1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் கானான் நாட்டில் புகப்போகிறீர்கள். அது உங்களுக்குத் திருவுளச் சீட்டுப்படி உரிமையாய்க் கொடுக்கப்பட்ட பின்பு அதன் எல்லைகள் பின் வருமாறு:
3. உங்கள் தென்புறம் ஏதோமுக்கு அண்மையில் இருக்கிற சின் என்னும் பாலைவனம் தொடங்கிக் கிழக்கில் இருக்கிற உவர்க்கடல் வரையிலுமாம்.
4. அந்த எல்லைகள் தெற்கிலுள்ள தேள் என்னும் மேட்டைச்சுற்றிச் சென்னாவழியே போய்க் காதேஸ்பர்னே வரையிலும் பரந்து சென்ற பிற்பாடு, அங்கிருந்து எல்லையூர்களின் வழியாய் ஆதாருக்குப்போய், அங்கிருந்து அசேமொனா வரையிலும் சென்று, தென்புறத்தை முழுவதும் சூழும்.
5. அசேமொனாவிலிருந்து எகிப்தின் நதிவரையிலும் சுற்றிப்போய்ப் பெருங்கடலின் கரையைச் சேரும்.
6. மேற்றிசையில் பெருங்கடலே உங்களுக்கு எல்லையாம். அது பெருங்கடலோடு தொடங்கி, பெருங்கடலோடு முடியும்.
7. வட திசையிலோ எல்லைகள் பெருங்கடல் தொடங்கி மிக உயரமான மலைகள் வரையிலும் போய்,
8. அங்கிருந்து ஏமாத்தைத் தொட்டுச் சேதாதாவில் போய்ச்சேரும்.
9. அவ்விடத்திலிருந்து எல்லைவழியாக ஜெப்பிறோனாவுக்கும் ஏனானுக்கும் போய்ச்சேரும்.
10. கீழ்த்திசையில் எல்லை, ஏனான் தொடங்கிச் சேப்பமா வரைக்கும் பரவும்.
11. சேப்பமாவிலிருந்து எல்லை தப்னீம் ஊருணிக்கு எதிரிலிருக்கும் ரெபிலாவுக்குப் போய்க் கீழ்ப்புறத்திற்கு எதிர்முகமாயுள்ள கெனெரேத் கடலை அணுகி,
12. யோர்தான் வரையில் பரவி உவர்க்கடலில் முடியும். இந்தச் சுற்றெல்லைகளுக்கு உள்ளடங்கிய நாடே உங்களுக்கு உரியது என்றருளினார்.
13. ஆகையால் மோயீசன் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் திருவுளச் சீட்டுப்போட்டு தத்தமக்கு விழுந்தபடி உரிமையாக்கிக் கொள்ள வேண்டிய நாடும், ஆண்டவருடைய கட்டளையின்படியே ஒன்பது கோத்திரத்தாருக்கும் பாதிக் கோத்திரத்தாருக்கும் பங்கிட வேண்டிய நாடும் அதுவே.
14. ஏனென்றால் தங்கள் தங்கள் தந்தையருடைய கோத்திரங்களின்படி ரூபன் கோத்திரத்தாரும் காத்தின் கோத்திரத்தாரும் மனாசேயின் கோத்திரத்தாரில் பாதிப்பேரும் ஆக,
15. இரண்டரைக் கோத்திரத்தார் எரிக்கோவின் அருகே கீழ்த்திசையிலுள்ள யோர்தான் நதிக்கு இப்புறத்திலே தங்கள் தங்கள் உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள் என்றார்.
16. பின்னும் ஆண்டவர் மோயிசனை நோக்கி:
17. உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவர்களின் பெயர்களாவன: குருவாகிய எலெயஸாரும், நூனின் புதல்வனாகிய யோசுவாவும் இவ்விருவரோடு
18. ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும், அதாவது:
19. யூதா கோத்திரத்திலே ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப்,
20. சிமியோன் கோத்திரத்திலே அமியூதின் புதல்வனாகிய சாமுவெல்,
21. பெஞ்சமின் கோத்திரத்திலே காஸெலோனின் புதல்வனாகிய எலிதாத்,
22. தான் கோத்திரத்திலே ஜொகிலியின் புதல்வனாகிய பொக்சி,
23. சூசையின் புதல்வருக்குள்ளே மனாஸேயின் கோத்திரத்திலே எப்போதுடைய புதல்வன் ஆனியேல்,
24. எபிராயிம் கோத்திரத்திலே செப்தானுடைய புதல்வனாகிய கமுவேல்,
25. ஜபுலோன் கோத்திரத்திலே பர்னாக்குடைய புதல்வனாகிய எலிஸப்பான்,
26. இஸக்கர் கோத்திரத்திலே ஓஸானுடைய புதல்வனாகிய பால்தியேல்,
27. ஆஸேர் கோத்திரத்திலே ஸலோமியுடைய புதல்வனாகிய அகியூத்,
28. நேப்தலி கோத்திரத்திலே அமியூதுடைய புதல்வனாகிய பேதெல் என்பவர்களாம் என்றருளினார்.
29. கானான் நாட்டை இஸ்ராயேல் மக்களுக்குப் பங்கிட்டுக்கொடுக்க ஆண்டவரால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்களே.