1. ஆண்டவரே என் ஒளி, ஆண்டவரே என் மீட்பு: நான் யாருக்கு அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் வாழ்வுக்கு அடைக்கலம், யாருக்கு நான் நடுங்கவேண்டும்?
2. என் பகைவர்களும் எதிரிகளுமாகிய தீயோர் என்னை விழுங்க வருவது போல் என்னைத் தாக்கும் போது, அவர்களே தடுமாறி விழுந்து போயினர்,
3. எனக்கெதிராய் அவர்கள் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் கலங்காது: எனக்கெதிராய்ப் போரெழுந்தாலும் நான் நம்பிக்கையோடிருப்பேன்.
4. ஆண்டவரிடம் நான் வேண்டுவது ஒன்றே, நான் விரும்புவதும் ஒன்றே: ஆண்டவருடைய இல்லத்தில் நான் வாழ்நாள் முழுவதும் குடியிருக்கவேண்டும்; ஆண்டவருடைய இனிமையை நான் சுவைக்கவேண்டும்; அவரது ஆலயத்தை நான் பார்க்கவேண்டும்.
5. கேடு வரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்: தம் கூடாரத்தின் உட்புறத்தில் என்னை ஒளித்து வைப்பார்; உயர்ந்ததொரு பாறையில் என்னைத்தூக்கி வைப்பார்.
6. இப்போது என்னைச் சூழ்ந்து நிற்கும் எதிரிகள் மேல் வெற்றி கொண்டவனாய்த் தலைநிமிர்ந்து நடப்பேன்; அவருடைய கூடாரத்தில் அக்களிப்பு ஆரவாரத்துடன் பலிகளைச் சமர்பிப்பேன்: ஆண்டவருக்கு இன்னிசை பாடுவேன், புகழ் இசைப்பேன்.
7. ஆண்டவரே, நானும்மை நோக்கி எழுப்பும் குரலைக் கேட்டருளும்: என் மீது அருள் கூரும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
8. என் உள்ளம் உம்மேடு உரையாடுகிறது; உம்மை நான் பார்க்க விரும்புகிறேன்: ஆண்டவரே, நீர் எனக்கு இன்முகம் காட்டவேண்டுமென விழைகிறேன்.
9. உம் முகத்தை எனக்கு மறைத்துக் கொள்ளாதேயும்: நீரே எனக்குத் துணை, என்னைத் தள்ளிவிடாதேயும்: என் மீட்பராகிய இறைவா, என்னைக் கைவிடாதேயும்.
10. என் தாயும் தந்தையும் கைவிட்டாலும், ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார்.
11. ஆண்டவரே, உம் வழியை எனக்குக் கற்பித்தருளும்: என் எதிரிகளின் பொருட்டு நேரிய வழியில் என்னை நடத்திச் செல்லும்.
12. என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை விட்டுவிடாதேயும்: ஏனெனில், பொய்ச்சாட்சி சொல்வோரும், கொடுமை செய்ய விரும்புவோரும் எனக்கெதிராய்க் கிளம்பினார்கள்.
13. நனோ வாழ்வோருடைய நாட்டில், ஆண்டவருடைய நலன்களைக் காண்போனென நம்புகிறேன்.
14. ஆண்டவரை எதிர்பார்த்து வல்லவனாயிரு: உன் உள்ளம் திடம் கொள்வதாக, ஆண்டவரை எதிர்பார்த்திரு.