1. அப்பொழுது நான் சொன்னேன்: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, கேளுங்கள்! நீதியை அறிந்து கொள்வது உங்கள் கடமையன்றோ?
2. நீங்களோ நன்மையைப் பகைத்துத் தீமையை இச்சிக்கிறீர்கள், என் மக்களின் தோலையுரிக்கிறீர்கள், அவர்களின் எலும்புகளிலிருந்து சதையைக் கிழிக்கிறீர்கள்.
3. அந்தத் தலைவர்கள் என் மக்களின் சதையைத் தின்கிறார்கள், அவர்களுடைய தோலையுரிக்கிறார்கள்; அவர்கள் எலும்புகளை முறித்துச் சட்டியில் வேகும் சதை போலவும், கொப்பரையில் போடும் இறைச்சி போலவும் துண்டிக்கிறார்கள்.
4. பின்னர் அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவர், ஆனால் அவர்களுக்கு அவர் செவிசாய்க்க மாட்டார்; அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில் அவர்கள் கொடிய செயல்கள் புரிந்தார்கள்.
5. என் மக்களைத் தவறான நெறியில் நடத்துகிற தீர்க்கதரிசிகளைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்: வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் வரையில் "சமாதானம்!" என்று முழங்குகிறார்கள்; எவனாவது அவர்களுக்கு உண்ணக் கொடுக்கவில்லையெனில், அவனுக்கு எதிராய்ப் போர் தொடுக்கிறார்கள்.
6. ஆதலால் உங்களை இருள் சூழும், இனிக்காட்சி கிடைக்காது, காரிருள் கவ்விக்கொள்ளும், முன்னுரைத்தல் இராது; தீர்க்கதரிசிகளுக்கு அந்திக்காலம் வந்துவிட்டது; பகலும் அவர்களுக்கு இருளாக இருக்கும்.
7. காட்சி காண்பவர்கள் வெட்கிப்போவார்கள், முன்னுரைப்பவர்களும் நாணிப் போவார்கள்; அவர்கள் அனைவரும் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து வாக்கு ஏதும் வாராது.
8. ஆனால் யாக்கோபுக்கு அதன் அக்கிரமத்தையும், இஸ்ராயேலுக்கு அதன் பாவத்தையும் எடுத்துக்காட்ட நான் வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.
9. யாக்கோபு வீட்டாரின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, நீதியானதை அருவருத்து நேர்மையானதையெல்லாம் கோணலாக்குகிறவர்களே,
10. இரத்தப்பழியால் சீயோனையும், அக்கிரமத்தால் யெருசலேமையும் கட்டியெழுப்புகிறவர்களே, இதைக் கேளுங்கள்:
11. அதன் தலைவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்குத் தீர்க்கிறார்கள்; அதன் அர்ச்சகர்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர், அதன் தீர்க்கதரிசிகள் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர். இவ்வளவும் செய்து கொண்டே "ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறாரல்லரோ? தீங்கெதுவும் நமக்கு நேராது" என்று சொல்லி, ஆண்டவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
12. ஆதலால், உங்களை முன்னிட்டு சீயோன் வயல் வெளியைப் போல் உழப்படும், யெருசலேம் பாழடைந்த மண் மேடாகும், திருக்கோயிலுள்ள மலையானது காடாகும்.