1. கடவுளின் ஊழியனும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான சின்னப்பன் யான் தீத்துவுக்கு எழுதுவது:
2. நம் இருவருக்கும் பொதுவான விசுவாச வாழ்வில் என் உண்மை மகனான உமக்கு, பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும், நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உண்டாகுக!
3. கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு விசுவாசம் உண்டாகவும், பக்தி நெறிக்கு ஏற்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்ளவும், முடிவில்லா வாழ்வின் நம்பிக்கையில் அவர்கள் நிலைபெறவுமே நான் அனுப்பப்பெற்றேன்.
4. இவ்வாழ்வை எல்லாக் காலங்களுக்கு முன்பே பொய்யாக் கடவுள் தாமே வாக்களித்தார். அதற்கொப்ப, குறிப்பிட்ட காலத்தில் நற்செய்தியறிவிப்பின் வாயிலாகத் தம் வார்த்தையை அவர் வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியறிவிப்பு நம் மீட்பராகிய கடவுளின் கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
5. நான் திருத்தாமல் விட்டு வந்ததை நீர் சீர்திருத்தவும், நான் உமக்குப் பணித்தவாறு நகரந்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தவும் வேண்டியே, உம்மைக் கிரேத்தா தீவிலே விட்டு வந்தேன்.
6. நீர் ஏற்படுத்தும் மூப்பர்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருத்தல் வேண்டும் ஒருமுறை மட்டுமே திருமணமானவராக இருக்கவேண்டும் அவர்களுடைய மக்கள் விசுவாசிகளாக இருக்கவேண்டும்; இவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பெயரெடுத்தவர்களாகவோ, அடங்காதவர்களாகவோ இருத்தல் ஆகாது.
7. விசுவாசிகளை மேற்பார்வையிடுவோர் கடவுளுடைய கண்காணிப்பாளருக்கு ஏற்ப, குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருத்தல் வேண்டும். அகந்தை, கடுஞ்சினம், குடிவெறி, கலகம், இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகியவற்றை விலக்கி,
8. விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், விவேகம், நீதி, புனிதம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஃ
9. நற்போதனையோடு பொருந்தியதும் நம்பிக்கைக்குரியதுமான படிப்பினையை உறுதியாய்ப் பற்றிக்கொள்பவராய் இருக்கவேண்டும். அப்போதுதான் நலமிக்க போதனையைப் போதித்து அறிவுரை கூறவும், எதிர்த்துப் பேசுவோர்க்கு மறுப்புக் கூறவும் அவர் வல்லவராக இருக்கமுடியும்.
10. ஏனெனில், கட்டுக்கடங்காதவர், வீண் வாதம் செய்பவர், மோசக்காரர் பலர் இருக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோர் யூத மதத்திலிருந்து வந்தவர்களாயிருப்பர். இவர்களுடைய வாயை அடக்க வேண்டும்.
11. இழிவான ஊதியத்திற்காக இவர்கள் தகாதவற்றைப் போதித்து முழுக் குடும்பங்களையே சீர்குலைத்து விடுகின்றனர்.
12. தெய்வ வாக்கினன் என அவர்களே கருதிய ஒருவன் சொன்னபடி: 'கிரேத்தா தீவினர் ஓயாப் பொய்யர்; கொடிய காட்டுமிராண்டிகள்; பெருந்தீனிச் சோம்பேறிகள்.'
13. இந்தச் சாட்சியம் உண்மையே. இவ்வாறிருக்க, யூதக் கட்டுக் கதைகளிலும் உண்மையை விரும்பாத மனிதருடைய கற்பனைகளிலும் கருத்தைச் செலுத்தாமல்,
14. தங்கள் விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி நீர் அவர்களைக் கண்டிப்புடன் கடிந்துகொள்ளும்.
15. தூய உள்ளத்தோருக்கு எல்லாம் தூயவையே மாசுள்ள மனத்தினருக்கும், விசுவாசம் இல்லாதவர்க்கும் எதுவுமே தூயதாயிராது. அவர்களுடைய மனமும் மனச் சாட்சியும் கூட மாசுள்ளவையாயிருக்கின்றன.
16. கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்; ஆனால், நடத்தையால் அவரை மறுக்கின்றனர்; அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள்; எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள்.