1. அவர்கள் யெருசலேமை நெருங்கி ஒலிவ மலையருகில் இருந்த பெத்பகேக்கு வந்தபொழுது இயேசு சீடர் இருவரை அழைத்து, ஃ
2. "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குச் செல்லுங்கள். சென்றதும் அங்கே ஒரு கழுதை கட்டியிருப்பதையும், அதனுடன் குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.
3. யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், அவை ஆண்டவருக்குத் தேவை. விரைவில் அவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவார் எனக் கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.
4. 'இதோ, உன்னுடைய அரசர் கழுதையின்மேலும் பொதிமிருகக் குட்டியின்மேலும் அமர்ந்து சாந்தமாக உன்னிடம் வருகிறார்
5. எனச் சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள் ' என்று இறைவாக்கினர் கூறியது நிறைவேறுவதற்கே இதெல்லாம் நிகழ்ந்தது.
6. சீடர் சென்று இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.
7. கழுதையையும் குட்டியையும் ஓட்டிவந்து தம் போர்வைகளை அவற்றின்மேல் விரித்து, அவரை மேலே அமரச் செய்தனர்.
8. பெருங்கூட்டமான மக்கள் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
9. கூட்டமாக முன்னே சென்றவர்களும், பின்னே வந்தவர்களும், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! உன்னதங்களில் ஓசான்னா! " என்று ஆர்ப்பரித்தனர்.
10. யெருசலேமுக்குள் வந்தபொழுது நகர் முழுவதும் பரபரப்புற்று, "இவர் யார் ?" என்று கேட்டது.
11. மக்களோ, "இவர்தாம் கலிலேயாவின் நாசரேத்தூரிலிருந்து வந்த இயேசு என்னும் இறைவாக்கினர்" என்றனர்.
12. இயேசு கோயிலுக்குள் சென்று, அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.
13. அவர்களிடம், " 'என்வீடு செப வீடு எனப்படும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர்குகையாக்கிவிட்டீர்கள்" என்று சொன்னார்.
14. கோயிலில் குருடரும் முடவரும் அவரிடம் வந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.
15. தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவர் செய்த வியத்தகு செயல்களையும், சிறுவர்கள் கோயிலில், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்று செய்த ஆரவாரத்தையும் கண்டுச் சினங்கொண்டனர்.
16. அவர்கள் அவரிடம், "இவர்கள் சொல்லுவது கேட்கிறதா ?" என, இயேசு, "ஆம், " ' சிறுவர்கள், குழந்தைகளின் வாயும் உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்தீர் ' என்று நீங்கள் படித்ததே இல்லையா ?" என்றார்.
17. பின், அவர்களை விட்டு நகருக்கு வெளியே பெத்தானியாவுக்குச் சென்று அங்கே தங்கினார்.
18. அவர் காலையில் நகருக்குத் திரும்புகையில் பசியுற்றார்.
19. வழியோரத்தில் ஓர் அத்திமரத்தைக் கண்டு அதை அணுகி, அதில் இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல், "இனி ஒருகாலும் காய்க்கவேமாட்டாய்" என்று கூறினார். உடனே அத்திமரம் பட்டுப் போயிற்று.
20. இதைக் கண்ட சீடர் வியந்து, "இவ்வளவு விரைவில் பட்டுப்போயிற்றே, எப்படி?" என்றனர்.
21. அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: தயங்கா விசுவாசம் உங்களிடம் இருந்தால், அத்திமரத்திற்கு நேர்ந்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இம்மலையைப் பார்த்து, ' நீ பெயர்ந்து கடலில் விழு ' என்று கூறினாலும் அது நடைபெறும்.
22. செபத்தில் நீங்கள் விசுவாசத்துடன் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்" என்றார்.
23. அவர் கோயிலுக்கு வந்து போதித்துக்கொண்டிருக்கையில் தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அவரிடம் வந்து, "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் ? என்றார்கள்.
24. அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்கு நீங்கள் பதில் சொன்னால், நானும் எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குக் கூறுவேன்.
25. அருளப்பருடைய ஞானஸ்நானம் எங்கிருந்து வந்தது ? வானகத்திலிருந்தா ? மனிதரிடமிருந்தா ?" என்று கேட்டார். அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " ' வானகத்திலிருந்து வந்தது ' என்போமாயின், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ? ' என்று நம்மைக் கேட்பார்.
26. ' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமாயின், பொது மக்களுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில், எல்லாரும் அருளப்பரை இறைவாக்கினர் என்று கருதுகின்றனர்."
27. எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக: "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு அவர், "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.
28. "இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஒருவனுக்கு மக்கள் இருவர் இருந்தனர். அவன் ஒருவனிடம் போய், ' மகனே, இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலைசெய் ' என்றான்.
29. அதற்கு அவன், ' போகமாட்டேன் ' என்றான். பின்னர் வருந்தி மனமாறிச் சென்றான்.
30. மற்றவனிடமும் வந்து அவ்வாறே சொன்னான். அதற்கு அவன், ' இதோ! போகிறேன், ஐயா ' என்றான். ஆனால் போகவில்லை.
31. இருவருள் எவன் தந்தையின் விருப்பப்படி நடந்தவன் ?" என்று கேட்டார். அவர்கள், "முந்தியவனே" என்றனர். இயேசு அவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்.
32. ஏனெனில், அருளப்பர் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார்; நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்; நீங்களோ அதைப் பார்த்த பின்னும் வருந்தி மனமாறி அவரை நம்பவில்லை.
33. "மற்றும் ஓர் உவமையைக் கேளுங்கள்: வீட்டுத்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் திராட்சைத் தோட்டம் வைத்துச் சுற்றிலும் வேலி அடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.
34. காய்க்குங் காலம் நெருங்கியபொழுது தனக்கு வரவேண்டிய பலனை வாங்கிவரும்படி தன் ஊழியரைக் குடியானவர்களிடம் அனுப்பினான்.
35. குடியானவர்களோ அவனுடைய ஊழியரைப் பிடித்து, ஒருவனை அடித்தனர், ஒருவனைக் கொன்றனர், வேறொருவனைக் கல்லால் எறிந்தனர்.
36. முந்தினோரைவிட மிகுதியான ஊழியரை மீண்டும் அனுப்பினான். அவர்களுக்கும் அவ்வாறே செய்தனர்.
37. இறுதியாக, ' என் மகனை மதிப்பர் ' என்று, தன் மகனை அவர்களிடம் அனுப்பினான்.
38. குடியானவர்களோ மகனைக் கண்டு, ' இவனே சொத்துக்குரியவன், வாருங்கள் இவனைக் கொன்றுபோடுவோம்; இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர்.
39. அவ்வாறே அவனைப் பிடித்துத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றனர்.
40. எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளன் வரும்பொழுது அக்குடியானவரை என்ன செய்வான் ?" என்று கேட்டார்.
41. அவர்களோ, "கொடியோரைக் கொடுமையாய்த் தண்டித்து ஒழித்துவிடுவான்; உரிய காலத்தில் பலனைக் கொடுக்கும் வேறு குடியானவரிடம் திராட்சைத் தோட்டத்தை விடுவான்" என்றனர்.
42. இயேசுவோ அவர்களுக்குக் கூறியது: " ' கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக் கல்லாய் அமைந்தது; ஆண்டவர் செயல் இது, நம் கண்ணுக்கு வியப்பே ? ' என்று நீங்கள் மறைநூலில் படித்ததே இல்லையா ?
43. எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு உங்களிடமிருந்து எடுபட்டு ஏற்ற பலனைத்தரும் இனத்தாருக்கு அளிக்கப்படும்.
44. அக்கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான். எவன் மேல் அது விழுமோ அவன் தவிடுபொடியாவான்."
45. அவர் உரைத்த உவமைகளைக் கேட்ட தலைமைக்குருக்களும் பரிசேயரும் தங்களைப்பற்றியே கூறினார் என்று உணர்ந்து,
46. அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால், கூட்டத்திற்கு அஞ்சினர். ஏனெனில், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதினர்.