1. கடவுளிடம் தான் என் ஆன்மா சாந்தி கொள்கிறது. அவரிடமிருந்தே எனக்கு மீட்பு வருகிறது.
2. அவர் ஒருவரே எனக்கு மீட்பும் அரணும் அடைக்கலமுமாயிருக்கிறார். எந்நாளும் நான் அசைவுறேன்.
3. எவ்வளவு காலம் நீங்கள் ஒருவனுக்குத் தீமை செய்ய நினைப்பீர்கள்? சாய்ந்திருக்கும் மதில் போலவும், இடிந்திருக்கும் சுவர் போலவும் உள்ள ஒருவனை விழத்தாட்ட நீங்கள் எப்போதுமே நினைப்பீர்களா?
4. நான் இருக்கும் உன்னத இடத்திலிருந்து என்னைத் தள்ளி விட அவர்கள் உண்மையாகவே சதி செய்கிறார்கள்: பொய் சொல்வதில் இன்பம் காண்கிறார்கள். உதட்டால் பேசுவது ஆசி மொழிகள் உள்ளத்தால் நினைப்பது சாபமொழி.
5. நெஞ்சே, கடவுளிடம் மட்டுமே சாந்தி கொள். ஏனெனில், நான் எதிர்பார்ப்பது அவரிடமிருந்தே வருகிறது.
6. அவர் ஒருவரே எனக்கு மீட்பும் அரணும் அடைக்கலமுமாயிருக்கிறார். நான் அசைவுறேன்.
7. கடவுளிடம் உள்ளது என் மீட்பும் மகிமையும். எனக்கு வலிமை தரும் அரணும் என் அடைக்கலமும் இறைவனே.
8. நாட்டு மக்களே, எந்நாளும் அவர் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்கள் உள்ளத்தை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்: கடவுளே நமக்கு அடைக்கலம்.
9. மனுமக்கள் அனைவரும் ஒரு சிறு மூச்சே: மனிதர்கள் வெறும் மாயை தான். தராசில் வைத்தால் அவர்கள் கனம் மேலே தான் செல்லும். எல்லாரும் சேர்ந்தாலும் ஒரு மூச்சை விட இலேசானவர்களே!
10. கொடுமை செய்வதில் நம்பிக்கை வைக்க வேண்டாம்; பொருளைப் பறிப்பதில் வீண் பெருமை கொள்ள வேண்டாம்: உங்கள் செல்வம் பெருகினால், அதற்கு உங்கள் உள்ளத்தைப் பறிகொடுக்க வேண்டாம்.
11. இது ஒன்றைக் கடவுள் மொழிந்தார், திரும்பத் திரும்ப நான் அதைக் கேட்டிருக்கிறேன்; கடவுளைச் சார்ந்தது வல்லமை.
12. ஆண்டவரே, உம்மைச் சார்ந்தது அருள்: ஏனெனில், நீர் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பீர்.