1. நம்பினேன், ஆண்டவரை நம்பினேன், அவர் என் பக்கமாய்க் குனிந்து, என் கூக்குரலைக் கேட்டருளினார்.
2. அழிவு தரும் குழியினின்றும் சதுப்பு நிலச் சேற்றினின்றும் அவர் என்னைத் தூக்கிவிட்டார்; உறுதியான பாறையின் மீது என் காலடிகளை நிறுத்தினார், நடக்க எனக்கு உறுதி தந்தார்.
3. புதியதோர் பாடலை, நம் இறைவனைப்¢ புகழும் பாடல் ஒன்றை என் நாவினின்று எழச் செய்தார்: பலரும் இதைப்பார்த்து அச்சம் கொள்வார்; ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.
4. தன் நம்பிக்கையெல்லாம் ஆண்டவர் மீது வைத்தவனே பேறு பெற்றவன்: சிலைகளை வழிபடுவோரைப் பின்பற்றாதவன், பொய்யானவற்றில் மனத்தைச் செலுத்தாதவன்- இவனே பேறு பெற்றவன்.
5. ஆண்டவரே, என் இறைவனே, வியத்தகு செயல்கள் பல நீர் செய்தீர்; எங்கள் பால் உமக்குள்ள எண்ணங்களில் உமக்கு நிகர் எவருமில்லை. அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில், அவை எண்ணிலடங்கா.
6. பலியும் காணிக்கையும் நீர் விரும்பவில்லை ஆனால் என் செவிகளை நீர் திறந்துவிட்டீர்: தகனப் பலியும் பாவம் போக்கும் பலிப்பொருளும் நீர் கேட்கவில்லை.
7. அப்போது நான் சொன்னது: "இதோ வருகிறேன், ஏட்டுச் சுருளில் என்னைக் குறித்து.
8. என் இறைவா, உம் திருவுளத்தின்படி நடப்பதே எனக்கின்பம் உம் திருச்சட்டத்தை என் உள்ளத்தில் கொண்டிருக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது".
9. மக்கட் பேரவையில் உம் நீதியை வெளிப்படுத்தினேன்: இதோ! நான் என் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே, இதை நீர் அறிவீர்.
10. உமது நீதியின் தன்மையை என் இதயத்துள் ஒளித்து வைக்கவில்லை; உமது சொல்லுறுதியைப் பற்றியும்,. உமது அருள் துணையைப் பற்றியும் வெளிப்படையாய்ப் பேசினேன். உமது அருளைப் பற்றியும் உமது வாக்குறுதியைப் பற்றியும் பேரவையில் பேசாமல் ஒளித்து வைக்கவில்லை.
11. நீரோ ஆண்டவரே, உமது இரக்கப் பெருக்கை எனக்குக் காட்ட மறக்காதேயும் உமது அருளும் உறுதி வாக்கும் என்னை என்றும் பாதுகாப்பனவாக.
12. எண்ணிக்கையிலடங்காத் தீமைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன நான் பார்த்தறிய முடியாத அளவுக்கு என் குற்றங்கள் என்னை வளைத்துக் கொண்டன, என் தலை மயிர்களைக் காட்டிலும் அவை மிகுதியானவை. என் நெஞ்சமோ அதனால் சோர்வடைந்து போயிற்று.
13. ஆண்டவரே, என்னை விடுவிக்க அருள் கூர்வீராக, ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.
14. என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் நாணி நிலை குலைவார்களாக, எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர் வெட்கத்தால் தலை குனிந்துப் பின்னடைவார்களாக.
15. ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.
16. உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட் துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி! என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.
17. நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்: இறைவன் என்மேல் அக்கறை கொண்டுள்ளார். எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே: ஆண்டவரே, தாமதியாதேயும்.