1. பின்னர் வாழ்வுநீர் ஓடும் ஆற்றை வானதூதர் காண்பித்தார். அது பளிங்குபோல் மின்னிற்று. அது கடவுளும் செம்மறியான வரும் வீற்றிருக்கும் அரியணையினின்று நகர வீதியின் நடுவிலே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு பக்கங்களிலும் வாழ்வின் மரமிருந்தது.
2. மாதத்திற்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்கள் இனங்களைக் குணப்படுத்தக் கூடியவை.
3. சாபத்துக்குள்ளானதெதுவும் அங்கு இல்லை. கடவுளும் செம்மறியானவரும் வீற்றிருக்கும் அரியணை அங்கே இருக்கும். அவருடைய ஊழியர்கள் அவரைத் தொழுவார்கள்.
4. அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்கள் நெற்றியில் எழுதியிருக்கும்.
5. அங்கு இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஆண்டவராகிய கடவுளே அவர்கள் மீது ஒளி வீசுவார். அவர்களோ என்றென்றும் அரசாள்வார்கள்.
6. அதன்பின் அவர் எனக்குச் சொன்னது: "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை. இறைவாக்கினருக்கு ஆவியைத் தரும் கடவுளாகிய ஆண்டவர் விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் ஊழியர்களுக்கு வெளிப்படுத்தத் தம் தூதரை அனுப்பினார்.
7. இதோ, நான் விரைவாகவே வருகிறேன்." இந்நூலிலுள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றவர்.
8. அருளப்பனாகிய நானே இவற்றைக் கண்டேன், இவற்றைக் கேட்டேன். இவற்றைக் கண்டு கேட்டு முடித்தபின் எனக்கு இவற்றைக் காட்டிய வானதூதரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன்.
9. அவரோ, "வேண்டாம், வேண்டாம்; இறைவாக்கினரான உன் சகோதரர்களுக்கும், இந்நூலிலுள்ள வார்த்தைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல் வேண்டும்" என்றார்.
10. பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது: "இந்நூலிலுள்ள இறைவாக்குகளை மறைந்து வைக்காதே. இதோ, குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.
11. இதற்கிடையில், அநீதி செய்பவன் செய்துகொண்டே போகட்டும்; சேற்றில் உழல்பவன் உழன்றுகொண்டே இருக்கட்டும்; நல்லவனோ நன்மை செய்து கொண்டே இருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவனோ பரிசுத்தத்திலேயே நிலைத்திருக்கட்டும்.
12. இதோ, விரைவாகவே வருகிறேன். அவனவன் செயலுக்கேற்ப அவனவனுக்கு அளிக்கும் கைம்மாறு என் கையிலிருக்கிறது.
13. அகரமும் னகரமும்-முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.
14. தங்கள் ஆடைகளைத் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். வாழ்வின் மரத்தின் மீது அவர்களுக்கு உரிமையிருக்கும். வாயில்கள் வழியாக அந்நகரத்தில் நுழையவும் முடியும்.
15. கேடுகெட்ட நாய்கள், சூனியம் வைப்பவர்கள், காமுகர், கொலைகாரர், சிலை வழிபாட்டினர், பொய்யை விரும்பி அதன்படி நடப்போர் அனைவரும் வெளியே நிற்பர்."
16. இயேசுவாகிய நான் சபைகளைப் பற்றிய இச்சாட்சியங்களை உங்களுக்கு அறிவிக்க என்தூதரை அனுப்பினேன். தாவீதின் வேரும் வழித்தோன்றலும் நானே. ஒளிமிகு விடிவெள்ளியும் நானே.
17. ஆவியானவரும் மணமகளும் "வாரும் என்கின்றனர். இதைக் கேட்பவனும் "வாரும்" என்று சொல்லட்டும். தாகமாயிருப்பவன் வரட்டும். விருப்பமுள்ளவன் வாழ்வின் நீரை இலவசமாக ஏற்றுக்கொள்ளட்டும்.
18. இந்நூலிலுள்ள இறை வாக்குகளைக் கேட்டுகிற ஒவ்வொருவனையும் நான் எச்சரிக்கிறேன்: இவ்வாக்குகளில் ஒருவன் எதையாவது சேர்த்தால், இந்நூலில் விளக்கியுள்ள வாதைகளை எல்லாம் கடவுள் அவனுக்கு அவன் தலையில் சேர்த்துவிடுவார்.
19. இந்நூலுள்ள இறைவாக்குகளில் எதையாவது ஒருவன் எடுத்துவிட்டால், இந்நூலில் குறிப்பிட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரிலும் அவனுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.
20. இவற்றிற்குச் சான்று பகர்கிறவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமேன். ஆண்டவராகிய இயேசுவே வாரும்.
21. ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக.