1. துன்ப நாளில் ஆண்டவர் உன் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக: யாக்கோபின் இறைவனது திருப்பெயர் உன்னைக் காப்பதாக.
2. தம் திருத்தலத்தினின்று உனக்குத் துணை செய்வாராக: சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பாராக.
3. நீ ஒப்புக்கொடுக்கும் பலிகளை எல்லாம் நினைவு கூர்வாராக: நீ அர்ப்பணம் செய்யும் தகனப்பலி அவருக்கு உகந்ததாய் இருப்பதாக.
4. உன் இதயம் விரும்பியதை உனக்கு அருள்வாராக: உன் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5. உனக்குக் கிடைத்த வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக: நம் இறைவனின் பெயரால் வெற்றிக் கொடி நாட்டுவோம்; ஆண்டவர் உன் விண்ணப்பங்கள் எல்லாம் நிறைவுறச்செய்வாராக.
6. தாம் அபிஷுகம் செய்தவருக்கு ஆண்டவர் வெற்றி கிடைக்கச் செய்தார்: வெற்றி தரும் தமது வலக்கரத்தின் வன்மையால் தம் புனித வானகத்தினின்று அரசரின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தார்; இதை நான் அறிவேன்.
7. சிலர் தேர்ப்படையாலும், சிலர் குதிரைப் படையாலும் வலிமை பெறலாம்: நாமோ நம் ஆண்டவராகிய இறைவனின் திருப்பெயரால் வலிமை பெறுகிறோம்.
8. அவர்கள் தடுமாறி விழுந்தார்கள், அழிவுற்றார்கள்: நாமோ இன்றும் நிலையாய் இருக்கிறோம், வீழ்ச்சியுறவில்லை.
9. ஆண்டவரே, அரசருக்கு வெற்றியளித்தருளும்: உம்மைக் கூவி அழைக்கும்போது எங்களுக்குச் செவி சாய்த்தருளும்.