1. மானங்கெட்ட இனமே, ஒன்றுகூடுங்கள்.
2. காற்றில் பறக்கும் பதரைப் போல நீங்கள் அடித்துப் போகப்படு முன்பே, ஆண்டவருடைய கடுமையான கோபம் உங்கள் மேல் வந்து விழுமுன்பே, ஆண்டவருடைய கோபத்தின் நாள் உங்கள் மேல் வருமுன்பே கூடிவாருங்கள்.
3. நாட்டிலிருக்கும் எளியோரே, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையைத் தேடுங்கள், தாழ்ச்சியைத் தேடுங்கள்; ஆண்டவருடைய கோபத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கலாம்.
4. காசா பாலைநிலமாக்கப்படும், அஸ்காலோன் பாழ்வெளியாகும்; அசோத்து பட்டப் பகலில் தாக்கப்படும், அக்காரோன் வேரோடு வீழ்த்தப்படும்.
5. கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கிரேத்தியர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பிலிஸ்தியருடைய நாடாகிய கானானே, ஆண்டவரின் வாக்கு உனக்கு எதிராய் உள்ளது; குடியிருக்க ஒருவன் கூட இராதபடி நாம் உன்னைப் பாழாக்குவோம்.
6. இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையர்களின் இளைப்பாறுமிடமாகவும், ஆடுகளின் மேய்ச்சல் நிலமாகவும் இருக்கும்.
7. அந்தக் கடற்கரையானது யூதாவின் வீட்டாருள் எஞ்சியிருப்பவர்களின் உரிமைச் சொத்தாகும், அங்கே தங்கள் கால்நடைகளை மேய்ப்பார்கள். அஸ்காலோன் வீட்டில் மாலையில் உறங்குவார்கள்; ஏனெனில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்களை நினைவு கூர்ந்து முன்னைய நன்னிலைக்குக் கொணர்வார்.
8. நம் மக்களைப் பழித்து, அவர்களுடைய நாட்டெல்லைகளுக்கு எதிராக வீறாப்புப் பேசிய மோவாபின் வசை மொழிகளையும், அம்மோன் மக்களின் பழிப்புரைகளையும் நாம் கேட்டோம்.
9. ஆதலால் மோவாப் சோதோமைப் போலும், அம்மோன் மக்கள் கொமோராவைப் போலும் ஆவார்கள். காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளங்கள் நிறைந்துள்ள பாழ்வெளியாகவும் என்றென்றும் இருக்கும். நம் மக்களில் எஞ்சினோர் அவர்களைக் கொள்ளையடிப்பர், நம் மக்களில் தப்பினோர் அவர்களை உரிமையாக்கிக் கொள்வர்; நம் உயிர் மேல் ஆணையாகச் சொல்லுகிறோம்" என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர்.
10. அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பலன் இதுவே; ஏனெனில் சேனைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் வசை கூறினார்கள், வீறு பேசினார்கள்.
11. ஆண்டவர் அவர்களுக்கு அச்சம் தருபவராய் இருப்பார்; மாநிலத்தின் எல்லாத் தெய்வங்களையும் அழித்துப் போடுவார்; மனிதர் அனைவரும் தத்தம் நாட்டில் அவரையே வணங்குவர், புறவினத்தாரின் தீவுகள் அனைத்தும் அவ்வாறே வணங்கும்.
12. எத்தியோப்பியர்களே, நீங்களுந்தான் நமது வாளால் கொல்லப்படுவீர்கள்.
13. வடதிசைக்கு எதிராகத் தம் கையை உயர்த்தி ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்; நினிவே நகரத்தைப் பாலை நிலம் போல வறண்ட வெளியாக்கிப் பாழாக்குவார்.
14. அதன் நடுவில் கால்நடைகள் கிடைகொள்ளும், காட்டு மிருகங்கள் யாவும் படுத்துக்கிடக்கும்; அதன் தூண் தலைப்புகளில் கூகையும் சாக்குருவியும் இராத் தங்கும், பலகணிகளில் ஆந்தைகள் அலறும்; கதவுகளின் மேல் காக்கைகள் இருந்து கரையும், கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
15. நானே இருக்கிறேன், எனக்கு நிகர் யாருமில்லை" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அச்சமின்றி இருந்து வந்ததும், அக்களித்து ஆர்ப்பரித்ததுமான நகரம் இதுதானோ? எவ்வளவோ இப்பொழுது பாழாயிற்றே! கொடிய மிருகங்களின் இருப்பிடமாய்விட்டது; அதனைக் கடந்து போகிறவன் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.