1. "விண்ணரசு, தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாகும்.
2. நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்று வேலையாட்களுடன் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினான்.
3. ஏறக்குறைய ஒன்பது மணிக்கு வெளியே சென்று பொதுவிடத்தில் சிலர் வேலையற்று நிற்பதைக் கண்டான்.
4. அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள். நியாயமானதை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றான்.
5. அவர்கள் போனார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் அப்படியே செய்தான்.
6. ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டான். அவர்களிடம், 'நாள் முழுவதும் நீங்கள் ஏன் இங்கு வாளாவிருக்கிறீர்கள்?' என்றான்.
7. அவர்களோ, 'எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றனர். அவனோ, 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள்' என்று அவர்களுக்குச் சொன்னான்.
8. மாலையானதும் திராட்சைத் தோட்டத் தலைவன் தன் காரியத்தலைவனிடம், 'வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு' என்றான்.
9. எனவே, ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்து தலைக்கு ஒரு வெள்ளிக்காசு பெற்றுக்கொண்டார்கள்.
10. முதலில் அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது தங்களுக்குக் கூடுதலாய்க் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால், அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது.
11. அதை வாங்கும்போது, 'கடைசியில் வந்த இவர்கள் ஒருமணி நேரமே உழைத்தனர்.
12. பகலின் உழைப்பையும் வெயிலின் கொடுமையையும் தாங்கிய எங்களோடு இவர்களைச் சமமாக்கினீரே' என்று வீட்டுத்தலைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர்.
13. அவனோ மறுமொழியாக அவர்களுள் ஒருவனிடம், 'நண்பா, உனக்கு நான் அநீதி செய்யவில்லையே; ஒரு வெள்ளிக்காசு என்று என்னிடம் நீ கூலி பேசவில்லையா?
14. உனக்குரியதை வாங்கிக்கொண்டு போ. உனக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவனுக்கும் கொடுப்பது என் விருப்பம்.
15. என் விருப்பம்போலச் செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் நல்லவனாய் இருக்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையோ?' என்றான்.
16. இவ்வாறே கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"
17. இயேசு யெருசலேமை நோக்கிப் போகையில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து அவர்களிடம்,
18. "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு,
19. அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொன்னார்.
20. பின்னர், செபெதேயுவின் மக்களுடைய தாய், தன் மக்களுடன் இயேசுவைப் பணிந்து எதையோ கேட்க வந்தாள்.
21. "என்ன வேண்டும்" என்று அவர் அவளைக் கேட்டார். "என் மக்கள் இவ்விருவரும் உம் அரசில், ஒருவன் உமது வலப்பக்கமும், மற்றவன் உமது இடப்பக்கமும் அமரச் செய்வீர் என வாக்களியும்" என்றாள்.
22. அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்கமுடியுமா ?" என்று கேட்டார். அவர்களோ, "முடியும்" என்றனர்.
23. அதற்கு அவர், "ஆம், நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்கள்; ஆனால் என் வலப்பக்கமோ, என் இடப்பக்கமோ அமர அருளுவது என்னுடையதன்று. யாருக்கு என் தந்தை ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார்.
24. அதைக் கேட்ட பதின்மரும் அவ்விரு சகோதரர்மேல் சினங்கொண்டனர்.
25. இயேசு அவர்களைத் தம்மிடம் அழைத்துக் கூறியது: "புறவினத்தாரின் தலைவர்கள் அவர்களை அடக்கி ஆளுகின்றனர்; பெரியவர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்; இஃது உங்களுக்குத் தெரியும்.
26. உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
27. எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்.
28. இவ்வாறே, மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."
29. எரிக்கோவிலிருந்து அவர்கள் புறப்படும்பொழுது பெருங்கூட்டம் ஒன்று அவரைப் பின்தொடர்ந்தது.
30. இதோ! வழியோரத்தில் உட்கார்ந்திருந்த குருடர் இருவர், இயேசு அவ்வழியே செல்லுகிறார் என்பதைக் கேள்வியுற்று, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மீது இரக்கம்வையும்" என்று கூவினர்.
31. கூட்டமோ அவர்களைப் பேசாதிருக்கும்படி அதட்டிற்று. ஆனால் அவர்கள், "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாகக் கூவினர்.
32. இயேகூ நின்று, அவர்களை அழைத்து, "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் ?" என்று கேட்க,
33. "ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும்" என்றனர்.
34. இயேசு மனமிரங்கி அவர்கள் விழிகளைத் தொட்டார். உடனே பார்வை பெற்று அவரைப் பின்தொடர்ந்தனர்.