1. விசுவாசத்தில் எவனாவது வலுவற்றவனாய் இருந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவன் எழுப்பும் கேள்விகளைப்பற்றி வாதாடாதீர்கள்.
2. விசுவாசத்தில் உறுதியாய் உள்ள ஒருவன் எவ்வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகிறான். விசுவாசத்தில் வலுவில்லா வேறொருவனோ மரக்கறி உணவை மட்டும் உண்கிறான்.
3. புலால் உண்பவன், உண்ணாதவனை இழிவாக எண்ணலாகாது; புலால் உண்ணாதவன் உண்பவனைக் குறித்துத் தீர்ப்பிடலாகாது. ஏனெனில் கடவுள் அவனையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
4. வேறொருவருடைய வேலையாளைக் குறித்துத் தீர்ப்பிட நீ யார்? அவன் நிலையாய் நின்றாலும் தவறி விழுந்தாலும், அதைப்பற்றித் தீர்ப்பிடுவது அவனுடைய தலைவரே. ஆனால் அவன் நிலையாகத் தான் இருப்பான். ஏனெனில் ஆண்டவர் அவனை நிலைநிறுத்த வல்லவர்.
5. ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்ததென ஒருவன் கருதுகிறான்; ஒருவன் எல்லா நாளையும் ஒரு படியாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன் மனத்தில் செய்துகொண்ட உறுதியான முடிவின்படி நடக்கட்டும்.
6. மேற்சொன்னவாறு நாளைக் கணிப்பவன் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறான். புலால் உண்பவனும் ஆண்டவருக்காக உண்கிறான்; கடவுளுக்கு நன்றி கூறுகிறான் அன்றோ? புலால் உண்ணாதவனும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கிறான்; அவனும் கடவுளுக்கு நன்றி கூறுகிறான்.
7. ஏனெனில், நம்முள் எவனும் தனக்கென்று வாழ்வதில்லை. தனக்கென்று சாவதில்லை.
8. வாழ்ந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், செத்தாலும் ஆண்டவருக்கென்றே சாகிறோம். ஆகவே வாழ்ந்தாலும் செத்தாலும் நாம் ஆண்டவர்க்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
9. ஏனெனில் கிறிஸ்து இறந்ததும் உயிர்த்ததும் இறந்தோர் மீதும் வாழ்வோர் மீதும் ஆட்சி செலுத்தவே.
10. அப்படியிருக்க, நீ ஏன் உன் சகோதரனைக் குறித்துத் தீர்ப்பிடுகிறாய்? நீ உன் சகோதரனை ஏன் இழிவாகக் கருதுகிறாய்? நாம் அனைவரும் கடவுளின் நீதியிருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?
11. ஏனெனில், ''ஆண்டவர் சொல்வது: என் உயிர்மேல் ஆணை, என் முன் எல்லாரும் மண்டியிடுவர், எல்லா நாவுமே கடவுளைப் புகழ்ந்தேத்தும்' என்று எழுதியுள்ளது.
12. ஆகவே., நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பான்.
13. ஆகையால், இனி ஒருவரைக் குறித்து ஒருவர் தீர்ப்பிடுவதை விட்டுவிடுவோமாக. மாறாக, சகோதரனுக்கு இடைஞ்சலாகவோ. இடறலாகவோ இருக்கமாட்டோம் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
14. தன்னிலேயே எப்பொருளும் மாசுபட்டதன்று; ஆண்டவர் இயேசுவுக்குள் வாழும் எனக்கு இதைப்பற்றி ஐயமே இல்லை. ஆனால் ஒரு பொருள் மாசுபட்டது என ஒருவன் கருதினால், அது அவனுக்கு மாசுபட்டதாகும்.
15. நீ உண்ணும் உணவு உன் சகோதரன் மனத்தைப் புண்படுத்தினால், நீ அன்பு நெறியில் நடப்பவன் அல்ல. அற்ப உணவை முன்னிட்டு அவனை அழிவுறச் செய்யாதே; அவனுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்க வில்லையா?
16. ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச் சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!
17. ஏனெனில் கடவுளின் அரசு உணவிலும் பானத்திலும் அடங்கியில்லை; கடவுளின் அரசு என்பது நீதியும், அமைதியும், பரிசுத்த ஆவியில் துய்க்கும் மகிழ்ச்சியுமே.
18. இத்தகைய உள்ளத்தோடு கிறிஸ்துவுக்கு ஊழியஞ் செய்கிறவனே, கடவுளுக்கு உகந்தவன். மக்கள் மதிப்புக்கு உரியவன்.
19. ஆகையால், அமைதிக்கு வழியாய் இருப்பதை நாடுவோமாக; ஒருவர் ஒருவர்க்கு ஞானவளர்ச்சி தருவதைக் கடைப்பிடிப்போமாக.
20. உணவின் பொருட்டுக் கடவுளின் வேலையைத் தகர்க்கத் துணியாதே; யாவும் தூயவைதான்; ஆனால் இடைஞ்சலுக்கு இடந்தருமானால், உண்பவனுக்கு யாவும் தீயவையே.
21. உன் சகோதரனுக்கு யாவும் தீயவையே. உன் சகோதரனுக்கு இடைஞ்சலாயிருக்குமாயின், புலால் உண்பதையோ, மது குடிப்பதையோ அது போன்ற வேறெதையும் செய்வதையோ செய்யாமல் விடுவது நல்லது.
22. விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலை உனக்கிருந்தால், அதை உன்னோடு வைத்துக் கொள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும்., செய்வது நல்லதென முடிவு செய்த பின், அதைச் செய்யும் போது மனச்சாட்சியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவன் பேறு பெற்றவன்.
23. நல்லதோ கெட்டதோ என்ற தயக்கத்தோடு ஒருவன் உண்பானாகில் அவன் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டான். ஏனெனில், அச்செயல் விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.