1. இளவேனிற் காலத்தில் ஆண்டவரிடமிருந்து மழை கேளுங்கள்; ஆண்டவர் தாம் மின்னல்களை உண்டாக்குகிறவர்; மனிதர்களுக்கு மழையைத் தருகிறவர் அவரே, பயிர் பச்சைகளை முளைப்பிப்பவரும் அவரே.
2. குலதெய்வங்கள் சொல்வது வீண், குறிசொல்பவர்கள் பொய்களையே பார்த்துச் சொல்லுகிறார்கள்; கனவு காண்கிறவர்கள் ஏமாற்றுக் கனவுகளையே காண்கின்றனர், அவர்களுடைய ஆறுதல் மொழிகள் வெறும் சொற்கள் தான். ஆதலால் மக்கள் ஆடுகளைப் போல் அலைகின்றனர், ஆயனில்லாததால் துன்புறுகின்றனர்.
3. ஆயர்கள் மேல் நாம் சினங்கொண்டோம், வெள்ளாட்டுக் கடாக்களைத் தண்டிப்போம்; சேனைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதாவின் வீட்டாரைக் கண்காணிக்கிறார்; வீரமிகும் போர்க் குதிரைகளைப் போல் அவற்றை ஆக்குவார்.
4. யூதாவினின்றே மூலைக்கல் தோன்றும், அதினின்றே கூடாரத்தைத் தாங்கும் முளையும், போர்க்களத்தில் பயன்படும் வில்லும், ஆளுநர் அனைவரும் கிளம்புவார்கள்.
5. தெருவில் சேற்றை மிதிப்பது போலப் பகைவரை மிதிக்கும் மாபெரும் வீரர்களாய்ப் போர்க்களத்தில் விளங்குவர்; ஆண்டவர் அவர்களோடிருப்பதால் வீரத்தோடு போர்புரிவர்; குதிரை மேல் வரும் மாற்றாரை நாணச்செய்வர்.
6. யூதாவின் வீட்டாரை வலிமைப்படுத்துவோம், யூதாவின் வீட்டாரை மீட்டுக்கொள்வோம்; அவர்கள் மட்டில் நாம் இரக்கம் கொண்டுள்ளதால் அவர்கள் திரும்பி வருவார்கள்; ஒருபோதும் நம்மால் புறக்கணிக்கப் படாதவர்கள் போலிருப்பர்; ஏனெனில் நாமே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; ஆகவே அவர்களின் மன்றாட்டைக் கேட்டருள்வோம்.
7. அப்போது எப்பிராயீம் மக்கள் வீரரைப் போலாவர், மதுவருந்தியவர்கள் போல் அவர்கள் உள்ளம் மகிழும்; அவர்களுடைய பிள்ளைகள் கண்டு களிப்பார்கள், ஆண்டவரில் அவர்கள் உள்ளம் அக்களிக்கும்.
8. சீழ்க்கையடித்து நாம் அவர்களை ஒன்று கூட்டுவோம், ஏனெனில் அவர்களை மீட்டவர் நாமே; முன் போலவே அவர்கள் பெருகிப் பலுகுவார்கள்.
9. புறவினத்தார் நடுவில் அவர்களை நாம் சிதறடித்தாலும், தொலைநாடுகளில் நம்மை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்; தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10. எகிப்து நாட்டிலிருந்து அவர்களை மீட்டுக் கொணர்வோம், அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டி வருவோம்; கலகாத், லீபான் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவோம், இனி இடமில்லை என்னும்படி வந்து சேருவார்கள்.
11. எகிப்து நாட்டின் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள், கடலலைகள் அடித்து நொறுக்கப்படும், நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் செருக்கு தாழ்த்தப்படும், எகிப்து நாட்டின் கொடுங்கோல் பறிக்கப்படும்.
12. ஆண்டவரில் தான் அவர்கள் வல்லமை இருக்கும், அவருடைய பெயரில் அவர்கள் பெருமை கொள்வர்" என்கிறார் ஆண்டவர்.