1. ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான். மதிகெட்ட மகனோ தன் தாய்க்குத் துன்பம் வருவிக்கிறான்.
2. அநியாயமாய்ச் சேர்த்த செல்வங்கள் யாதொரு பயனையுந் தராது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.
3. நீதிமானின் ஆன்மாவை ஆண்டவர் பசியால் வருத்தார். தீயோரின் கண்ணிகளை அவர் அழித்துவிடுவார்.
4. சோம்பேறியின் கை வறுமையை உண்டாக்கினது. வல்லவரின் கையோ செல்வத்தைச் சேகரிக்கிறது. பொய்யானதை ஆதரவாகக்கொள்பவன் காற்றைத் தின்கிறவனைப்போலும், பறக்கும் பறவைகளைப் பிடிக்க முயல்கிறவனைப்போலும் ஏமாறுவான்.
5. அறுவடைக்காலத்தில் சேகரித்து வைக்கும் மகன் ஞானமுள்ளவன். ஆனால், கோடைக்காலத்தில் குறட்டைவிட்டு உறங்குகிற மகன் வெட்கத்தைத் தேடிக்கொள்வான்.
6. நீதிமானின் தலைமேல் ஆண்டவருடைய ஆசி தங்கும். அக்கிரமிகளின் வாயில் அநீதி மறைந்திருக்கிறது.
7. நீதிமானின் பெயர் புகழப்படும். அக்கிரமிகளின் பெயரோ இகழப்படும்.
8. இதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளைக் கைக்கொள்கிறான். மதிகெட்டவனோ வாயால் அடிபடுகிறான்.
9. நேர்மையாய் நடக்கிறவன் நம்பிக்கையாய் நடக்கிறான். தன் வழிகளைக் கெடுக்கிறவனோ வெளிப்படுத்தப்படுவான்.
10. கண்சாடை காட்டுகிறவன் துன்பத்தைக் கொடுப்பான். மதியீனனோ வாயால் அடிபடுவான்.
11. நீதிமானின் வாய் வாழ்வின் ஊற்று. அக்கிரமிகளின் வாயில் அநீதி மறைந்திருக்கிறது.
12. பகை சச்சரவுகளை எழுப்புகின்றது. நட்போ எல்லாப் பிழைகளையும் மூடுகின்றது.
13. ஞானியின் உதடுகளில் ஞானம் காணப்படும். இதயமற்ற மதியீனரின் முதுகிலோ பிரம்பு காணப்படும்.
14. ஞானிகள் தங்கள் மேலான அறிவைப் பாராட்டாமல் இருக்கிறார்கள். மதியீனனின் வாயோ அவமானத்திற்கு அடுத்திருக்கின்றது.
15. செல்வனின் பொருள் அவனுக்கு அரணுள்ள நகரமாம். ஏழையின் வறுமை அவன் அஞ்சுவதற்குக் காராணமாய் இருக்கும்.
16. நீதிமானின் செய்கை வாழ்விற்கு வழியாம். அக்கிரமியின் வினைகளோ பாவத்திற்கு வழியாம்.
17. அறிவுரையை அனுசரிப்பவன் வாழ்வுப் பாதையிலே நடக்கிறான். கண்டனங்களைக் கைநெகிழ்பவனோ அலைந்து திரிகிறான்.
18. பொய்யான உதடுகளில் பகை மறைந்திருக்கின்றது. நிந்தையைச் சொல்கிறவன் மதி கெட்டவன்.
19. நீண்ட பேச்சில் பாவம் இராமற் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ பெரிய விவேகி.
20. நீதிமானின் நாவு தூய்மைப்படுத்தப்பெற்ற வெள்ளியாம். அக்கிரமிகளின் இதயமோ ஒரு காசும் பெறாது.
21. நீதிமானின் உதடுகள் பலரைப் படிப்பிக்கின்றன. ஆனால், கற்றறியாதார் இதய அறியாமையால் இறப்பார்கள்.
22. கடவுளின் ஆசியால் மனிதர் பொருள்வளமுள்ளவராவர். துன்பமும் அவர்களைச் சேராது.
23. மதிக்கெட்டவன் விளையாட்டுத்தனமாய் அக்கிரமத்தைச் செய்கிறான். ஆனால் ஞானத்தால் மனிதன் திறமையுள்ளவனாவான்.
24. அக்கிரமி எதற்கு அஞ்சுகிறானோ அதுவே அவனை வந்தடையும். நீதிமான்களோ தாங்கள் நாடிய நன்மைகளை அடைவார்கள்.
25. கடந்து போகிற புயலைப்போல் அக்கிரமி (நிலையாய்) இரான். நீதிமானோ நித்திய அடித்தளம் போல் (இருப்பான்).
26. பற்களுக்குப் புளிப்பும் கண்களுக்குப் புகையும் எப்படியோ, அப்படியே சோம்பேறி தன்னை அனுப்பினவர்களுக்கு அமைவான்.
27. தெய்வ பயம் நாட்களை நீடிக்கச் செய்யும். அக்கிரமிகளுக்கு ஆண்டுகளும் குறைக்கப்படும்.
28. நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சி தரும். அக்கிரமிகளின் எண்ணமோ நாசமடையும்.
29. ஆண்டவருடைய வழி நேர்மையாளனுக்குத் திடனாகவும், தீமையைச் செய்கின்றவர்களுக்குத் திகிலாகவும் அமையும்.
30. நீதிமான் நித்தியத்துக்கும் நிலைப்பெறுவான். அக்கிரமிகளோ பூமியின்மேல் தங்கமாட்டார்கள்.
31. நீதிமானின் வாய் ஞானத்தைப் பிறப்பிக்கும். தீயோரின் நாவு நாசமடையும்.
32. நீதிமானின் உதடுகள் விருப்பமானவற்றையும், அக்கிரமிகளின் வாய் பொல்லாதவற்றையும் கவனிக்கின்றன.