1. நீரோ நலமிக்க போதனைக்கேற்பப் பேசுவீராக
2. வயது முதிர்ந்தவர்கள் மிதமிஞ்சிக் குடியாமல், கண்ணியமும் விவேகமும் உள்ளவர்களாய் விசுவாசம், அன்பு, மன உறுதி இவற்றைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளச் சொல்லும்.
3. அவ்விதமே வயதுமுதிர்ந்த பெண்களும் மரியாதைக்குரிய நடையுடை பாவனையுள்ளவர்களாய்ப் புறணி பேசாமல், குடிவெறிக்கு அடிமையாகாமல் இருக்கவேண்டும்.
4. இவர்கள் இளம் பெண்களுக்கு விவேகத்தை யூட்டும் நல்ல அறிவுரை கூறுபவர்களாய் இருக்கவேண்டும். இளம் பெண்கள் தம் கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்புகாட்டி,
5. தங்கள் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டு விவேகம், கற்பு, இரக்கமனம், கணவர்க்குப் பணிவு ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர்களாய் இருக்கும்படி அவ்வயதான பெண்கள் கற்பிப்பார்களாக. அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.
6. அவ்வாறே இளைஞர்களும் எல்லாவற்றிலும் விவேகத்துடன் நடந்துகொள்ள அறிவு புகட்டும்.
7. நன்னடத்தையால் அவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குவீராக. போதிப்பதில் வாய்மையும் பெருந்தன்மையும் காட்டும்.
8. யாரும் குறை காணமுடியாத, நலமிக்க வார்த்தைகளைப் பேசும். அப்போது நம்மைப்பற்றித் தீமையாகச் சொல்வதற்கு எதுவுமின்றி எதிரிகள் நாணிப்போவர்.
9. அடிமைகள் தம் தலைவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்து நடந்து, எதிர்த்துப் பேசாமல் அவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்க முயலும்படி சொல்லும்.
10. சிறுகளவும் செய்யாமல், நடத்தையில் நல்லவர்கள், முழு நம்பிக்கைக்குரியவர்கள் எனக் காட்டுவார்களாக. இவ்வாறு அவர்கள், கடவுளாகிய நம் மீட்பருடைய போதனைக்கு எல்லா வகையிலும் அணிகலனாய் இருப்பார்கள்.
11. மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகி
12. நாம் இறைப் பற்றின்மையையும் உலக இச்சைகளையும் விட்டொழித்து விவேகத்தோடும் நீதியோடும் பக்தியோடும் இம்மையில் வாழ நம்மைப் பயிற்றுகிறது.
13. இவ்வாறு வாழும் நாமோ, மகத்துவமிக்க கடவுளும், நம் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை பிரசன்னமாவதால், மகிழ்வளிக்கும் நம்முடைய நம்பிக்கை நிறைவேறுமென எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
14. இவர் நம்மை எல்லா அக்கிரமத்திலிருந்தும் மீட்கவும், நம்மைத் தூயவர்களாக்கி, நற்செயல்களில் ஆர்வமுள்ள ஓரினமாகத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் தம்மை நமக்காகக் கையளித்தார்.
15. இவற்றை நீர் எடுத்துக் கூறி, அறிவுறுத்திக் கடிந்துகொள்ளும். முழு அதிகாரத்தோடு பேசும். யாரும் உம்மை அவமதிக்க விடாதீர்.