுக்கு இடறலாய் உள்ள அக்கிரமத்தைத் தங்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள்; இவர்கள் நம்மிடம் வந்து கேள்வி கேட்டு மறுமொழி பெற நாம் விடுவோமா?4 ஆகையால், நீ அவர்களோடு பேசி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருள் சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து தனக்கு இடறலாய் இருக்கும் அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்திருக்கும் எவனாவது இறைவாக்கினரிடம் வந்து, அவர் வழியாய் நம்மைக் கேள்வி கேட்டால், ஆண்டவாராகிய நாமே அவனுடைய எண்ணற்ற சிலைவழி பாட்டுச் செயல்களுக்கேற்ப மறுமொழி அளிப்போம்.5 சிலைகளினால் என்னை விட்டு விலகிப் போயிருக்கும் இஸ்ராயேல் வீட்டாரின் உள்ளங்களை இவ்வாறு நாம் மடக்கிப் பிடிப்போம்.6 ஆகையால் நீ இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மனந்திரும்புங்கள்; சிலைகளை வெறுத்துத் திரும்புங்கள். நீங்கள் செய்யும் அருவருப்பானவற்றையெல்லாம் விட்டு, உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.7 ஏனெனில் இஸ்ராயேல் குலத்தினன் ஒருவனோ, இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழும் அந்நியன் ஒருவனோ நம்மை விட்டகன்று, சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து, தனக்கு இடறலாயுள்ள அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்துக் கொண்டே நம்முடைய இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாய் நம்மிடம் கேள்வி கேட்டால், ஆண்டவராகிய நாமே அவனுக்கு மறுமொழி அளிப்போம்.8 அத்தகைய மனிதனுக்கு விரோதமாய் நம் முகத்தைத் திருப்பி, அவனை மற்றவர்களுக்கு அடையாளமாகவும் பழமொழியாகவும் வைப்போம்; நம் மக்களின் நடுவிலிருந்தே அவனைக் கிள்ளியெறிவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.9 இறைவாக்கினன் ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்வானாயின் ஆண்டவராகிய நாமே அவனைத் தவறச் செய்தோம்; அவனுக்கு எதிராய் நமது கரத்தை நீட்டி, இஸ்ராயேல் மக்களின் நடுவிலிருந்து அவனை அழிப்போம்.10 அவரவர் தத்தம் தண்டனையை ஏற்பார்கள்; இறைவாக்கினனுக்கும், இறைவாக்கினனைக் கேட்டு விசாரித்தவனுக்கும் ஒரே வகையான தண்டனையே தரப்படும்.11 இவ்வாறு, இஸ்ராயேல் மக்கள் இனி நம்மை விட்டுப் பிரியாமலும், தங்கள் அக்கிரமங்களால் அசுத்தப்படாமலும் இருப்பார்கள்; அப்போது அவர்கள் நம் மக்களாகவும், நாம் அவர்களின் கடவுளாகவும் இருப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."12 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:13 மனிதா, ஒரு நாடு நமக்கு விரோதமாய் நடந்து பாவஞ் செய்தால், கோதுமை சேமிப்பாகிய அதன் ஊன்று கோலை முறித்து, பஞ்சத்தை அனுப்பி அந்நாட்டிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் நாசமாக்குவதற்காக, அதற்கு விரோதமாய் நாம் நமது கரத்தை நீட்டும் போது,14 நோவே, தானெல், யோபு ஆகிய மூவர் அங்கிருந்தால், தங்கள் நீதியினால் தங்கள் உயிரை மட்டுமே காத்துக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.15 நாடு முழுவதும் கொடிய மிருகங்களைச் சுற்ற விட்டு, அவை நாட்டைப் பாழாக்கி வர, அந்த மிருகங்களின் காரணமாய் அந்நாட்டில் யாரும் நடமாட முடியாதிருந்தாலும்,16 அந்த மூவரும் அதிலிருந்தால்- நம் உயிர் மேல் ஆணை!- அவர்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள்; ஆனால் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தப்புவிக்க அவர்களால் முடியாது; நாடும் பாலைநிலமாய்ப் போகும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.17 அல்லது அந்த நாட்டின் மீது வாளை வரச்செய்து, 'வாளே, நீ நாடெல்லாம் ஊடுருவிப் போய், மனிதர்களையும், மிருகங்களையும் வெட்டி வீழ்த்து' என்று நாம் ஏவினாலும்,18 அந்த மூவரும் அதிலிருந்தால் - நாம் உயிர்மேல் ஆணை!- அவர்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள்; தங்கள் புதல்வர், புதல்வியரைத் தப்புவிக்க அவர்களால் முடியாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.19 அல்லது நாம் அந்த நாட்டில் கொள்ளை நோயை அனுப்பி, நம் கோபத்தின் ஆத்திரத்தையும் அதன் மீது கொட்டி, இரத்தப் பழிவாங்கி மனிதரையும் மிருகங்களையும் அழித்தாலும்,20 நோவே, தானெல், யோபு இவர்கள் அந்த நாட்டிலிருந்தால்- நம் உயிர் மேல் ஆணை!- தங்கள் நீதியினால் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வார்கள்; தங்கள் புதல்வர், புதல்வியரைத் தப்புவிக்க அவர்களால் முடியாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.21 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அவ்வாறே நம்முடைய நான்கு பொல்லாத ஆக்கினைகளான வாள், பஞ்சம், கொடிய மிருகங்கள், கொள்ளை நோய் இவற்றை, மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்படி யெருசலேமின் மீது அனுப்பும் போது,22 தங்கள் புதல்வர், புதல்வியரை வெளியில் கூட்டிக் கொண்டு, அந்த ஆக்கினைகளுக்குத் தப்புகிறவர்கள் சிலர் இருந்தால், இதோ அவர்கள் உங்களிடம் வருகிறார்கள்; நீங்கள் அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் காணும் போது, நாம் யெருசலேமின் மேல் தீங்கையும் இன்னும் பல அழிவுகளையும் வரச் செய்தோம் என்ற உங்கள் துயரம் ஆற்றப்படும்.23 நீங்கள் அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் காணும் போது உங்கள் துயரம் ஆற்றப்படும்; நாம் அதில் செய்தவற்றையெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்பதை அப்போது அறிவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."