1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஆணாயினும் பெண்ணாயினும் தங்கள் ஆன்மீக நன்மையை முன்னிட்டுத் தங்களை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும்படி விரதம் பூண விரும்பினால்,
3. அவர்கள் கொடிமுந்திரிப் பழச் சாற்றையும், மற்ற மதுபானத்தையும் விலக்கக்கடவார்கள். அன்றியும் கொடிமுந்திரிப் பழச்சாற்றினால் செய்யப்பட்ட காடியையும், மற்றும் போதைப் பொருட்களையும், கொடிமுந்திரிப் பழங்களைப் பிழிந்து செய்த எவ்விதப் பானத்தையும் பருகாமலும், கொடிமுந்திரிப் பழங்களையும் கொடிமுந்திரிப் பழ வற்றல்களையும் உண்ணாமலும்,
4. தாங்கள் தங்களை நேர்ந்து, கொண்டு ஆண்டவருக்குக் காணிக்கையாய் இருக்கும் நாளெல்லாம் கொடிமுந்திரிப்பழ முதல் பழத்திலுள்ள விதைவரையிலும், செடியினின்று உண்டாகிய யாதொன்றையும் அவர்கள் உண்ணலாகாது.
5. நசரேயன் ஆண்டவருக்குத் தன்னை நேர்ந்து கொண்டுள்ள விரத நாளெல்லாம் நிறைவெய்து முன்னே நாவிதன் கத்தி அவன் தலையின் மேல் படலாகாது. அவன் புனிதனாய் இருந்து, தன் தலைமயிரை வளர விடக்கடவான்.
6. தன் நேர்ச்சையின் எல்லா நாட்களிலும் பிணம் இருக்கும் இடத்திற்கு அவன் போகலாகாது.
7. இறந்தவர் தன் தந்தையானாலும் சகோதர சகோதரியானாலும், அவர்களுடைய இழவைப்பற்றி முதலாய் அவன் தன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. ஏனென்றால், அவன் கடவுளுக்குத் தன்னை நேர்ந்து கொண்ட அந்த விரதம் அவன் தலைமேல் இருக்கின்றது.
8. அவன்தன் விரத நாளெல்லாம் ஆண்டவருக்குப் புனிதனாக இருப்பான்.
9. ஆனால், யாரேனும் திடீரென அவன் முன்னிலையில் இறந்து விட்டால், நசரேய விரதத்தைக் கொண்டுள்ள அவனது தலை தீட்டுப்பட்டதனால், அவன் தன் சுத்திகர நாளிலும் ஏழாம் நாளிலும் தன் தலைமயிரை (இரு முறை) சிரைத்துக் கொண்டு,
10. எட்டாம் நாளில் சாட்சிய உடன்படிக்கைக் கூடாரவாயிலேயே இரண்டு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளைக் குருவினிடம் கொண்டு வருவான்.
11. குரு ஒன்றைப் பாவ நிவாரணப் பலியாகவும், மற்றொன்றை முழுத்தகனப் பலியாகவும் படைத்த பிறகு, பிணத்தினால் அவனுக்குண்டான தீட்டைப்பற்றி மன்றாடி அன்றுதானே அவன் தலையைப் பரிசுத்தப் படுத்துவார்.
12. அதுவுமின்றி, அவன் திரும்பவும் தன் விரத நாட்களை ஆண்டவருக்கு நேர்ச்சை செய்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைப் பாவ நிவாரணப் பலியாக ஒப்புக் கொடுப்பான். அவ்வாறு செய்தும் அவனுடைய விரதம் தீட்டுப்பட்டுப் போனதனால் முந்திய நாட்கள் வீணாய்ப் போயின.
13. நேர்ச்சை பற்றிய சட்டம் இதுவே: அவனது இந்த விரத நாட்கள் நிறைவெய்திய பின்பு, (குரு) அவனை உடன்படிக்கைக் கூடார வாயிலண்டை கூட்டிக்கொண்டு வந்து,
14. அவனுடைய காணிக்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பார். அதாவது: முழுத் தகனப் பலிக்காகப் பழுதில்லாத ஒரு வயதுள்ள ஓர் ஆட்டுக் குட்டியையும், பாவநிவாரணப் பலிக்காக ஒரு வயதுள்ள பழுதற்ற ஓர் ஆட்டையும், சமாதானப் பலிக்காகப் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயையும்,
15. ஒரு கூடையிலே எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளியாத அடைகளையும் அவைகளுக்கடுத்த பான போசனப் பலிகளையும் கொண்டுவரக் கடவான்.
16. இவற்றை யெல்லாம் குரு எடுத்து ஆண்டவருடைய முன்னிலையில் வைத்து, பாவநிவாரணப் பலியையும் முழுத் தகனப்பலியையும் செலுத்துவார்.
17. ஆனால், ஆட்டுக்கிடாயைச் சமாதானப் பலியாகக் கொன்று போடுவதோடு, புளியாதவற்றைக் கொண்டுள்ள கூடையையும், வழக்கமாய்ச் செலுத்த வேண்டிய பானப் பொருட்களையும் படைக்கக்கடவார்.
18. அப்பொழுது உடன்படிக்கைக் கூடார வாயிலில் நசரேயனது நேர்ச்சைத் தலைமயிர் சிறைக்கப்படும். குரு இந்தத் தலைமயிரை எடுத்து, சமாதானப் பலியின் கீழேயுள்ள நெருப்பிலே போடுவார்.
19. பிறகு வேக வைக்கப்பட்ட கிடாயின் முன் தொடைகளில் ஒன்றையும், கூடையிலுள்ள புளியாத ஓர் அப்பத்தையும், புளியாத ஓர் அடையையும் எடுத்து மொத்தமாய் நசரேயனுடைய உள்ளங்கையிலே வைத்து,
20. அவற்றை மறுபடியும் அவன் கையிலிருந்து வாங்கி ஆண்டவர் முன்னிலையில் உயர்த்திக் காட்டுவார். காணிக்கையாய் கொடுக்கப்பட்ட மேற்கண்ட பொருட்களும், முன்பே கட்டளைப்படி பிரிக்கப்பட்ட மார்புப்பாகமும், முன் தொடையும் குருவைச் சேரும். இவையெல்லாம் நிறைவேறிய பின் நசரேயன் கொடி முந்திரிப் பழச் சாற்றைக் குடிக்கலாம்.
21. தன்னை ஆண்டவருக்குக் காணிக்கையாய் நேர்ந்து கொண்ட நாளில், தன்னால் இயன்றதைத் தவிர நசரேயன் ஒப்புக் கொடுக்க வேண்டிய காணிக்கை பற்றிய சட்டம் இதுவே. அவன் தன் ஆன்மீக நன்மைக்கும் புண்ணியத் தேர்ச்சிக்கும் என்னென்ன நேர்ந்து கொண்டிருப்பானோ அவ்விதமே செய்வான் என்று ஆண்டவர் அருளினார்.
22. பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
23. நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் சொல்ல வேண்டியது என்னவென்றால்: இஸ்ராயேல் மக்களுக்கு ஆசிர் அளிக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டியதாவது:
24. ஆண்டவர் உனக்கு ஆசீர் அளித்துக் காப்பாற்றுவாராக.
25. ஆண்டவர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து, உன்மேல் இரக்கமாய் இருப்பாராக.
26. ஆண்டவர் உன் பக்கம் தம் திருமுகத்தைத் திருப்பி, உனக்குச் சமாதானம் அருள்வாராக என்பதாம்.
27. இப்படி அவர்கள் இஸ்ராயேல் மக்கள் மீது நம்முடைய பெயரைக் கூறி வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசீர் அளிப்போம் என்றருளினார்.