1. ஆகையால், விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவர்களான நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுடன் சமாதானம் கொண்டிருக்கிறோம்.
2. நாம் இப்போது இருக்கும் அருள் நிலையை அடையும் பேறு, விசுவாசத்தினால் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்துள்ளது; அவர் வழியாகவே கடவுளின் மாட்சிமையைப் பெறுவோம் என்கிற நம்பிக்கையில் பெருமைக்கொள்கிறோம்.
3. அதுமட்டுமன்று, வேதனைகளிலும், பெருமை கொள்கிறோம். ஏனெனில், வேதனையால் பொறுமையும்.
4. பொறுமையால் மனத்திண்மையும் மனத்திண்மையால் நம்பிக்கையும் விளையும் என்று அறிந்திருக்கிறோம்.
5. நம்பிக்கையோ பொய்க்காது; ஏனெனில், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பும் நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
6. ஏனெனில், நாம் பாவத்தால் வலுவற்றிருந்தபோதே, குறித்த காலத்தில் கிறிஸ்து பாவிகளுக்காக இறந்தார்;
7. நீதிமானுக்காக ஒருவன் தன் உயிரைக்கொடுத்தல் அரிது- ஒருவேளை நல்லவன் ஒருவனுக்காக யாரேனும் தன் உயிரைக் கொடுக்கலாம் - ஆனால் .
8. நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; இதனால் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எண்பிக்கிறார்.
9. ஆகையால் நாம் இப்பொழுது கிறிஸ்துவின் இரத்தத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி அவர் வழியாய் இறுதித் தண்டனைக்குத் தப்பி மீட்புப்பெறுவோம். என மிக உறுதியாய் நம்பலாமன்றோ?
10. கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகனது மரணத்தின் வழியாய் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப் பட்ட நாம் அவருடைய உயிரால் மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாமன்றோ
11. அதுமட்டுமன்று; இப்பொழுது நம்மை ஒப்புரவாக்கிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளில் பெருமை கொள்கிறோம்.
12. ஒரே மனிதனால், பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லாரும் பாவஞ் செய்தமையால் எல்லா மனிதர்க்குள்ளும் சாவு பரவியது போலவும்.
13. ஏனெனில், திருச்சட்டம் வருமுன்னும், உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது, குற்றச்சாட்டுக்கு இடமில்லை.
14. ஆயினும், ஆதாம் முதல் மோயீசன் வரை இருந்தவர்கள், ஆதாம் கட்டளையை மீறிச் செய்த பாவத்தைப் போன்ற பாவம் செய்யாவிடினும், அவர்கள் மேலும் சாவு ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாமோ வரவிருப்பவர்க்கு முன்னடையாளம்.
15. ஆனால் குற்றத்தின் தன்மை வேறு, அருட்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவன் செய்த குற்றத்தால் அனைவரும் இறந்தார்கள் அல்லவா? ஆனால் கடவுளின் அருளும், இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதரின் அருளால் கிடைக்கும் கொடையும் அனைவருக்கும் எவ்வளவோ மிகுதியாய்ப் பெருகியுள்ளன.
16. இந்த அருட்கொடையின் பயன் வேறு, அந்த ஒரு மனிதன் செய்த பாவத்தின் விளைவு வேறு. ஏனெனில், ஒருவன் செய்த குற்றத்தால் விளைந்த தீர்ப்பு, தண்டனைத் தீர்ப்பு, அனைவருடைய குற்றங்களுக்கும் கிடைத்த தீர்ப்போ அருட்கொடையாக வந்த விடுதலைத் தீர்ப்பு
17. ஏனெனில், ஒரே ஒருவன் செய்த குற்றத்தாலே அந்த ஒருவன் வழியாகச் சாவு ஆட்சி செதுத்தினதென்றால், அருட்பெருக்கையும், இறைவனுக்கு ஏற்புடையவராகும் வரத்தையும் அடைந்து கொண்டவர்கள், இயேசு கிறிஸ்து என்னும் ஒரே ஒருவர் வழியாக வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
18. ஆகவே ஒரே ஒருவனின் குற்றம் எல்லா மனிதர்க்கும் தண்டனைத் தீர்ப்பாய் முடிந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதர்க்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் மலர்ந்தது.
19. ஏனெனில், ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
20. குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது; ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் அணை கடந்து பெருக்கெடுத்தது.
21. இவ்வாறு சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியது போல், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய், முடிவில்லா வாழ்வுக்காக இறையருள் மனிதரை இறைவனுக்கு ஏற்புடையராக்கி, ஆட்சி செய்கிறது.