1. பரிசேயரும் சதுசேயரும் அவரிடம் வந்து வானிலிருந்து அருங்குறி ஒன்றைக்காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.
2. அதற்கு அவர், "மாலையில் வானம் சிவந்திருக்கிறது; அதனால் அமைதியாய் இருக்கும் என்பீர்கள்.
3. காலையில் வானம் சிவந்து மந்தாரமாய் இருக்கிறது; அதனால் இன்று காற்றும் மழையுமாயிருக்கும் என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்தறிய உங்களுக்குத் தெரியும். காலத்தின் குறிகளை அறிய உங்களால் முடியாதா ?
4. கெட்டுப்போன விபசாரத் தலைமுறை அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாசின் அருங்குறியேயன்றி வேறு எந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது" என்றார். பின் அவர்களை விட்டு நீங்கினார்.
5. அவருடைய சீடர் கடலைக் கடந்து வந்தபோது அப்பம் கொண்டுவர மறந்து போயினர்.
6. இயேசு அவர்களை நோக்கி, "பரிசேயர், சதுசேயருடைய புளிப்பு மாவைக்குறித்துக் கவனமாயிருங்கள், எச்சரிக்கை" என்று சொன்னார்.
7. அவர்களோ, "நாம் அப்பம் கொண்டுவரவில்லையே" என்று தங்களுக்குள் எண்ணிக்கொண்டனர்.
8. இதையறிந்த இயேசு, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, உங்களிடம் அப்பமில்லை என்று உங்களுக்குள் சிந்திப்பானேன்?
9. இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது எத்தனை கூடை மீதி எடுத்தீர்கள்?
10. ஏழு அப்பங்களை நாலாயிரம் போருக்குக் கொடுத்தபோது எத்தனை கூடை மீதிஎடுத்தீர்கள்? நினைவில்லையா?
11. நான் சொன்னது அப்பத்தைப் பற்றியன்று என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளாதது எப்படி? ஆகவே, பரிசேயர், சதுசேயருடைய புளிப்புமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்" என்றார்.
12. கவனமாயிருக்கக் கூறியது, புளிப்புமாவைப் பற்றியன்று; பரிசேயர், சதுசேயருடைய போதனையைப் பற்றியே என்பதை அவர்கள் அப்பொழுதான் உணர்ந்து கொண்டனர்.
13. இயேசு பிலிப்புச் செசரியா நகர்ப்புறம் வந்து தம் சீடரைப் பார்த்து, 'மனுமகன் யார் என்று மக்கள் சொல்லுகிறார்கள்?" என்று கேட்டார்.
14. அவர்களோ, "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் எரேமியாஸ் அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்" என்றனர்.
15. "நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று இயேசு அவர்களைக் கேட்டார்.
16. சீமோன் இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.
17. அதற்கு இயேசு, "யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று, வானகத்திலுள்ள என் தந்தையே.
18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் 'பாறை.' இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.
19. வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன். எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார்.
20. பின்னர், தாம் மெசியா என்பதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று தம் சீடருக்குக் கட்டளையிட்டார்.
21. அதுமுதல் இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும், கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்கு விளக்கத் தொடங்கினார்.
22. இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து, "ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்.
23. அவர் திரும்பி இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்றார்.
24. பின் இயேசு தம் சீடரை நோக்கி, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
25. ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்.
26. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?
27. "மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் தம் வானதூதரோடு வரப்போகிறார். அப்பொழுது ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார்.
28. உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகன் தம் அரசில் வருவதைக் காணும்வரை இங்கு இருப்பவர்களுள் சிலர் சாவுக்கு உள்ளாக மாட்டார்கள்" என்று சொன்னார்.