1. ஆண்டவராகிய இறைவன் பேசலானார்; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையுள்ள பூவுலகைத் தீர்ப்புக்கு அழைக்கலானார்.
2. எழில் மிக்க சீயோனிலிருந்து கடவுள் ஒளி வீசி எழுந்தார்.
3. இதோ நம் இறைவன் வருகின்றார், மவுனமாயிரார்: எரி நெருப்பு அவர் முன் செல்ல, புயற்காற்று அவரைப் புடை சூழ எழுகின்றார்.
4. மேலுள்ள வானங்களையும் இப்பூவுலகையும் அழைக்கின்றார்: தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்க அழைகின்றார்.
5. பலிகளினால் என்னுடன் உடன்படிக்கை செய்து கொண்ட என் புனிதர்களை ஒன்று கூட்டுங்கள்' என்கிறார்.
6. வானங்கள் அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுளே நீதிபதியாய் வருகின்றார்.
7. என் மக்களே, எனக்குச் செவி கொடுங்கள், இதோ நான் பேசுகிறேன்: இஸ்ராயேலே கேள், உனக்கெதிராய் நான் சான்று பகர்வேன்: 'நானே கடவுள், உன் கடவுள் நானே.'
8. நீ இடும் பலிகளைக் குறித்து உன்னைக் கண்டிக்கவில்லை: ஏனெனில், உன் தகனப் பலிகள் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றன.
9. உன் வீட்டில் உள்ள காளைமாட்டையா நான் கேட்கிறேன்? உன் மந்தையிலுள்ள ஆடுகளையா நான் கேட்கிறேன்?
10. காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் எனக்கே சொந்தம்: என் மலைகளில் மேயும் பல்லாயிரம் மிருகங்களும் என்னுடையவை.
11. வானில் உலவும் பறவைகளையெல்லாம் நான் அறிவேன்; வயல்வெளியில் மேய்வனவும் எனக்குத் தெரியும்.
12. எனக்குப் பசியெடுத்தால் உன்னிடமா சொல்வேன்? பூவுலகும் அதில் உள்ளதனைத்தும் என்னுடையது தானே!
13. எருதுகளின் சதையையா நான் உண்பேன்? செம்மறிகளின் இரசத்தையா நான் குடிப்பேன்?
14. இறை புகழ்ச்சி எனும் பலியை ஆண்டவருக்குச் செலுத்து: உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்து.
15. துன்பநாளில் என்னைக் கூப்பிடு: உன்னை விடுவிப்பேன், நீ என்னை மேன்மைப்படுத்துவாய்.
16. பாவிகளுக்கோ கடவுள் கூறுகிறார்: 'என் கட்டளைகளை நீ ஏன் எடுத்துரைக்கிறாய்? என் உடன்படிக்கையைப் பற்றி நீ ஏன் பேசவேண்டும்?
17. ஒழுக்கத்தைப் பகைப்பவன் அன்றோ நீ? என் வார்த்தையைப் புறக்கணித்தவன் அன்றோ நீ?
18. திருடனைப் பார்த்தால் அவன் பின்னே ஓடுகிறாய்: விபசாரிகளோடு உறவு கொள்கிறாய்.
19. நீ வாய்திறந்தால் வெளிப்படுவது தீமையே: உன் நாவிலிருந்து புறப்படுவது வஞ்சகமே.
20. கூட்டத்தில் உட்கார்ந்து நீ பேசுவதெல்லாம் உன் சகோதரனுக்கெதிராக உன் சொந்த சகோதரனை நிந்தைக்குள்ளாக்குகிறாய்!
21. இப்படியெல்லாம் நீ செய்ய நான் வாளாவிருப்பதா? நானும் உன்னைப் போலென்று நினைத்தாயா? உன்னைக் கண்டித்து நீ செய்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறேன், பார்!
22. கடவுளை நினையாதவர்களே, நீங்கள் இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்கள் உயிரைப் பறிப்பேன்: என் கையில் வந்து விழும் போது உங்களைக் காப்பவர் யாரும் இரார்!
23. இறை புகழ்ச்சி என்னும் பலி இடுபவனே எனக்கு மதிப்புக் கொடுப்பவன்: நேர்மையோடு நடப்பவனுக்கு இறைவன் தரும் மீட்பைக் காட்டுவேன்'.