1. வாருங்கள், ஆண்டவர்க்குப் புகழ் பாடுவோம்: மீட்பளிக்கும் பாறையாம் அவருக்கு அக்களிப்புடன் பாடுவோம்.
2. புகழ்ப்பாக்கள் இசைத்துக் கொண்டு அவர் திருமுன் செல்வோம்: இன்னிசைப் பாடல்களுடன் அவர் முன்னிலையில் அகமகிழ்வோம்.
3. ஏனெனில், ஆண்டவர் மகத்துவமிக்க கடவுள்: தேவர் அனைவருக்கும் பேரரசர்.
4. பூமியின் ஆழ்ந்த பகுதிகள் அவர் கையில் உள்ளன. உன்னத மலைகளும் அவருக்கு உரியவையே.
5. கடலும் அவருடையதே, அவரே அதைப் படைத்தவர்: உலர்ந்த தரையும் அவருடையது, அவர் கரங்களே அதை உருவாக்கின.
6. வாருங்கள் ஆராதிப்போம், தெண்டனிடுவோம், வணங்குவோம்: நம்மைப் படைத்த ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்.
7. அவரே நம் கடவுள், நாமோ அவரால் மேய்க்கப்படும் மக்கள், அவர் அரவணைப்பிலுள்ள மந்தை: இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களா? அக்குரல் கூறுவதாவது:
8. அன்று மெரிபாவிலும் பாலை வெளியில் மாசாவிலும் நிகழ்ந்ததுபோல், உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9. அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தனர்: என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதனைக்குட்படுத்தினர்.
10. நாற்பது ஆண்டளவாக இற்த மக்களை நான் பொறுத்துக் கொண்டேன்: தவறிழைக்கும் இதயமுள்ள மக்கள் இவர்கள் என் வழிகளை அறியவில்லை.
11. எனவே என் இளைப்பாற்றியை அடைய மாட்டார்கள் என்று, சினமேலீட்டால் சபதம் செய்தேன்".