1. அப்பொழுது பெரிய குரு எலியாசிபும் அவருடைய உடன் குருக்களும் எழுந்து, மந்தை வாயிலைக் கட்ட முன்வந்தனர். அவர்கள் நிலைகளை நிறுத்தி அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். இவ்வாறு அனானெயேல் கோபுரம் வரை செய்து முடித்தனர்.
2. அதையடுத்து எரிக்கோ நகரமக்கள் கட்டினார்கள்; அதையடுத்து அம்ரி மகன் ஜக்கூர் கட்டினான்.
3. மீன் வாயிலையோ அஸ்னாவின் புதல்வர்கள் கட்டினார்கள். அவர்கள் நிலைகளை நிறுத்தி, கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். அதையடுத்து அக்கூசின் மகன் ஊரியாவின் புதல்வனான மெரிமோத் கட்டினான்.
4. அதையடுத்து மேசெஜெபெலுக்குப் பிறந்த பராக்கியாவுடைய மகன் மொசொல்லாம் கட்டினான். அதையடுத்து பாவானாவின் மகன் சாதோக்கு கட்டினான்.
5. அதையடுத்து தேக்குவே ஊரார் கட்டினார்கள்; ஆனால் அவ்வூர்ப் பெரியோர்கள் ஆண்டவரின் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
6. பழைய வாயிலைப் பாசேயாவின் மகன் யோயியாதாவும், பெசோதியாவின் மகன் மொசொல்லாமும் கட்டினார்கள். இவர்கள் நிலைகளை நிறுத்தி அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
7. இவர்களை அடுத்து மஸ்பா, கபாவோன் என்ற ஊர்களைச் சேர்ந்த கபாவோனியனான மேல்தியாவும், மெரோனாத்தியனான யாதோனும் நதிக்கு அக்கரைப் பகுதியில் உள்ள ஆளுநர்கள் பெயரால் கட்டினார்கள்.
8. இவர்கள் அருகே பொற்கொல்லன் அராயியாக்கின் மகனாகிய எஜியேல் கட்டினான். அதையடுத்து நறுமணப்பொருள் விற்பவர்களுள் ஒருவனான அனானியா வேலைசெய்தான். இவ்வாறு யெருசலேமின் பெரியமதில்வரை மதில் கட்டப்பட்டது.
9. இவர்களருகே யெருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநனும் ஊரின் மகனுமான இராப்பாயியா கட்டினான்.
10. இவனருகே ஆறோமாப்பின் மகனாகிய யெதாயியா தன் வீட்டுக்கு எதிரே இருந்த பாகத்தைக் கட்டினான். இவனை அடுத்து ஆசெபோனியாவின் மகனாகிய ஆத்தூசு வேலை செய்தான்.
11. ஏறேமின் மகனாகிய மெல்கியாசும், பாவாத் மோவாபின் மகனாகிய ஆசுபும் ஒரு தெருவில் பாதியையும் சூளைகளின் கோபுரத்தையும் கட்டினார்கள்.
12. அடுத்து யெருசலேம் மாவட்டத்தின் மற்றப் பாதிக்கு ஆளுநனும் அலோயேசின் மகனுமான செல்லோமும் அவனுடைய புதல்வியரும் கட்டினார்கள்.
13. ஆனூனும் சனொயின் ஊராரும் பள்ளதாக்கு வாயிலைக் கட்டினார்கள். இவர்கள் நிலைகளை நிறுத்தி அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். குப்பைமேட்டு வாயில் வரை ஆயிரம் முழம் மதிலைக் கட்டினர்.
14. பெத்தாக்கறாம் மாவட்டத்தின் ஆளுநனும் ரெக்காபின் மகனுமான மெல்கியா குப்பை மேட்டு வாயிலைக் கட்டினான். அவன் நிலைகளை நிறுத்தி அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான்.
15. மஸ்பா மாவட்டத்தின் ஆளுநனும் கொலோசாக்கின் மகனுமான செல்லும் ஊருணி வாயிலைக் கட்டினான். அவன் நிலைகளை நிறுத்தி அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். மேலும், அவன் அரச தோட்டத்திலுள்ள சிலோயே குளத்துச் சுவர்களைத் தாவீதின் கோட்டைப் படிகள் வரை கட்டினான்.
16. இவனுக்குப்பின் பெத்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அஸ்போக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே இருந்த இடம் மட்டும், வெட்டப்பட்ட குளம் வரையிலும், வீரர்கள் வீடு வரைக்கும் மதிலைக் கட்டினார்.
17. அதை அடுத்து லேவியர்கள் கட்டினார்கள்; பென்னியின் மகனாகிய இரேகும் கட்டினான்.
18. அடுத்து அவர்களுடைய சகோதரர் வேலை செய்தனர். கேயிலா மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநனாய் இருந்த எனதாத்தின் மகன் பாவாயி கட்டினான்.
19. இவனுக்குப் பிறகு மஸ்பாவின் ஆளுநனான யோசுவாவின் மகன் ஆசேர் முனையிலே ஆயுதக் கிடங்குக்கு எதிரேயிருந்த மற்றொரு பாகத்தைக் கட்டினான்.
20. இவனுக்குப் பின் சக்காயீயின் மகன் பாருக் அந்த முனையிலிருந்து பெரிய குரு எலியாசீபின் வீட்டு வாயில் வரை கட்டினான்.
21. ஆக்குசின் மகன் ஊரியாவின் புதல்வன் மெரிமோத் எலியாசீபின் வீட்டு வாயிற்படி துவக்கி அவ் வீட்டின் கடைக் கோடி வரை கட்டினான்.
22. இவனுக்குப் பின் யோர்தான் சமவெளியில் வாழ்ந்துவந்த குருக்கள் வேலை செய்தார்கள்.
23. இதற்குப்பின் பென்யமீனும் ஆசுபும் தங்கள் வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த பாகத்தைக் கட்டினார்கள். பின்னர் அனானியாசிற்குப் பிறந்த மவாசியாவின் மகன் அசாரியாஸ் தன் வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த பாகத்தைக் கட்டினான்.
24. இவனுக்குப்பின் அசாரியாஸ் வீட்டிலிருந்து மதிலின் முனை வரை எனதாத்தின் மகன் பென்னுயி கட்டினான்.
25. அரச மாளிகையின் மேற்பகுதியினின்று நீண்டு, சிறை முற்றத்தில் நின்று கொண்டிருந்த கோபுரத்தின் வளைவிற்கு எதிரே இருந்த பாகத்தை ஓசியின் மகன் பாலேல் கட்டினான். அவனுக்குப்பின் பாரோசன் மகன் பாதாயியா வேலை செய்தான்.
26. ஒப்பேலில் குடியிருந்த ஆலய ஊழியரோ கிழக்கேயுள்ள தண்ணீர் வாயிலுக்கும் வெளியே நீண்டு கொண்டிருக்கும் கோபுரத்துக்கும் நேர் எதிரே கட்டினார்கள்.
27. அவர்களுக்குப்பின் தேக்குவா ஊரார் பெரிய கோபுரத்திற்கு எதிரே இருந்த பகுதியை ஒப்பேல் மதில் வரை கட்டினார்கள்.
28. பின்பு குதிரை வாயில் முதற்கொண்டு குருக்களே தத்தம் வீட்டுக்கு எதிரேயுள்ள பகுதிகளைக் கட்டிக் கொண்டார்கள்.
29. அவர்களுக்குப் பின் எம்மேரின் மகன் சாதோக் தன் வீட்டுக்கு நேரே உள்ள பகுதியைக் கட்டினான். அவனுக்குப்பின் கீழ் வாயிற் காவலனும் செக்கேனியாவின் மகனுமான செமாயியா கட்டினான்.
30. அவனுக்குப்பின் செலேமியாவின் மகன் அனானியாவும் செலேபுக்கு ஆறாவது மகனான ஆனூனும் இன்னொரு பங்கைக் கட்டினார்கள். பின்பு பராக்கியாசின் மகன் மொசொல்லாம் தன் வீட்டுக்கு எதிரேயுள்ள பாகத்தைக் கட்டினான்.
31. (30b) இவனுக்குப் பின் பொற்கொல்லனின் மகனான மெல்கியாஸ் ஆலய ஊழியர் வீடு வரையிலும், நீதி வாயிலுக்கு நேராக சில்லறை வியாபாரிகளுடைய வாயில் வரையிலும், முனைச்சாலை வரையிலும் மதிலைக் கட்டிவிட்டான்.
32. (31) முனைச்சாலைக்கும் மந்தை வாயிலுக்கும் இடையிலுள்ள மதிலையோ பொற் கொல்லர்களும் வியாபாரிகளும் கட்டி எழுப்பினார்கள்.