1. அவர் கோயிலை விட்டுப் போகும்பொழுது, அவருடைய சீடருள் ஒருவர் அவரிடம், "போதகரே, இதோ பாரும், எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்" என,
2. இயேசு அவரிடம், "இப்பெரிய கட்டடங்களைப் பார்க்கிறாயே, கல்லின்மேல் கல் நிற்காதபடி எல்லாம் இடிக்கப்படும்" என்றார்.
3. அவர் கோயிலுக்கு எதிரே, ஒலிவ மலைமீது அமர்ந்தபின், இராயப்பர், யாகப்பர், அருளப்பர், பெலவேந்திரர் ஆகியோர் அவரிடம்,
4. "இவை எப்பொழுது நடக்கும்? இவை அனைத்தும் நிறைவேற இருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.
5. இயேசு கூறலானார்: "யாரும் உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
6. பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர்' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
7. போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுக்களையும் கேட்கும்போது கலங்கவேண்டாம். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இன்னும் இது முடிவன்று.
8. நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் நிலநடுக்கமும் பஞ்சமும் உண்டாகும். இவை வேதனைகளின் தொடக்கமே.
9. "நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள். உங்களை நீதிமன்றங்களுக்குக் கையளிப்பார்கள், செபக்கூடங்களில் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அவர்கள் முன் சாட்சியாய் இருப்பீர்கள்.
10. முதலில் நற்செய்தி எல்லா இனத்தாருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
11. உங்களைக் கையளிக்கக் கொண்டுபோகும்போது என்ன சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படவேண்டாம். அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படுவதையே சொல்லுங்கள். ஏனெனில், பேசுவது நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியே பேசுவார்.
12. சகோதரன் சகோதரனையும், தந்தை மகனையும் சாவுக்குக் கையளிப்பர். மக்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து அவர்களைச் சாவுக்கு உட்படுத்துவார்கள்.
13. என் பெயரைக்குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைநிற்கிறவன் மீட்புப் பெறுவான்.
14. "ஆனால், 'பாழாக்கும் அருவருப்பு' நிற்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது -- இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -- அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
15. கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் நுழைந்து எதையும் எடுக்காமலே ஓடட்டும்.
16. வயலிலிருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.
17. அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்!
18. இவை குளிர்காலத்தில் நிகழாதபடி மன்றாடுங்கள்.
19. ஏனெனில், அவை வேதனையின் நாட்களாயிருக்கும். கடவுள் படைப்பைப் படைத்த தொடக்கத்திலிருந்து இதுவரை இத்தகைய வேதனை இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை.
20. ஆண்டவர் அந்நாட்களைக் குறைக்காவிடில் எவ்வுயிரும் தப்பித்துக் கொள்ளாது. ஆனால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் பொருட்டு அந்நாட்களைக் குறைத்திருக்கிறார்.
21. அப்பொழுது எவனாவது உங்களிடம், 'இதோ! மெசியா இங்கே இருக்கிறார், அதோ! அங்கே இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.
22. போலி மெசியாக்களும் போலித்தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக் கூடிய அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.
23. உங்களுக்கு எல்லாவற்றையும் முன்னதாகவே கூறிவிட்டேன்; எச்சரிக்கையாயிருங்கள்.
24. "ஆனால் அந்நாட்களில் இவ்வேதனைகளுக்குப்பின்னர் கதிரவன் இருண்டு விடுவான்; நிலா ஒளி கெடாது,
25. விண்மீன்கள் வானிலிருந்து விழுந்துகொண்டிருக்கும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.
26. அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகங்களின் மீது வருவதைக் காண்பார்கள்.
27. அப்பொழுது அவர் தம் தூதர்களை அனுப்பி, மண்ணுலகின் கடைமுனை முதல் விண்ணுலகின் கடைமுனைவரை நாற்றிசையிலுமிருந்து தாம் தேர்ந்துகொண்டவர்களைத் திரட்டுவார்.
28. "அத்திமரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையிலுள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.
29. அவ்வாறே நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்பொழுது, அவர் அண்மையிலிருக்கிறார். வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.
30. இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
31. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போகா.
32. அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது.
33. "எச்சரிக்கையாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்பொழுது என்று உங்களுக்குத் தெரியாது.
34. இது எப்படியெனில், வெளியூர் செல்லும் ஒருவன் செய்வது போலாகும். அவன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, ஊழியர்களிடம் எல்லாம் ஒப்படைத்து, அவனவன் வேலையையும் குறிப்பிட்டு விழிப்பாயிருக்கும்படி காவலாளுக்குக் கட்டளையிடுகிறான்.
35. அதுபோல நீங்களும் விழிப்பாயிருங்கள். -- ஏனெனில், வீட்டுத்தலைவர் மாலையிலோ நள்ளிரவிலோ கோழி கூவும் பொழுதோ காலையிலோ எப்பொழுது வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.
36. அவர் திடீரென்று வரும்பொழுது நீங்கள் உறங்கிக் கொண்டு இருப்பதைக் காணலாகாது.
37. உங்களுக்குக் கூறுவதை நான் எல்லாருக்குமே கூறுகிறேன்; விழிப்பாயிருங்கள்."