1. நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது கொடியதொரு விலங்கு கடலிலிருந்து வெளிவரக்கண்டேன். அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து முடிகளும், அதன் தலைகளில் தூஷணப் பெயர்களும் இருந்தன.
2. நான் கண்ட விலங்கு சிறுத்தை போல இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போலும், வாய் சிங்கத்தின் வாய்போலும் இருந்தன. அதற்கு அந்தப் பறவைநாகம் தன் வல்லமையைவும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அளித்தது.
3. அதன் தலைகளுள் ஒன்று படுகாயப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது. ஆனால் அப்படுகாயம் குணமாய்விட்டது. அவ்விலங்கைப் பார்த்து, மண்ணில் வாழ்வோர் அனைவரும் வியந்து அதன் பின் சென்றனர்.
4. பறவைநாகம் அவ்விலங்குக்கு அதிகாரம் அளித்ததால், மக்கள் நாகத்தை வணங்கி, "விலங்குக்கு ஒப்பானவன் யார்?" என்று அவ்விலங்கையும் தொழுதார்கள்.
5. அவ்விலங்கு ஆணவச் சொற்களையும் தூஷணங்களையும் பேசுவதற்கு விடப்பட்டது. நாற்பத்திரண்டு மாதமளவு அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
6. கடவுளுக்கு எதிராகத் தூஷணம் பேச வாய் திறந்து, அவரது பெயரையும் உறை விடத்தையும், அதாவது விண்ணில் உறைபவர்களையும் தூஷிக்கலாயிற்று.
7. இறைமக்களோடு போர் தொடுக்கவும், அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி கிடைத்தது. குலம், இனம், மொழி, நாடு ஆகிய ஒவ்வொன்றின் மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
8. மண்ணில் வாழ்வோர் அனைவரும், அதாவது பலியிடப்பட்ட செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் உலகத் தொடக்க முதல் பெயரெழுதப்படாதவர் அனைவரும், அதைத் தொழுவர்.
9. செவியுள்ளவன் இதைக் கேட்கட்டும்.
10. சிறைக்குக் குறிக்கப்பட்டவன் சிறைக்குச் செல்லத்தான் வேண்டும்; வாளால் கொல்லப்பட வேண்டியவன் வாளால் கொல்லப்படத்தான் வேண்டும். ஆகவே இறைமக்கள் மனவுறுதியும் விசுவாசமும் கொண்டு விளங்க வேண்டும்.
11. அப்போது மண்ணிலிருந்து வேறொரு விலங்கு வெளிவரக் கண்டேன். செம்மறியின் கொம்புகள்போன்ற இரு கொம்புகள் அதற்கு இருந்தன; ஆனால் அது பறவை நாகத்தைப் போல் பேசியது;
12. முதல் விலங்கு காட்டிய அதிகாரத்தை யெல்லாம் அதன் சார்பாக இரண்டாம் விலங்கு காட்டியது. படுகாயத்திலிருந்து குணமாக்கப்பட்ட அம்முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் தொழும்படி செய்தது. அது பெரிய அருங்குறிகள் புரிந்தது.
13. எல்லாரும் பார்க்க விண்ணினின்று நெருப்பு விழும்படிகூடச் செய்தது.
14. தனக்குக் கிடைத்த வல்லமையால், அம்முதல் விலங்கின் சார்பாகச் செய்த அருங்குறிகளில் வாயிலாக, மண்ணில் வாழ்பவர்களை அது வஞ்சித்தது. வாளால் காயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்கிற்குச் சிலை அமைக்க வேண்டுமென்று அவர்களிடம் சொன்னது.
15. அச்சிலைக்கு உயிரளித்துப் பேசச் செய்யவும், அதைத் தொழாதவர்களைக் கொன்று விடவும், இரண்டாவது விலங்குக்கு வல்லமை கிடைத்தது.
16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் தம் வலக்கையிலோ நெற்றியிலோ அடையாளம் போட்டுக்கொள்ளும்படி செய்தது.
17. அந்த விலங்கின் பெயரையோ அதன் பெயரின் எண்ணையோ அடையாளமாய்க் கொண்டிராதவர்கள், வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தார்கள்.
18. இங்கே அறிவுக் கூர்மை தேவைப்படுகிறது. அறிவுள்ளவன் விலங்கின் எண்ணைக் கணிக்கட்டும். அது ஒரு மனிதனைக் குறிக்கும் எண். அவ்வெண் அறுநூற்று அறுபத்தாறு.