1. மேலும் அவர்களை நோக்கி, "உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வல்லமையோடு வந்திருப்பதைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.
2. ஆறு நாட்களுக்குப் பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்து ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையில் ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்குமுன் உருமாறினார்.
3. அவர் ஆடைகள் வெள்ளைவெளேரென ஒளிவீசின. இவ்வுலகில் எந்தச் சலவைக்காரனும் அதுபோல வெளுக்க முடியாது.
4. எலியாசும் மோயீசனும் அவர்களுக்குத் தோன்றி, இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
5. இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்.
6. தாம் சொல்வது இன்னதென அறியாமலே சொன்னார். ஏனெனில், அவர்கள் பேரச்சம் கொண்டிருந்தனர்.
7. அப்போது மேகம், ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட, "இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.
8. அவர்கள் உடனே சுற்றிலும் பார்த்தபோது, தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
9. மலையினின்று அவர்கள் இறங்கும்பொழுது, மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போதன்றி, அவர்கள் கண்டவற்றை ஒருவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது என்று அவர்அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10. அவர்கள் அவ்வார்த்தையை மனத்தில் இருத்தி, ' இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போது' என்பதன் பொருள் என்ன என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
11. முதலில் எலியாஸ் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" என அவர்கள் அவரைக் கேட்டனர்.
12. அவர், "எலியாஸ் முதலில் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தத்தான் போகிறார். ஆனால் மனுமகன் பாடுகள் பல படவும், புறக்கணிக்கப்படவும் வேண்டுமென எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
13. ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் வந்தாயிற்று. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளபடி அவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்றார்.
14. அவர்கள் சீடரிடம் திரும்பி வந்தபோது பெருங்கூட்டம் ஒன்று அவர்களைச் சூழ்ந்து இருப்பதையும், மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
15. மக்கள் அனைவரும் அவரைக் கண்டவுடனே திடுக்கிட்டு ஓடிவந்து வணக்கம் செய்தனர்.
16. அவர், "எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று அவர்களைக்கேட்டார்.
17. கூட்டத்திலிருந்த ஒருவன் மறுமொழியாகக் கூறியது: "போதகரே, ஊமைப் போய்பிடித்த என் மகனை உம்மிடம் கொண்டுவந்தேன்.
18. அது எங்கே அவனை ஆட்கொள்கிறதோ அங்கே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரைத்தள்ளிப் பல்லைக்கடித்து விறைத்துப்போகிறான். அதை ஓட்டும்படி உம் சீடரைக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை."
19. அதற்கு அவர், "விசுவாசமில்லாத தலைமுறையே, எதுவரை உங்களோடு இருப்பேன் ? எதுவரை உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.
20. அவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவரைக் கண்டவுடன் பேய் அவனை அலைக்கழிக்க, அவன் தரையில் விழுந்து நுரைத்தள்ளிக்கொண்டு புரண்டான்.
21. அவர், "இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாகிறது?" என்று அவனுடைய தகப்பனைக் கேட்க, அவன், "சிறுவயதிலிருந்தே இப்படித்தான்
22. இவனைத் தொலைக்க அந்தப் பேய் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்யக்கூடுமானால் எங்கள்மேல் மனமிரங்கி உதவிபுரியும்" என்றான்.
23. இயேசு அவனை நோக்கி, "கூடுமானாலா? விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்றார்.
24. உடனே சிறுவனுடைய தகப்பன், "விசுவசிக்கிறேன். என் விசுவாசமின்மையை நீக்க உதவிசெய்யும்" என்று கத்தினான்.
25. கூட்டம் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு, இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, "ஊமைச் செவிட்டுப் போயே, உனக்குக் கட்டைளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ, மீண்டும் இவனுள் நுழையாதே" என்றார்.
26. அது கத்திக்கொண்டு அவனை மிகவும் அலைக்கழித்தபின் வெளியேறிற்று. பையன் பிணம் போலானான். அதைப் பார்த்த மக்கள் கூட்டம், "இறந்துவிட்டான்" என்றது.
27. இயேசுவோ அவன் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் எழுந்தான்.
28. அவர் வீட்டிற்குள் போன பின்பு, சீடர்கள், "அதை ஓட்ட எங்களால் ஏன் முடியவில்லை?" என்று அவரைத் தனிமையாகக் கேட்டார்கள்.
29. அதற்கு அவர், "இவ்வகைப் பேய் செபத்தினாலன்றி வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.
30. அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயாவினூடே சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.
31. ஏனெனில், "மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். கொல்லப்பட்டு மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்று தம் சீடருக்குப் போதிக்கலானார்.
32. அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்கவும் அஞ்சினர்.
33. கப்பர்நகூமுக்கு வந்தனர். வீட்டிலிருக்கும்போது அவர் அவர்களை நோக்கி, "வழியில் என்ன வாதாடிக்கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார். அவர்களோ பேசாதிருந்தனர்.
34. ஏனெனில், "பெரியவன் யார்?" என்பதைப்பற்றி வழியில் தங்களுக்குள் விவாதித்திருந்தார்கள்.
35. அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.
36. பின்னர் ஒரு குழந்தையை எடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, அதை அரவணைத்து,
37. "இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்" என்றார்.
38. அருளப்பர் அவரிடம், "போதகரே, நம்மைச் சாராத ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு, அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்றார்.
39. இயேசு கூறியதாவது: "அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், என் பெயரால் புதுமை செய்தபின் உடனே என்னைப் பழித்துப்பேசக் கூடியவன் எவனுமில்லை.
40. நமக்கு எதிராக இல்லாதவன் நம் சார்பாக இருக்கிறான்.
41. நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
42. "என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.
43. உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
44. உன் கால் உனக்கு இடறலாயிருந்தால் அதை வெட்டிவிடு.
45. (44b) இரண்டு கால்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட முடவனாய் முடிவில்லா வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
46. (45) உன் கண் உனக்கு இடறலாயிருந்தால் அதை எறிந்துவிடு.
47. (46) இரண்டு கண்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணனாய்க் கடவுளின் அரசிற்குள் நுழைவது உனக்கு நலம்.
48. (47) அந்நரகத்திலோ அவர்களை அரிக்கும் புழு இறவாது; நெருப்பும் அணையாது.
49. (48) ஏனெனில், ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்.
50. (49) "உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள்? உங்களுக்குள் உப்பு இருக்கட்டும். ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."