1. பின்னும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2. ஆண்டவர் நியமித்திருக்கிற பலியின் சடங்குமுறை என்னவென்றால்: இஸ்ராயேல் மக்கள் பழுதற்றதும் மாசில்லாததும் நுகத்தடி சுமக்காததுமாகிய நல்ல வளர்ச்சியடைந்த செந்நிறமுள்ள ஒரு கிடாரியை உங்களிடம் கொண்டுவர வேண்டுமென்று சொல்லுங்கள்.
3. அதை குருவாகிய எலெயஸாரிடம் ஒப்படையுங்கள். அவன் அதைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய் எல்லாருக்கும் முன்பாகச் சாகடிக்கக்கடவான்.
4. பிறகு அவன் அதன் இரத்தத்தில் விரலைத் தோய்த்துத் திரு உரைவிடத்துக்கு எதிராக ஏழுமுறை தெளித்த பின்பு,
5. எல்லாரும் பார்க்க அதைச் சுட்டெரிப்பான். அதன் தோலையும் இறைச்சியையும் இரத்தத்தையும் சாணியையும் கூடவே சுட்டெரிக்கக்கடவான்.
6. அன்றியும், கிடாரியைச் சுட்டெரிக்கிற நெருப்பிலே அவன் கேதுருக் கட்டையையும் ஈரோப்பையும், இருமுறை சாயந்தோய்த்த சிவப்பு நூலையும் போடக்கடவான்.
7. கடைசியில் தலைமைக்குரு தனதுஆடைகளைத் தண்ணீரில் தோய்த்துக் குளித்துப் பாளையத்தில் புகுந்துமாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பார்.
8. அந்தக் கிடாரியைச் சுட்டெரித்தவனும் தன் ஆடைகளைத் தோய்த்துக் குளித்து மாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.
9. சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு போய்ப் பாளையத்திற்குப் புறம்பே மிகச் சுத்தமான ஓர் இடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரின் காவலிலே இருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரிலே கலந்து தெளிக்கும் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். (உள்ளபடி) பாவ நிவாரணமாக அந்தக் கிடாரி சுட்டெரிக்கப்பட்டது.
10. கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் ஆடைகளைத் தோய்த்து மாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பான். இந்தச் சட்டம் புனித சட்டமென்று இஸ்ராயேல் மக்களும் அவர்களிடம் தங்குகிற அந்நியர்களும் நித்திய கட்டளையாக அனுசரிக்கக் கடவார்கள்.
11. இறந்தவனின் பிணத்தைத் தொட்டவன் ஏழுநாள் வரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.
12. அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அந்தத் தீர்த்தத்தினாலே தெளிக்கப்பட்டால் அவனுடைய தீட்டு கழிக்கப்படும். அவன் மூன்றாம் நாளிலே தெளிக்கப்படாமலிருந்தால், ஏழாம் நாளிலே தெளிக்கப்பட்டாலும் அவன் தீட்டுக் கழியாது.
13. இறந்தவனின் பிணத்தைத் தொட்டபின்பு எவன் மேற்படிச் சாம்பலைக் கலந்த தீர்த்தத்தினாலே தெளிக்கப்படாமலிருந்து திருக்கூடாரத்தைத் தொடத் துணிவானோ அவன் இஸ்ராயேலரிடையே இராதபடிக்குச் சாவான். தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே தெளிக்கப்படாமல் இருந்தமையால் அவன் தீட்டுப்பட்டிருப்பான். அந்தத் தீட்டும் அவன்மேல் இருக்கும்.
14. கூடாரத்தில் ஒரு மனிதன் இறந்தால் அதற்கடுத்த சட்டமாவது: அவனுடைய கூடாரத்திலே புகுகிற யாவரும், அங்கே இருக்கிற எல்லாத் தட்டுமுட்டுகளும்ஏழு நாள் வரையிலும் தீட்டுப்பட்டிருக்கும்.
15. மூடி இல்லாமல் அல்லது மூடிக் கட்டப்படாமல் இருக்கும் பாத்திரங்கள் தீட்டுப்பட்டிருக்கும்.
16. வயல் வெளியிலே கொலையுண்டவனையாவது, தானாக இறந்தவனையாவது, அவன் எலும்பையாவது, அவனுடைய சமாதியையாவதுஎவன் தொட்டானோ அவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
17. பாவ நிவாரணமாகச் சுட்டெரிக்கப்பட்ட கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு, அதன்மேல் ஊற்றுநீர் வார்க்க வேண்டும்.
18. பிறகு தீட்டுப்படாமலிருக்கும் ஒரு மனிதன் அந்தத் தீர்த்தத்தில் ஈசோப்பைத் தோய்த்துக் கூடாரத்தின் மேலும், பனி முட்டுகளின் மேலும் தொட்டதினால் தீட்டுக்கொண்ட எல்லா மனிதர் மேலும் தெளிப்பான்.
19. இவ்விதமே, தீட்டுப்படாதவன் மூன்றாம் ஏழாம் நாட்களில் தீட்டுப்பட்டவனைத் தெளித்துச் சுத்திகரிப்பான். இப்படி ஏழாம் நாளில் சுத்திகரத்தை அடைந்தவனோ தண்ணீரிலே குளித்துத் தன் ஆடைகளைத் தோய்த்து, மாலை வரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.
20. தீட்டுப்பட்டிருக்கிறவன் இப்படிப்பட்ட சடங்குப்படி சுத்திகரிக்கப்படாவிடில், அவன் ஆண்டவருடைய திரு உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினானென்றும், சுத்திகரிக்கிற தீர்த்தத்தால் தெளிக்கப்படவில்லையென்றும் சபையில் இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.
21. இக் கட்டளை நித்திய சட்டமாக இருக்கும். மேற்படி தீர்த்தத்தைத் தெளித்தவனும் தன் ஆடைகளைத் தோய்க்கக்கடவான். சுத்திகரித்த தீர்த்தத்தைத் தொடுபவனும் மாலைவரையிலும் தீட்டுப்பட்டவனாக இருப்பான்.
22. தீட்டுப்பட்டிருக்கிறவன் எதைத் தொடுவானோ அதுவும் தீட்டுப்படும். இப்படித் தீட்டுப்பட்டவைகளைத் தொட்டவனும் மாலைவரையிலும் தீட்டுப்பட்டவனாக இருப்பான் என்றருளினார்.