1 அப்பொழுது மோயீசன் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: இஸ்ராயேலரே, நான் இன்று உங்கள் காது கேட்கச் சொல்லப் போகிற சமயச் சடங்குகளையும் நீதி முறைகளையும் கேளுங்கள்; அவற்றைக் கற்றுக்கொண்டு செயலில் நிறைவேற்றுங்கள்.2 நம் கடவுளாகிய ஆண்டவர் ஒரேபிலே நம்மோடு உடன்படிக்கை செய்தார்.3 அவர் நம் தந்தையரோடு அந்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் முடனேயே அதைச் செய்துகொண்டார்.4 மலையிலே நெருப்பு நடுவினின்று நம்மோடு முகமுகமாய்ப் பேசியருளினார்.5 அவருடைய வார்த்தைகளை உங்களுக்கு அறிவிக்கும்படி அக்காலத்தில் நானே ஆண்டவருக்கும் உங்களுக்குமிடையே கொண்டுகூறுபவனாகவும் நடுவனாகவும் இருந்தேன். ஏனென்றால், நீங்கள் நெருப்புக்கு அஞ்சியவர்களாய் மலையில் ஏறவில்லை. அப்போது அவர் திருவுளம்பற்றியது என்னவென்றால்:6 உன்னை எகிப்து நாடாகிய அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படச் செய்த கடவுளாகிய ஆண்டவர் நாமே.7 நமக்கு முன்பாக வேறு கடவுளர்கள் உனக்கு இல்லாது போவார்களாக.8 மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் மண்ணின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பாக ஒரு விக்கிரகத்தையேனும் ஓர் உருவத்தையேனும் உனக்கு ஆக்கிக்கோள்ளாதே;9 அவற்றை ஆராதிக்கவும் வணங்கவும் துணியாதே. ஏனென்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் நாம் பொறாமை கொண்ட கடவுளாய், நம்மைப் பகைக்கிறவர்களின் பொருட்டுத் தந்தையரின் அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை வரையிலும் அவர்களுடைய புதல்வரிடம் திருப்பிச் சாட்டுகிறவரும்,10 நம்மிடம் அன்புகூர்ந்து நம் கட்டளைகளைக் கைக்கொள்பவர்களுக்கோ பல்லாயிரம் தலைமுறைகள்வரையிலும் இரக்கம் காட்டுகிறவருமாய் இருக்கிறோம்.11 உன் கடவுளாகிய ஆண்டவருடைய பெயரை வீணாய்ச் சொல்லாதே. ஏனென்றால், வீணான காரியத்திற்காக அவருடைய பெயரைச் சொல்பவன் தண்டனை அடையாது போகான்.12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாளைப் புனிதமுள்ளதாக நினைக்கக்கடவாய்.13 ஆறுநாளும் உழைத்து உன் வேலையெல்லாம் செய்வாய்.14 ஏழாம் நாளோ சாபத்; அதாவது: உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஓய்வு நாளாம். அதிலே நீயேனும், உன் புதல்வன் புதல்வியேனும், வேலைக்காரன் வேலைக்காரியேனும், மாடு கழுதை வேறெந்த மிருகமேனும், உன் வாயிலின் உள்ளேயிருக்கிற அந்நியனேனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ இளைப்பாறுவதுபோல் உன் வேலைக்காரனும் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும்.15 நீயும் எகிப்திலே அடிமையாய் இருந்தாயென்றும், அங்கிருந்து உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வலுத்தகையாலும் ஓங்கிய புயத்தாலும் புறப்படச் செய்தாரென்றும் நினைத்துக்கொள். அது பற்றியே ஓய்வு நாளை அனுசரிக்கும்படி உனக்குக் கட்டளையிட்டார்.16 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கவிருக்கும் நாட்டில் நீ நெடுங்காலமாயும் நலமாயும் வாழ்ந்திருக்கும் பொருட்டு, ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தந்தையையும் தாயையும் மதித்துப் பேணக்கடவாய்.17 கொலை செய்யாதிருப்பாயாக.18 விபசாரம் செய்யாதிருப்பாயாக.19 களவு செய்யாதிருப்பாயாக.20 உன் பிறனுக்கு எதிராய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.21 உன் பிறனுடைய மனைவியையும், வீடு நிலங்களையும், ஊழியன் ஊழியக்காரிகளையும், மாடு கழுதைகளையும், அவனுக்கு உண்டானவைகளில் யாதொன்றையும் ஆசியாதிருப்பாயாக என்றருளினார்.22 இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலையிலே நெருப்பு, மேகம், காரிருள்களின் நடுவிலிருந்து, உங்கள் சபையார் எல்லாரும் கேட்க உரத்த குரலில் சொன்னாரேயன்றி, வேறொன்றையும் கூட்டிச் சொல்லவில்லை. மேலும், அந்த வார்த்தைகளை அவர் இரண்டு கற்பலகைகளிலும் எழுதி எனக்குத் தந்தருளினார்.23 நீங்களோ இருளின் நடுவிலிருந்து உண்டான அவருடைய குரலொலியையுங் கேட்டு, மலை எரிவதையும் கண்ட பின்னர், உங்களில் கோத்திரத் தலைவர்களும், வயது முதிர்ந்தவர்களுமாகிய எல்லாரும் என்னிடம் வந்து, என்னை நோக்கி:24 இதோ நம்முடய கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் தம்முடைய மகிமையையும் பெருமையையும் காண்பித்திருக்கிறார். நெருப்பின் நடுவிலிருந்து உண்டான அவருடைய குரலொலியைக் கேட்டோம். கடவுள் மனிதனோடு பேசியிருந்தும் மனிதன் உயிர் பிழைத்திருக்கிறதை இந்நாளிலே அறியலானோம்.25 ஆகையால், நாங்கள் சாவானேன் ? இந்தப் பெரிய நெருப்பு எங்களை விழுங்குவானேன் ? நாங்கள் இனியும் நம் கடவுளாகிய ஆண்டவரின் வாக்கைக் கேட்போமாயின் சாவோமே!26 மாமிசம் கொண்டுள்ளன எல்லாம் எம்மாத்திரம் ? நெருப்பின் நடுவிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டதுபோல் கேட்டு (மற்ற யாரேனும்) பிழைக்கக்கூடுமோ ?27 நாங்கள் கேட்கச் சொல்வதைவிட, நீரே அணுகிப்போய், நம் கடவுளாகிய ஆண்டவர் உமக்குச் சொல்வதெல்லாம் கேட்டு, நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும். நாங்கள் கேட்டு, அதன்படியே செய்வோம்.28 ஆண்டவர் இதைக்கேட்டு, என்னை நோக்கி: அவர்கள் உன்னோடு பேசுகையில் அவர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டோம். அவர்கள் சொன்னதெல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.29 அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் நலமாகும் பொருட்டு அவர்கள் எக்காலமும் நமக்கு அஞ்சி, நம்முடைய கட்டளைகளனைத்தையும் கடைப்பிடிக்க ஏற்ற மனம் அவர்களுக்கு இருப்பதே முக்கியம்.30 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள் என்று அவர்களுக்குச் சொல். நீயோ இங்கே நம்மோடு நில்.31 நாம் அவர்களுக்கு உரிமையாய்க் கொடுக்கும் நாட்டில் அவர்கள் அனுசரிக்க வேண்டிய எல்லாக் கட்டளைகளையும், சமயச் சடங்குகளையும், நீதி நியாயங்களையும் நாம் உனக்குச் சொல்லுவோம். அவைகளை நீ அவர்களுக்குப் போதிப்பாய் என்று திருவுளம்பற்றினார்.32 ஆகையால், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளை நீங்கள் கைக்கொண்டு அவற்றின்படி செய்யுங்கள். வலப்புறத்திலேனும் இடப்புறத்திலேனும் சாயாதீர்கள்.33 ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கற்பித்த வழியிலேயே நடங்கள். அப்போது வாழ்வீர்கள். அது உங்களுக்கு நன்மையும் பயக்கும். நீங்கள் உரிமைகொள்ளும் நாட்டிலே உங்கள் நாட்களும் நீடித்திருக்கும்.