1. இப்படியிருக்க, அர்ச்சகர்களே, நாம் உங்களுக்குத் தரும் கட்டளை இதுவே.
2. இதற்கு நீங்கள் செவிமடுக்காவிடில், நம் திருப்பெயருக்கு மகிமை தரும்படி உங்கள் உள்ளத்தில் நீங்கள் கருதாவிட்டால், உங்கள் மேல் சாபத்தை அனுப்புவோம்; உங்களுக்குரிய ஆசீர்வாதங்களைச் சபிப்போம்; உண்மையில் ஏற்கனவே அவற்றைச் சபித்தாயிற்று; ஏனெனில் உள்ளத்தில் அதைப் பதிய வைப்பார் யாருமில்லை, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
3. இதோ, உங்கள் கையை முறிப்போம், உங்கள் காணிக்கைகளாகிய கழிவுப் பொருட்களை உங்கள் முகத்திலேயே வீசியடிப்போம்; அவற்றுடன் உங்களையும் நமது திருமுன்னிருந்து தள்ளிப்போடுவோம்.
4. அப்போது, நாம் லேவியோடு செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே, இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
5. நாம் அவனோடு செய்த உடன்படிக்கை வாழ்வுக்கும் சமாதானத்திற்கும் அறிகுறியாய் நின்றது; இறையச்சத்தை அவனுக்குத் தந்தோம்; அவனும் நமக்கு அஞ்சி, நமது திருப்பெயருக்கு நடுங்கினான்.
6. உண்மைக்கேற்ற படிப்பினைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன; தீமையேதும் அவன் உதடுகளில் கண்டதில்லை. அவன் நம்மிடத்தில் சமாதானத்தோடும் நேர்மையோடும் நடந்துகொண்டான்; அக்கிரமத்திலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான்.
7. அர்ச்சகரின் உதடுகள் அறிவைக் கொண்டிருக்கவேண்டும்; அவர் வாயினின்று மக்கள் படிப்பினைகளைக் கேட்கின்றனர்; ஏனெனில் சேனைகளின் ஆண்டவருடைய தூதர் அவர்.
8. ஆனால் நீங்கள் நெறிதவறினீர்கள்; உங்களுடைய போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்; லேவியோடு செய்த உடன்படிக்கையைக் கெடுத்துவிட்டீர்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
9. ஆதலால் எல்லா மக்கள் முன்னிலையிலும் உங்களை இழிவுக்கும் தாழ்வுக்கும் உள்ளாக்குவோம்; ஏனெனில், நம் வழிகளை நீங்கள் கடைப்பிடிக்கவுமில்லை; உங்கள் போதனைகளில் பாரபட்சமும் காட்டினீர்கள்."
10. நம் யாவருக்கும் ஒரே தந்தையன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கம் தவறுகிறோம், நம் தந்தையரின் உடன்படிக்கையை முறிக்கிறோம்?
11. யூதா பிரமாணிக்கம் தவறினான்; இஸ்ராயேலிலும் யெருசலேமிலும் அருவருப்பானவை நடந்தன. ஏனெனில், ஆண்டவருக்கு உகந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.
12. இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும், அவன் சந்ததி முழுவதையும் யாக்கோபின் கூடாரங்களிலிருந்தும், சேனைகளின் ஆண்டவர் முன் பலிசெலுத்தும் கூட்டத்திலிருந்தும் ஆண்டவர் தொலைத்து விடுவாராக!
13. நீங்கள் செய்யும் இன்னொன்றையும் கூறுவோம்: நீங்கள் தரும் காணிக்கையைக் கண்ணோக்குவதில்லை யென்றும், கனிவோடு ஏற்றுக்கொள்வதில்லையென்றும் சொல்லி ஆண்டவருடைய பீடத்தை நீங்கள் கண்ணீராலும், அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.
14. காரணம் என்ன?" என நீங்கள் கேட்கிறீர்கள்; காரணம் இதுவே: உனக்கும், நீ இளமையில் மணந்த உன் மனைவிக்கும் இடையில் நிகழ்ந்த மணவுடன்படிக்கைக்கு ஆண்டவரே சாட்சி; அப்படியிருக்க, உடன்படிக்கையால் உன் துணைவியாய் ஏற்றுக்கொண்ட உன் மனைவிக்கு நீ பிரமாணிக்கம் தவறினாயே!
15. உடலும், வாழ்வின் மூச்சும் கொண்ட ஒரே உயிரையன்றோ அவர் உண்டாக்கினார்? இந்த ஓருயிரும் எதைத் தேடுகின்றது? கடவுள் அருளும் மக்கட்பேற்றையன்றோ? ஆதலால், எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்குப் பிரமாணிக்கம் தவறாமல் இருக்கும்படி எச்சரிக்கையாய் இருக்கட்டும்.
16. ஏனெனில், மணமுறிவை நாம் வெறுக்கிறோம், என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்; மேலாடையில் படிந்திருக்கும் அந்த நெறிகெட்ட நடத்தையைக் காட்டிக்கொள்வதையும் நாம் வெறுக்கிறோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆதலால் எச்சரிக்கையாயிருங்கள்; பிரமாணிக்கம் தவறாதீர்கள்."
17. உங்களுடைய வார்த்தைகள் ஆண்டவருக்குச் சலிப்பையே தந்தன." அவருக்கு நாங்கள் எவ்வகையில் வருத்தம் தந்தோம்?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். "தீமை செய்கிறவர்கள் அனைவரும் ஆண்டவரின் முன்னிலையில் நல்லவர்கள், அவரும் அவர்களின் மட்டில் பூரிப்படைகிறார்" என்று சொல்லுகிறீர்களே! அல்லது, "நீதியின் கடவுள் எங்கே?" என்று கேட்கிறீர்களே!