1. இயேசு மீண்டும் அவர்களிடம் உவமைகளில் உரைத்ததாவது:
2. "விண்ணரசு, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பாகும்.
3. அவன் ஊழியரை அனுப்பித் திருமணத்திற்கு அழைக்கப்பெற்றவர்களை வரச்சொன்னான். அவர்களோ வர விரும்பவில்லை.
4. மீண்டும் வேறு ஊழியரை அனுப்பி, ' இதோ! விருந்து ஏற்பாடு செய்துள்ளேன்; காளைகளும் கொழுத்த மிருகங்களும் அடித்து எல்லாம் ஏற்பாடாயிற்று. திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பெற்றவருக்குச் சொல்லுங்கள் ' என்றான்.
5. அழைக்கப்பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை; ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.
6. மற்றவர்களோ அவன் ஊழியரைப் பிடித்து அவமானப்படுத்திக் கொன்றனர்.
7. அதைக் கேட்ட அரசன் சினந்து, தன் படையை அனுப்பிக் கொலைகாரர்களைத் தொலைத்து அவர்கள் நகரையும் தீக்கிரையாக்கினான்.
8. பின்னர், தன் ஊழியரிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகிவிட்டது. அழைக்கப்பெற்றவர்களோ தகுதியற்றவர்களாயினர்.
9. எனவே, வீதிகளுக்குச் சென்று நீங்கள் காணும் எல்லாரையும் மணவிருந்துக்கு அழையுங்கள் ' என்றான்.
10. அவன் ஊழியரும் வீதிகளுக்குச் சென்று தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்த்தனர். மன்றம் நிரம்ப அவர்கள் பந்தி அமர்ந்தனர்.
11. அமர்ந்தோரைப் பார்க்க அரசன் உள்ளே வந்தான். அங்கே திருமண உடையணியாத ஒருவனைக் கண்டான்.
12. அவனை நோக்கி, 'நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?' என்று கேட்க, அவன் பேசாதிருந்தான்.
13. பின்னர் அரசன் பணியாளரை நோக்கி, ' கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் ' என்று சொன்னான்.
14. ஏனெனில், அழைக்கப்பெற்றவர்களோ பலர்; தேர்ந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்."
15. பின்னர், பரிசேயர் போய் அவரைப் பேச்சில் அகப்படுத்த ஆலோசனை செய்தனர்.
16. தங்கள் சீடரை ஏரோதியரோடு அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மை உள்ளவர்; கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர். நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
17. எனவே, எங்களுக்குச் சொல்லும்: செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?" என்றனர்.
18. இயேசு அவர்களது கெடுமதியை அறிந்து, "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் ?
19. வரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்" என்றார். ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தனர்.
20. இயேசு, "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை ?" என்றார்.
21. "செசாருடையவை" என்றனர். அப்பொழுது அவர்களை நோக்கி, "ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்றார்.
22. இதைக் கேட்டு அவர்கள் வியப்புற்று அவரை விட்டுப்போயினர்.
23. உயிர்த்தெழுதல் இல்லையென்று கூறும் சதுசேயர் அவரை அன்று அணுகி,
24. "போதகரே, ' ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவன் சகோதரன் அவனுடைய மனைவியை மணந்து, தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் ' என்று மோயீசன் சொல்லியிருக்கிறார்.
25. எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் மணம்முடித்து மகப்பேறின்றித் தன் மனைவியைச் சகோதரனுக்கு விட்டு இறந்தான்.
26. அப்படியே இராண்டாம், மூன்றாம், ஏழாம் சகோதரன்வரைக்கும் நடந்தது.
27. எல்லாருக்கும் கடையில் அப்பெண்ணும் இறந்தாள்.
28. ஆகவே, உயிர்த்தெழும்போது அவள் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாக இருப்பாள் ? எல்லாரும் அவளை மணம்செய்திருந்தனரே" என்று கேட்டனர்.
29. அதற்கு இயேசு, "மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் தவறாக நினைக்கிறீர்கள்.
30. ஏனெனில், உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானகத்தில் கடவுளின் தூதரைப்போல் இருப்பார்கள்.
31. இறந்தோர் உயிர்த்தெழுவதுபற்றிக் கடவுள், ' நாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று உங்களுக்குக் கூறினதை நீங்கள் படித்ததில்லையா ?
32. அவர், வாழ்வோரின் கடவுளேயன்றி இறந்தோரின் கடவுள் அல்லர்" என்றார்.
33. இதைக் கேட்ட மக்கட்கூட்டம் அவர் போதனையைப்பற்றி மலைத்துப்போயிற்று.
34. அவர் சதுசேயரை வாயடக்கியது கேள்வியுற்ற பரிசேயர் ஒன்றுகூடினர்.
35. அவர்களுள் சட்டவல்லுநனாகிய ஒருவன்,
36. "போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்.
37. இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக.
38. இதுவே எல்லாவற்றிலும் பெரிய முதன்மையான கட்டளை.
39. இரண்டாவது இதை யொத்ததே; உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக.
40. திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" என்றார்.
41. பரிசேயர் திரண்டு கூடியிருக்கையில் இயேசு,
42. "மெசியாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அவர் யாருடைய மகன் ?" என்று வினவினார். "தாவீதின் மகன்" என்றார்கள்.
43. அதற்கு அவர், "அப்படியானால் தாவீது, தேவ ஆவியால் ஏவப்பட்டு,
44. அவரை ஆண்டவர் என்று அழைப்பது எப்படி ? ஏனெனில், ' ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும் ' எனச் சொல்லியிருக்கிறாரே.
45. ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாக மட்டும் இருப்பது எப்படி ?" என்றார்.
46. அதற்கு ஒருவனும் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்ல முடியவில்லை. அன்றுமுதல் அவரிடம் மேலும் கேள்வி கேட்க ஒருவனும் துணியவில்லை.