1. கோடைக்காலத்தில் பனியும் அறுவடைக் காலத்தில் மழையும் எப்படியோ, அப்படியே பேதைக்கு மகிமை தகாது.
2. வேறிடம் போகப் பறக்கும் பறவையும், விருப்பப்படி பறக்கும் அடைக்கலானும் எப்படியோ, அப்படியே வீணாய்ச் சொல்லப்பட்ட சாபம் ஒருவன்மேலும் விழாது.
3. குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மதியீனரின் முதுக்குத் தடியும் (தக்கன).
4. மதிகெட்டவனுக்குச் சமானமாய் நீயும் ஆகாதபடி அவனுடைய மதிகேட்டிற்கு ஏற்க அவனுக்கு மறுமொழி சொல்லாதே.
5. பேதை தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றாதவண்ணம், அவனுடைய பேதமைக்கு ஏற்க அவனுக்கு மறுமொழி சொல்.
6. மதியற்ற தூதன் வழியாய்த் தன் வார்த்தைகளைச் சொல்லி அனுப்புகிறவன், காலில்லா முடவனும் அக்கிரமத்தைக் குடிக்கிறவனுமாம்.
7. முடவனுக்கு அழகான கால்கள் இருந்தாலும் எப்படி வீணோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
8. புதன் விண்கோள் நோக்கிக்கல் எறிகிறவனைப்போலாம் பேதையை மதிப்பவன்.
9. குடிகாரனின் கையில் தைத்த முள் எப்படியோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
10. நியாயத்தீர்ப்பு வழக்குகளை முடிக்கின்றதுபோல் மதியீனனுக்கு மௌனத்தைக் காட்டுகிறவன் கோபவெறிகளை அமர்த்துகிறான்.
11. மதியீனத்தை மீண்டும் செய்யும் அவிவேகி, தான் கக்கினதற்கு மீண்டும் வரும் நாய்க்கு ஒப்பாவான்.
12. தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றும் மனிதனைக் கண்டிருக்கிறாயோ ? இவனைக்காட்டிலும் மதியீனனே அதிக நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்.
13. வழியில் ஆண் சிங்கமும் பாதைகளில் பெண் சிங்கமும் இருக்கின்றன என்பான் சோம்பேறி.
14. கதவு தன் முளையாணியில் சுழல்வது எப்படியோ, அப்படியாம் சோம்பேறியும் தன் கட்டிலிலே.
15. சோம்பேறி கிண்ணத்தில் தன் கையை வைப்பான்; (ஆனால்) தன் வாய்வரையிலும் அதைத் தூக்கவும் தொல்லைப்படுவான்.
16. நியாயங்களைப் பேசுகிற ஏழு ஆடவரைக்காட்டிலும் சோம்பேறி தனக்குத்தானே அதிக ஞானியாய்த் தோன்றுகிறான்.
17. பொறுமையற்ற வழிப்போக்கன், தன்னைச் சாராத சண்டையில் கலக்கிறவன் (ஆகியோர்) நாயைக் காதால் பிடிக்கிறவனுக்கு ஒப்பாவர்.
18. அம்புகளையும் ஈட்டியையும் பாய்ச்சுகிறவன் எப்படிச் சாவுக்குரிய குற்றவாளியாய் இருக்கிறானோ,
19. அப்படியே தன் நண்பனுக்குக் கபடமாய்த் தீங்கு செய்கிற மனிதனும். அவன் அகப்பட்டுக்கொள்கையில்: விளையாட்டுக்குச் செய்தேன் என்கிறான்.
20. விறகு குறைந்துபோனால் நெருப்பும் அவியும். கோள் சொல்லுகிறவனை அகற்றி விட்டால் சச்சரவுகளும் அமரும்.
21. கரி தணலுக்கும் விறகு நெருப்புக்கும் எப்படியோ, அப்படியே கோபியான மனிதன் சண்டைகளை மூட்டுகிறான்.
22. புறங்கூறுபவனுடைய வார்த்தைகள் நேர்மையானவைபோலத் தோன்றும். ஆனால் (உண்மையில்) இவை மனத்துள்ளே சென்று வாதிக்கும்.
23. மண்பாண்டத்தை அசுத்த வெள்ளியால் அலங்கரிக்க விரும்புதல் எப்படியோ, அப்படியே மிகவும் கெட்ட இதயத்துடன்கூடிய அகந்தையுள்ள உதடுகளும்.
24. இதயத்தில் வஞ்சனைகளைக் கருதியிருக்கையில் பகைவன் தன் வார்த்தையால் தானே அறியப்படுகிறான்.
25. அவன் தன் குரலைத் தாழ்த்தினாலும் அவனை நீ நம்பாதே. ஏனென்றால், ஏழு தீய குணங்களும் அவன் இதயத்தில் இருக்கின்றன.
26. வஞ்சகமாய்ப் பகையை மறைக்கிறவனுடைய அக்கிரமம் சபையில் வெளியாகிவிடும்.
27. குழியைத் தோண்டுகிறவன் தானே அதில் விழுவான். கல்லைப் புரட்டுகிறவனிடமே அது திரும்பிவரும்.
28. பொய்மையுள்ள நாவு உண்மையை நேசிப்பதில்லை. இச்சகம் பேசும் வாயோ கேடுகளை உண்டாக்குகிறது.