1. அரண் சூழ் நகரமே, நீ உன் அரண்களைப் பார்த்துக் கொள், எங்களுக்கு எதிராய்க் கொத்தளங்கள் போடப்பட்டுள்ளன; இஸ்ராயேல் மேல் ஆட்சி செலுத்துபவன், அவர்கள் கோலால் கன்னத்தில் அடிபடுகிறான்.
2. நீயோ, எப்பிராத்தா எனப்படும் பெத்லெகேமே, யூதாவின் கோத்திரங்களுள் நீ மிகச் சிறியதாயினும், இஸ்ராயேலில் ஆட்சி செலுத்தப் போகிறவர் உன்னிடமிருந்தே எனக்கென்று தோன்றுவார்; பண்டை நாட்களிலிருந்தே, பழங்காலத்திலிருந்தே வருகிற கால்வழியில் தோன்றுவார்.
3. ஆதலால், பேறுகால வேதனையிலிருப்பவள் பிள்ளை பெறும் வரை, அவர்களை அவர் கைவிட்டு விடுவார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களுள் எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
4. அவர் தோன்றி, ஆண்டவருடைய வல்லமையோடும், தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் தமது மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள், ஏனெனில் இப்பொழுது உலகத்தின் இறுதி எல்லைகள் வரை அவர் பெரியவராய் விளங்கப் போகிறார்.
5. அவரே நமக்குச் சமாதானம் தருபவர். அசீரியன் நம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் போதும், நம் அரண்மனைகளுக்குள் புகும் போதும் அவனுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரும், மக்கட் தலைவர் எண்மரும் நாம் எழுப்பிவிடுவோம்.
6. அவர்கள் அசீரியா நாட்டை வாள் கொண்டும், நிம்ரோத் நாட்டை வாள் முனையாலும் ஆளுவார்கள். அசீரியன் நம் நாட்டுக்குள் எல்லைகளைக் கடந்து வரும் போது அவர்கள் தான் நம்மை அவனிடமிருந்து காப்பார்கள்.
7. அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து இறங்குகிற பனியைப் போலும், மனிதருக்காகக் காத்திராமலும், மனுமக்களை எதிர்பாராமலும் புல் மேல் பெய்கிற மழைத் துளிகள் போலும் மக்களினங்கள் பலவற்றின் நடுவில் இருப்பார்கள்.
8. இன்னும், யாக்கோபில் எஞ்சினோர், காட்டு மிருகங்கள் நடுவில் இருக்கும் சிங்கம் போலும், ஆட்டு மந்தைகளுக்குள் நுழைந்து, யாராலும் அவற்றைக் காப்பாற்ற முடியாதபடி அவற்றை மிதித்தும், துண்டு துண்டாய்க் கிழித்தும் போடுகிற சிங்கக் குட்டி போலும் புறவினத்தார் நடுவிலும், பற்பல மக்களினங்கள் நடுவிலும் இருப்பார்கள்.
9. உனது கை உன் எதிரிகள் மேல் ஓங்கியே இருக்கும், உன் பகைவர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுவர்.
10. ஆண்டவர் கூறுவது இதுவே: அந்நாளில் உன்னிடமிருந்து உன் குதிரைகளை ஒழித்து விடுவோம்; உன் தேர்ப் படையை அழித்துப் போடுவோம்.
11. உன் நாட்டிலுள்ள நகரங்களைத் தகர்த்தெறிவோம், உன்னுடைய அரண்களையெல்லாம் தரை மட்டமாக்குவோம்.
12. (11b) உன் கையினின்று மாய வித்தைகளைப் பிடுங்கியெறிவோம், குறிசொல்பவர் உன்னிடம் இல்லாதொழிவர்.
13. (12) படிமங்களையும் பீடங்களையும் உன் நடுவிலிருந்து அகற்றுவோம், உன் கைவேலைப்பாடுகள் முன்னால் இனி நீ தலை வணங்க மாட்டாய்.
14. (13) உன் நடுவிலிருக்கும் உன் கம்பங்களைப் பிடுங்கியெறிவோம், உன் நகரங்களைப் பாழாக்குவோம்.
15. (14) நமக்குக் கீழ்ப்படியாத மக்களினங்களின் மேல் கடுஞ்சினத்தோடும் ஆத்திரத்தோடும் நாம் பழி தீர்த்துக் கொள்வோம்.