1. ஆண்டவரே, நீர் என்னைப் பரிசோதித்து அறிந்திருக்கிறீர்:
2. நான் அமர்வதும் எழுவதும், என் வாழ்க்கை முழுவதுமே நீர் அறிந்திருக்கிறீர்: என் நினைவுகள் எல்லாம் முன்பிருந்தே உமக்கு வெளிச்சம்.
3. நான் நடப்பதும் படுப்பதும் எல்லாமே நீர் அறிந்துள்ளீர்: நான் செல்லும் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தனவே.
4. என் வாயில் வார்த்தை உருவாகு முன்பே, நீர் எல்லாம் அறிந்திருக்கிறீர்.
5. எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்: உம் திருக்கரத்தை என் மேல் வைக்கிறீர்.
6. இத்தகைய அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது, உன்னதமானது: அதை நான் புரிந்துகொள்ள முடியாது.
7. உமது ஆவியை விட்டு, நான் எங்கே தொலைவில் போகக் கூடும்? உம்முடைய திருமுன்னிலையை விட்டு, நான் எங்கே ஒளியக்கூடும்?
8. நான் வானகத்துக்குப் பறந்து சென்றால், நீர் அங்கே இருக்கிறீர்! பாதாளத்துக்குச் சென்று படுத்துக் கொண்டாலும் அங்கேயும் இருக்கிறீர்!
9. நான் விடியற்காலையில் சிறகடித்துப் பறந்து சென்ற போதிலும், கடல்களின் கடையெல்லைகளில் வாழ்ந்தாலும்.
10. அங்கேயும் உமது கரம் என்னை நடத்திச் செல்லும்: உமது வலக்கரம் என்னைத் தாங்கி நிற்கும்.
11. இருளாவது என்னை மூடிக்கொள்ளாதோ: ஒளிபோல, இரவும் என்னைச் சூழ்ந்துகொள்ளாதோ' என்று நான் விரும்பினாலும்;
12. இருள் கூட உமக்கு இருட்டாயில்லை, இரவும் உமக்குப் பகலைப் போல வெளிச்சமாயிருக்கிறது: இருளும் உமக்கு ஒளி போலிருக்கும்.
13. ஏனெனில், நீரே என் உள் உறுப்புகளை உண்டாக்கினீர், என் தாயின் கருவில் என்னை உருவாக்கியவர் நீரே.
14. இவ்வளவு வியப்புக்குரிய விதமாய் நீர் என்னைப் படைத்ததை நினைத்து நான் உம்மைப் போற்றுகிறேன்; உம்முடைய செயல்கள் அதிசயமுள்ளவை என்று உம்மைப் புகழ்கிறேன்: என்னை முற்றிலும் நீர் நன்கறிவீர்.
15. என் உடலின் அமைப்பு உமக்குத் தெரியாததன்று; மறைவான விதத்தில் நான் உருவானதையும், பூமியின் ஆழத்தில் நான் உருப்பெற்றதையும் நீர் தெரிந்திருந்தீர்.
16. என் செயல்களை உம் கண்கள் கண்டன, உமது நூலில் எல்லாம் எழுதப்பட்டுள்ளன: எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்தில் நீர் எனக்கு நாட்களைக் குறித்தீர்.
17. இறைவா, உம்முடைய நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!
18. உம் நினைவுகளை அளவிட முற்பட்டால் அவை கடல் மணலிலும் மிகுதியானவையாயுள்ளன. அவற்றை எண்ணி முடித்தாலும் இன்னும் வியப்பில் ஆழ்ந்தவனாய்த் தான் உம் திருமுன் நிற்கிறேன்.
19. இறைவா, நீர் தீயவனை ஒழித்துவிட்டால் எவ்வளவு நலம்! பழிகாரர் உம்மிடமிருந்து ஒழிவார்களாக!
20. ஏனெனில் அவர்கள் வஞ்சகமுடன் உம்மை எதிர்க்கிறார்கள்: உம் எதிரிகள் சதி செய்து தலை தூக்குகிறார்கள்.
21. ஆண்டவரே, உம்மைப் பகைக்கிறவர்களை நானும் பகைக்கிறேன் அன்றோ? உம்மை எதிர்ப்பவர்களை நானும் வெறுக்கிறேன் அன்றோ?
22. முழுமனத்துடன் நான் அவர்களை வெறுக்கிறேன்: அவர்கள் எனக்கு எதிரிகளாயினர்.
23. இறைவா, நீர் என் உள்ளத்தைப் பரிசோதித்து அறியும்: உள் உணர்வுகளை அறிந்தவராய் என்னைச் சோதித்துப் பாரும்.
24. தீய வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்: முன்னோர் காட்டிய வழியில் என்னை நடத்தியருளும்.