1. தன் உதடுகளைப் புரட்டுகிற மதிகெட்ட செல்வனைக்காட்டிலும், தன் நேர்மையில் நிலை பெறுகிற வறியவன் அதிக நல்லவனாம்.
2. ஞான அறிவில்லாத இடத்தில் நன்மை இல்லை. வேகமாய் நடக்கிறவனுடைய கால்கள் இடறும்.
3. மனிதனுடைய அறியாமை அவனைத் தடுமாறச் செய்கிறது. அவன் கடவுளுக்கு விரோதமாயும் வெறுப்பிற்குரியவனாயும் இருக்கிறான்.
4. செல்வம் மிகுதியான நண்பர்களைச் சேர்க்கும். ஏழையின் சுற்றத்தாரோ அவனைவிட்டுப் பிரிந்து போகிறார்கள்.
5. பொய்ச் சாட்சி சொல்லுகிறவன் தண்டனை அடையாமல் இரான். தவறுகளைப் பேசுகிறவனும் தப்பிக்கொள்ளான்.
6. வல்லவனை வணங்குபவர் பலர். நன்கொடை கொடுப்பவனுக்கு நண்பர் உண்டு.
7. வறியவனை அவன் சகோதரரே பகைக்கிறார்கள். அதுவுமின்றி, அவன் நண்பரும் அவனை விட்டுத் தூர அகன்று செல்வார்கள். அவன் ஆறுதலான வார்த்தையைத் தேடுவான்; ஆனால், ஒன்றும் அகப்படாது.
8. அறிவாளி தன் ஆன்மாவை நேசிக்கிறான். விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.
9. பொய்ச்சாட்சிக்காரன் தண்டனை அடையாமல் இரான். தவறுகளைப் பேசுகிறவனும் அழிவான்.
10. மதிகெட்டவன் இன்பம் அடைதலும், அடிமை அரசரை நடத்துதலும் பொருந்தா.
11. மனிதனின் அறிவு அவன் பொறுமையால் விளங்கும். அக்கிரமங்களை விட்டொழிப்பதே அவனுடைய மகிமையாகும்.
12. சிங்கத்தின் முழக்கம் எப்படியோ அப்படியே அரசனின் கோபம். புல்லின்மேல் பனி நீர் எப்படியோ அப்படியே அவனுடைய இரக்கம்.
13. தந்தையின் துன்பமாம் மதிகெட்ட மக்கள். இடைவிடாமல் ஒழுகுகின்ற கூரை போலாம் சச்சரவுக்காரியான மனைவி.
14. வீடும் செல்வமும் தாய் தந்தையரால் தரப்படுகின்றன. ஆனால், தக்க விவேகமுள்ள மனைவி ஆண்டவராலேயே (தரப்படுகிறாள்).
15. சோம்பல் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குகிறது. உரோசமற்ற மனிதன் பசியால் வருந்துவான்.
16. கட்டளையைக் காக்கிறவன் தன் ஆன்மாவைக் காக்கிறான். ஆனால், தன் வழியை அசட்டை செய்கிறவன் வதைக்கப்படுவான்.
17. ஏழைக்கு இரங்குகிறவன் ஆண்டவருக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அவரும் அவனுக்குக் கைம்மாறளிப்பார்.
18. உன் மகன் (திருந்துவான்) என்னும் நம்பிக்கையுடன் அவனைப் படிப்பி. ஆனால், அவனுக்குச் சாவு வரும்படி எதையும் செய்யத் தீர்மானியாதே.
19. பொறுமையற்றவன் நட்டமடைவான். அவனை நீ ஒரு முறை மீட்டுக் காத்தாலும் மீண்டும் அவன் நட்டமடைவான்.
20. உன் கடைசி நாள் வரையிலும் ஞானியாய் இருக்கும்படியாக ஆலோசனை கேள்; அறிவுரையையும் கைக்கொள்.
21. மனிதனின் இதயத்தில் சிந்தனைகள் பலவாம். ஆண்டவர் திருவுளமோ நிலைபெற்றிருக்கும்.
22. எளிய மனிதன் இரக்கமுள்ளவனாம். பொய்யனைவிட வறியவன் உத்தமனாம்.
23. தெய்வ பயம் வாழ்வின் வழி. அது யாதொரு தீமையும் நேரிடாமற் காத்து எப்பொழுதும் நிறைவுகொள்ளச் செய்யும்.
24. சோம்பேறி தன் கையை உண்கலத்தில் மறைக்கிறான்; அதைத் தன் வாய்க்குங்கூடக் கொண்டுபோகான்.
25. தீயவன் கசையடி படுகையில் மதியீனன் அதிக அறிவாளியாவான். ஞானியைக் கண்டித்தாலோ போதனையைக் கண்டுபிடிப்பான்.
26. தன் தந்தையை வருத்தித் தன் தாயைத் துரத்துகிறவன் நிபந்தனைக்குரியவனும் கேடுற்றவனுமாய் இருக்கிறான்.
27. போதகத்தைக் கேட்க, மகனே, நீ பின்வாங்காதே; ஞானத்தின் வார்த்தைகளையும் அறியாமல் இராதே.
28. அநியாயச் சாட்சிக்காரன் நீதியைப் புறக்கணிக்கிறான். அக்கிரமிகளின் வாயோ அநீதத்தை விழுங்குகின்றது.
29. கேலி செய்வோருக்கு நீதித் தீர்வைகளும், மதிகெட்டோரின் உடம்புகளுக்கு அடிக்கிற சம்மட்டிகளும் தயாராக்கப்பட்டிருக்கின்றன.