1. ஆண்டவர் மோயீசனை நோக்கி,
2. நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நாம் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் புகுந்த பின்பு,
3. ஆண்டவருக்குச் சிறப்பு நேர்ச்சையாவது உற்சாகத்தானமாவது நேர்ந்து முழுத் தகனப் பலியையேனும் மற்ற யாதொரு பலியையேனும், அல்லது உங்கள் பண்டிகைகளில் மாட்டையும் ஆட்டையும் கொண்டு ஆண்டவருக்கு நறுமணமுள்ள முழுத் தகனப் பலியையேனும் நீங்கள் செலுத்த வரும்போது,
4. மிருகப் பலியை எவன் கொண்டு வந்தானோ அவன் கின் என்னும் படியிலே காற்படி எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவைக் கூடவே ஒப்புக் கொடுப்பான். மெல்லிய மாவு எவ்வளவென்றால், ஏப்பி என்னும் மரக்காலில் பத்திலொரு பங்கேயாம்.
5. அன்றியும், முழுத்தகனம் முதலிய பலிகளுக்காக பானப்பலிக்கென்று கின் என்னும் அளவிலே நான்கில் ஒரு பங்கு கொடிமுந்திரி பழச் சாற்றையும் ஆட்டுக் குட்டியையும் அவன் கொண்டு வருவான்.
6. ஆட்டுக்கிடாய்ப் பலியானால், பத்தில் இரண்டு பங்கானதும் ஒரு கின்னில் மூன்றிலொரு பங்கான எண்ணெயில் பிசைந்தததுமான மெல்லிய மாவைப் போசனப் பலியாகவும்,
7. ஆண்டவருக்கு நறுமணமாகக் கின்னில் மூன்றில் ஒரு பங்கு கொடிமுந்திரி பழச்சாற்றைப் பானப் பலியாகவும் ஒப்புக்கொடுக்கக் கடவான்,
8. ஆனால், நீ யாதொரு நேர்ச்சை செலுத்துவதற்கு ஒரு மாட்டை முழுத்தகனப் பலிக்கேனும் சாதாரணப் பலிக்கேனும் கொண்டுவந்தால்,
9. ஒவ்வொரு மாட்டோடும் பத்தில் மூன்று பங்கு மாவையும், அதன்மேல் தெளிக்க ஒரு கின் அளவிலே சரிபாதி எண்ணெயையும், (போசனப் பலிக்காகக் கொண்டு வந்து),
10. கின்னில் பாதிக் கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் பானப் பலிக்கென்று ஒப்புக் கொடுக்கக் கடவாய்.
11. இவ்விதமாகவே, ஒவ்வொரு மாட்டுக்கும்,
12. ஆட்டுக்கிடாய்க்கும், ஆட்டுக்குட்டி, வெள்ளாட்டுக் குட்டிகளுக்கும் செய்யக் கடவாய்.
13. உள்நாட்டாரேனும் வெளிநாட்டாரேனும்
14. அந்த விதிப்படியே பலியிடுவார்கள்.
15. உங்களுக்கும் (உங்களோடு குடியிருக்கிற) அந்நியருக்கும் ஒரே கட்டளையும்சட்டமும் இருக்கும் என்றருளினார்.
16. பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
17. நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது:
18. நாம் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டில் நீங்கள் சேர்த்து,
19. அந்நாட்டின் உணவை உண்ணும்போது அதன் புதுப் பலனாகிய காணிக்கையை ஆண்டவருக்குச் செலுத்தும்படி பாதுகாத்து வைக்கக்கடவீர்கள்.
20. அது போலவே போரடிக்கிற களத்தின் புதுப் பலனாகிய காணிக்கையையும் ஆண்டவருக்குக் கொடுக்கப் பத்திரப்படுத்தி வைக்கக் கடவீர்கள்.
21. பிசைந்த மாவிலேயும் முதற்பலனை ஆண்டவருக்குச் சமர்ப்பிக்கக் கடவீர்கள்.
22. ஆனால்,
23. ஒரு வேளை ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியவற்றிலும், அவர் மோயீசன் மூலமாய் உங்களுக்குக் கட்டளையிடத் தொடங்கின துவக்கத்திலும் பிற்காலத்திலும் அறிவித்தவற்றிலும் நீங்கள் அறியாமையினாலே எதையாவது மீறி நடந்திருப்பீர்களாயின்,
24. அல்லது மறதியினாலே கவனியாமல் விட்டிருப்பீர்களாயின், அப்படிப்பட்டவர்கள் ஆண்டவருக்கு நறுமணமுள்ள தகனப் பலிக்கென்று ஒரு கன்றுக் குட்டியையும், அதற்கேற்ற போசனப் பலியையும் பானப் பலியையும் முறைமைப்படி கொண்டு வருவதுடன், பாவநிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக் கொடுப்பார்கள்.
25. குரு இஸ்ராயேல் மக்களின் முழுச் சபைக்காகப் பிரார்த்திப்பார். அப்பொழுது அவர்களுடைய குற்றம் மன்னிக்கப்படும். ஏனென்றால், அது அறியாமையினால் செய்யப்பட்டதாகும். ஆயினும், அவர்கள் தங்களுக்காகவும், அறியாமல் செய்த தங்கள் குற்றத்திற்காகவும் ஆண்டவருக்கு முழுத்தகனப் பலியைஒப்புக் கொடுக்ககடவார்கள்.
26. (அந்த குற்றம்) அறியாமையினால் எல்லா மக்களுக்கும் வந்ததாகையால், அது இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் அவர்கள் நடுவில் குடியிருக்க வந்த அந்நியருக்கும் மன்னிக்கப்படும்.
27. ஒருவன் தெரியாமல் பாவம் செய்தானாயின், அவன் தன் பாவ நிவர்த்திக்காக ஒரு வயதான வெள்ளாட்டை ஒப்புக்கொடுக்கக் கடவான்.
28. அப்பொழுது, அறியாமையினால் பாவம் செய்தவனுக்காகக் குரு ஆண்டவருக்கு முன்பாக மன்றாடி மன்னிப்பு வேண்டிய பின்பு அந்தக் குற்றம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
29. நாட்டவர்க்கும் அந்நியர்க்கும் அறியாமையினால் செய்த பாவத்தைப் பொறுத்த மட்டில் ஒரே சட்டம் இருக்கும்.
30. ஆனால், எவனேனும் அகந்தையினாலே யாதொரு பாவத்தைத் துணிந்து செய்தால், அவன் - உள் நாட்டவனாயினும்வெளி நாட்டவனாயினும் - (ஆண்டவருக்குத் துரோகியானதினாலே) தன் மக்களிடையே இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.
31. அவன் ஆண்டவருடைய வார்த்தையை நிந்தித்து அவருடைய கட்டளையை வீணாக்கினமையால் கொலை செய்யப்படுவான். அவன் அக்கிரமம் அவன் தலைமேல் இருக்கும் என்றருளினார்.
32. இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் இருக்கையிலே ஓய்வு நாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டு பிடித்தார்கள்.
33. (கண்டு பிடித்தவர்கள்) அவனை மோயீசன் ஆரோன் என்பவர்களுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டு வந்து ஒப்புவித்தார்கள்.
34. அவனுக்குச் செய்ய வேண்டியது இன்னதென்று தெரியாமல் அவர்கள் அவனைக் காவலில் வைத்தார்கள்.
35. அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: அம்மனிதன் நிச்சயமாய்ச் சாகக்கடவான். மக்கள் எல்லாரும் அவனைப் பாளையத்தின் புறம்பே கொண்டு போய்க் கல்லாலெறியக் கடவார்கள் என்றார்.
36. அவர்கள் ஆண்டவருடைய கட்டளைப்படி அவனை வெளியே கூட்டிக் கொண்டு போய்க் கல்லாலெறிய, அவன் செத்தான்.
37. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
38. நீ இஸ்ராயேல் மக்களோடு பேசி, அவர்கள் ஆடைகளின் முனைகளிலே இளநீல நாடாவைத் தைத்துக் குஞ்சம் கட்டித் தொங்க விட வேண்டுமென்று சொல்.
39. (இதன் நோக்கம் என்னவென்றால்) அவர்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம், பலவற்றை இச்சிக்கும் விபசாரரைப் போன்ற தங்கள் மன நாட்டங்களையும் கண்களை மருட்டும் தோற்றங்களையும்பின்பற்றிப் போகாமல், தாங்கள் ஆண்டவருடைய கட்டளைகளையும்,
40. சட்டங்களையும் நினைந்தவர்களாய் அவற்றை நிறைவேற்றவும் பரிசுத்தராகவும் வேண்டுமென்று நினைவுகூரக்கடவார்கள்.
41. நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கடவுளாய் இருக்கும்படி உங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்த ஆண்டவர் நாமே என்றார்.