1. அல்லேலூயா! இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய போது, கொடிய மக்களிடையினின்று யாக்கோபின் இனத்தார் வெளியேறிய போது,
2. யூதா குலம் அவருக்குத் திருத்தலமாயிற்று: இஸ்ராயேல் அவரது ஆட்சிக்கு உட்பட்டது.
3. கடல் அவரைக் கண்டது; கண்டு பின்வாங்கியது: யோர்தான் திசை திரும்பி ஓடியது.
4. மலைகள் செம்மறிகள் எனத் துள்ளின; குன்றுகள் ஆட்டுக் குட்டிகள் போலக் குதித்தன.
5. கடலே, உனக்கென்ன நடந்தது? ஏன் பின்வாங்கினாய்? யோர்தானே, உன்கென்ன ஆயிற்று? ஏன் திசை திரும்பிச் சென்றாய்?
6. மலைகளே, நீங்கள் ஏன் செம்மறிகள் போலத் துள்ளினீர்கள்? குன்றுகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் குட்டிகளெனக் குதித்தீர்கள்?
7. மாநிலமே, ஆண்டவர் திருமுன் நடுநடுங்கு: யாக்கோபின் இறைவனின் திருமுன் நடுக்கமுறு!
8. கற்பாறையை நீர்க் குளமாக்க வல்லவர் அவர்: பாறையை நீரூற்றாக ஆக்க வல்லவர் அவர்.