1. என் மீதிரங்கும் இறைவா, என் மீதிரங்கும்; உம்மிடமே என் ஆன்மா அடைக்கலம் புகுகிறது: கொடுமையெல்லாம் தீரும் வரையில் உம் சிறகுகளின் நிழலில் நான் அடைக்கலம் புகுகிறேன்.
2. உன்னதரான இறைவனை நோக்கிக் கூவுகிறேன்: எனக்கு நன்மை புரியும் இறைவனை நாடுகிறேன்.
3. வானினின்று எனக்கு உதவி புரிந்து மீட்பளிப்பாராக; என்னைத் துன்புறுத்துவோரைக் கேட்டுக்கு ஆளாக்குவாராக: தமது அருளும் சொல்லுறுதியும் எனக்குத் துணைபுரியச் செய்வாராக.
4. மனுமக்களை ஆத்திரத்துடன் விழுங்கும் சிங்கங்களின் நடுவில் நான் கிடக்கிறேன்: ஈட்டியும் அம்பும் போல் உள்ளன அவைகளுடைய பற்கள்; கூரிய வாள் போன்றது அவைகளுடைய நாவு
5. இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.
6. நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்: என் உள்ளம் பெரிதும் தவிக்கலாயிற்று. நான் போகும் வழியில் எனக்குக் குழியை வெட்டியுள்ளனர்: அதில் அவர்களே விழுவார்களாக.
7. உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இன்னிசை பாடுவேன்: புகழ் இசைப்பேன்.
8. என் நெஞ்சே விழித்தெழு; வீணையே, யாழே, விழித்தெழுங்கள்: பொழுது விடியச் செய்வேன்.
9. ஆண்டவரே, உம்மை மக்களிடையே புகழ்வேன்: மக்களினத்தாரிடையே உமக்குப் புகழ் பாடுவேன்.
10. ஏனெனில், உயர்ந்துள்ளது வானமட்டும் உமதிரக்கம்: மேகங்கள் மட்டும் உயர்ந்துள்ளது உமது சொல்லுறுதி.
11. இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.