1. இஸ்ராயேலரின் மேய்ப்பவரே, செவிசாய்த்தருளும்: யோசேப்பை ஆட்டு மந்தையைப் போல் வழி நடத்துபவரே, என் குரல் கேளும். கெருபீம்களின் மேல் வீற்றிருப்பவரே.
2. எப்பிராயீம், பெஞ்சமீன், மனாசே அவர்கள் முன் உம் மாண்பு விளங்கச் செய்யும்; உமது வல்லமையைத் தூண்டி எழுந்தருளும்: எம்மை மீட்க எழுந்து வாரும்.
3. இறைவா, நீர் எங்களுக்கு வாழ்வளித்தருளும்: எங்களுக்கு மீட்புக் கிடைக்க உமது இன் முகம் காட்டியருளும்.
4. படைகளின் இறைவனே, உம் மக்கள் மன்றாடுகையில், செவிகொடாமல் எதுவரை சினம் கொண்டிருப்பீர்?
5. கண்ணீரையே அவர்களுக்கு உணவாக ஊட்டினீர்: பெருகியோடிய கண்ணீரையே அவர்கள் பருகச் செய்தீர்.
6. எங்கள் அயலார்க்கு நாங்கள் சச்சரவின் காரணமாயிருக்கச் செய்தீர்: எங்கள் எதிரிகளின் நகைப்புக்கு இலக்கானோம்.
7. படைகளின் இறைவனே நீர் எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும் எங்களுக்கு மீட்புக் கிடைக்க உமது இன்முகம் காட்டியருளும்.
8. எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றை எடுத்து வந்தீர்: புறவினத்தாரை விரட்டியடித்து அவர்கள் நாட்டில் அதை நட்டு வைத்தீர்.
9. அதற்கேற்ற நிலத்தைப் பண்படுத்தினீர்: அது வேர் விட்டு நாடு முழுவதும்¢ பரவியது.
10. அதன் நிழல் மலைகள் மீது விழலாயிற்று: அதன் கிளைகள் வளர்ந்தோங்கிய கேதுரு மரங்களையும் மூடின.
11. கடல் வரைக்கும் அதன் கொடிகள் படர்ந்தன: அதன் தளிர்கள் ஆறு வரையில் வளர்ந்தோங்கின.
12. பின்னர் ஏன் அதன் மதில் சுவரைத் தகர்த்து விட்டீர்? அவ் வழியாய்ச் செல்வோர் அனைவரும் அதில் பழம் பறிக்க ஏன் விட்டுவிட்டீர்?
13. காட்டுப் பன்றிகள் அதை அழிக்க ஏன் விட்டு விட்டீர்? காட்டு விலங்குகளை ஏன் அங்கேயே மேய விட்டு விட்டீர்?
14. சேனைகளின் இறைவனே, மீளவும் எழுந்து வாரும்; வனினின்று கண்ணோக்கிப் பாரும்: இத் திராட்சைக் கொடியை வந்து பாரும்.
15. உமது வலக்கரத்தால் நீர் நட்டதைப் பாதுகாத்தருளும்: நீர் வலிமைப்படுத்த விரும்பிய இவ்விளஞ் செடியைக் காத்தருளும்.
16. அதை அவர்கள் நெருப்பால் எரித்து விட்டனர்; அதைத் தகர்த்து விட்டனர்: உம் முகத்தின் அச்சத் தோற்றத்தால் அவர்கள் அழிவார்களாக.
17. உம் வலக்கரத்தால் தேர்ந்தெடுத்த ஆளை உம் கைவன்மை காப்பதாக: உமக்கென உறுதிப்படுத்திய மனிதனை அது காப்பதாக.
18. இனி நாங்கள் உம்மை விட்டு அகலோம்: உயிரோடு எங்களை நீர் காத்தருள்வீர்; உமது பெயரை நாங்கள் போற்றுவோம்.
19. ஆண்டவரே, சேனைகளின் இறைவனே, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும். எங்களுக்கு மீட்புக் கிடைக்க, எங்களுக்கு இன்முகம் காட்டியருளும்.