1. மக்களே, (உங்கள்) தந்தையின் போதனையைக் கேளுங்கள், விவேகத்தை அறியும்படி கவனமாய் இருங்கள்.
2. நான் உங்களுக்கு நற்கொடையைக் கொடுப்பேன். என் சட்டத்தைக் கைநெகிழாதீர்கள்.
3. ஏனென்றால், நான் என் தந்தைக்கு ஓர் இளைய மகனாகவும், என் தாயின் முன்பாக ஒரே புதல்வனாகவும் இருந்தேன்.
4. அவர் எனக்குப் படிப்பித்து உரைத்ததாவது: உன் இதயம் என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதாக. என் கட்டளைகளைக் கைக் கொண்டு ஒழுகு. அப்படிச் செய்தால்தான் வாழ்வு பெறுவாய்.
5. ஞானமுள்ளவனும் விவேகமுள்ளவனுமாய் இரு. என் வாயின் வார்த்தைகளை மறக்கவும் வேண்டாம்; விட்டு விலகவும் வேண்டாம்.
6. அவற்றைக் கைநெகிழாதே; அவை உன்னைக் காக்கும். அவற்றை நேசி; அவை உன்னை ஆதரிக்கும்.
7. ஞானத்தைத் தேடுவதே ஞானத்தின் தொடக்கமாம். உன் சொத்து அனைத்தையும் காட்டிலும் விவேகத்தையே அடைய முயற்சி செய்.
8. நீ அதைப் பற்றிக்கொள்; அது உன்னை உயர்த்தும். நீ அதைத் தழுவிக்கொண்டாயாகில், அதனால் மகிமை பெறுவாய்.
9. அது உன் தலைக்கு மிக்க அழகைத் தந்து, மகிமை பொருந்திய முடியால் உன்னைக் காக்கும்.
10. கேள், என் மகனே, உன் வாழ்நாள் மிகும்படியாக என் வார்த்தைகளைக் கைக்கொள்.
11. நான் உனக்கு ஞானத்தின் நெறியைக் காண்பிப்பேன்; நேர்மையின் நெறிகளில் உன்னை நடத்துவேன்.
12. அவற்றுள் நீ நுழைந்தால், உன் அடிகள் நெருக்குறுவன அல்ல; ஓடினாலும் உனக்கு இடறல் இராது.
13. போதகத்தைக் கடைப்பிடி. அதை விட்டுவிடாதே. அதுவே உன் வாழ்வாய் இருப்பதனால் அதைக் கைவிடாதே.
14. அக்கிரமிகளின் நெறிகளில் மகிழ்வோடு பின்தொடராதே. தீயோரின் வழியில் விரும்பிப் போகாதே.
15. அதனின்று ஓடி விலகு. அதன் வழியாயும் கடந்து செல்லாதே. அதைவிட்டு விலகு.
16. தீங்கு செய்தால் அல்லாமல் அவர்கள் தூங்குவதில்லை. ஒருவனை வஞ்சியாவிடில் அவர்களுக்கு உறக்கம் வராது.
17. அவர்கள் அக்கிரமமாகிய அப்பத்தை உண்டு, அநீதமாகிய பழச்சாற்றைக் குடிக்கின்றனர்.
18. நீதிமான்களுடைய நெறியோ ஒளி வீசும் வெளிச்சம்போல் உதித்து, நாள் முழுவதும் வளர்ந்தே துலங்குகின்றது.
19. அக்கிரமிகளின் வழி இருளுள்ளது. தாங்கள் வீழ்ந்து மடிவது எங்கேயென்று அவர்கள் அறியார்கள்.
20. என் மகனே, என் வார்த்தைகளைச் செவியுற்றுக் கேள். என் வாய் மொழிகளுக்கும் செவிகொடு.
21. அவை உன் கண்களினின்று அகலாதிருக்கடவன. உன் இதயத்திற்குள்ளேயே அவற்றைக் கட்டிக் காத்து வைத்திரு.
22. ஏனென்றால், அவற்றைக் கண்டுபிடிப்பவனுக்கு வாழ்வும், அவனது உடல் முழுவதற்கும் நலமாய் இருக்கும்.
23. உன் இதயத்தை எவ்வித எச்சரிக்கையுடனும் பாதுகாத்துக் கொள்; ஏனென்றால், வாழ்வே அதனின்றுதான் புறப்படுகின்றது.
24. அடாத வாயை உன்னிடமிருந்து அகற்று. அவதூறு பேசும் உதடுகளும் உன்னைவிட்டு அகல இருக்கக்கடவன.
25. உன் கண்கள் நேரானவற்றை நோக்கக்கடவன. உன் கண் இமைகளும் உன் அடிச் சுவடுகளுக்குமுன் செல்லக்கடவன.
26. உன் கால்களுக்குப் பாதையைச் செவ்வையாக்கு; உன் வழிகளெல்லாம் நிலைப்படுத்தப்படும்.
27. வலத்திலும் இடத்திலும் திரும்பாதே. உன் காலையும் தீமையினின்று விலக்கு. ஏனென்றால், வலத்தில் இருக்கின்ற வழிகளை ஆண்டவர் அறிகிறார்; இடத்தில் இருக்கின்றவையோ பொல்லாதவைகளாய் இருக்கின்றன. ஆனால், அவர் உன் நடைகளைச் செவ்வையாக்குவார்; உன்னைச் சமாதானத்தில் நடத்துவார்.