1. "நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.
2. எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.
3. உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?
4. உன் சகோதரனை நோக்கி, ' உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க விடு ' என்று நீ எப்படிச் சொல்லலாம் ? இதோ! உன் கண்ணிலே விட்டம் இருக்கிறதே.
5. வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி; பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும்.
6. பரிசுத்தமானதை நாய்களுக்குப் போடவேண்டாம். உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் எறியவும் வேண்டாம்; எறிந்தால், அவை அவற்றைக் காலால் மிதித்து உங்களை எதிர்த்துப் பீறிவிடலாம்.
7. "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
8. ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. தன் மகன் அப்பம் கேட்டால் ஒருவன் கல்லைக் கொடுப்பானா ? உங்களில் யாராவது அப்படிச் செய்வானா ?
10. அல்லது அவன் மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா ?
11. ஆகவே தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!
12. "ஆகையால் உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் இதுவே.
13. `இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழி பரந்தது; அதன் வழியே நுழைபவரும் பலர்.
14. வாழ்வுக்குச் செல்லும் வாயில் எவ்வளவோ ஒடுக்கமானது; வழி எவ்வளவோ இடுக்கானது. இதைக் கண்டுபிடிப்பவரும் சிலரே.
15. `போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்; உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள்.
16. அவர்கள் கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்புதர்களில் அத்திப் பழங்களையோ பறிப்பாருண்டோ ?
17. அவ்வண்ணமே, நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்; தீய மரமோ தீய பழம் கொடுக்கும்;
18. நல்ல மரம் தீய பழம் கொடாது. தீய மரமும் நல்ல பழம் கொடாது.
19. நல்ல பழம் கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்.
20. ஆதலால் அவர்கள் கனிகளைக்கொண்டே அவர்களை அறிந்துகொள்வீர்கள்.
21. `என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான். அந்நாளில் பலர் என்னை நோக்கி,
22. 'ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் தீர்க்கதரிசனம் கூறவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் புதுமை பல செய்யவில்லையா?' என்பர்.
23. அதற்கு, 'உங்களை நான் அறிந்ததேயில்லை. நெறிகெட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று அவர்களுக்கு நான் வெளிப்படையாகச் சொல்லுவேன்.
24. `ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்.
25. மழை பெய்தது, வெள்ளம் வந்தது, புயலடித்து அவ்வீட்டின்மேல் மோதியது. ஆனால், அது விழவில்லை. ஏனென்றால், கற்பாறையின்மேல் ஊன்றியிருந்தது.
26. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடக்காதவன் எவனும் மணல்மீது தன் வீட்டைக் கட்டிய மூடனுக்கு ஒப்பாவான்.
27. மழை பெய்தது, வெள்ளம் வந்தது, புயலடித்து அவ்வீட்டின்மேல் மோதியது. அது விழுந்தது. பெரிது அதன் அழிவு! `
28. இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்ததும் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு மலைத்துப்போயினர்.
29. ஏனெனில், அவர் மறைநூல் அறிஞர்போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்.