1. ஓர் இறைவாக்கு. மலாக்கிய வாயிலாய் ஆண்டவர் இஸ்ராயேலுக்கு அருளிய வாக்கு.
2. உங்கள் மீது நாம் அன்பு வைத்தோம்" என்கிறார் ஆண்டவர். ஆனால் நீங்கள்," எங்கே உம் அன்பு?" என்கிறீர்கள். "ஏசா யாக்கோபுக்கு உடன்பிறந்தவன் தானே! எனினும் யாக்கோபின் மீது அன்பு வைத்தோம்,
3. ஏசாவின் மீது நாம் அன்பு கொள்ளவில்லை. அவனது மலைநாட்டைப் பாழாக்கினோம்; அவனது உரிமைச் சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளுக்கு விட்டுவிட்டோம்" என்கிறார் ஆண்டவர்.
4. நாம் நிலைகுலைந்தோம்; ஆயினும் பாழானதை மீண்டும் கட்டியெழுப்புவோம்" என்று ஏதோம் கூறுமானால்," அவர்கள் கட்டியெழுப்பட்டும், நாம் இடித்துப்போடுவோம்; 'பொல்லாத நாடு' எனவும்,' ஆண்டவரின் சினத்திற்கு என்றென்றைக்கும் இலக்கான மக்களினம்' எனவும் அவர்கள் பெயர் பெறுவார்கள்" என்று சேனைகளின் ஆண்டவர் மறுமொழி தருகிறார்.
5. நீங்களே கண்ணாரக் காண்பீர்கள்; கண்ட பின், "இஸ்ராயேல் நாட்டெல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாண்புமிக்கவர்" எனச் சொல்லுவீர்கள்.
6. மகன் தந்தைக்கு மதிப்புத் தருகிறான், ஊழியன் தன் தலைவனுக்கு மதிப்புக் காட்டுகிறான். நாம் தந்தையாயின், நமக்குரிய மதிப்பு எங்கே? நாம் தலைவன் என்றால் நம்மட்டில் கொண்டிருக்க வேண்டிய அச்சம் எங்கே என்று சேனைகளின் ஆண்டவர் தம் திருப்பெயரை அவமதிக்கும் அர்ச்சகர்களாகிய உங்களைக் கேட்கிறார். நீங்களோ, 'உமது பெயரை நாங்கள் அவமதித்ததெவ்வாறு?' என்று கேட்கிறீர்கள்.
7. தீட்டுப்பட்ட காணிக்கையை நம் பீடத்தின் மேல் வைத்த போது நம் திருப்பெயரை அவமதித்தீர்கள். அப்படியிருந்தும், 'அதை நாங்கள் எவ்வகையில் தீட்டுப்படுத்தினோம்?' என்கிறீர்கள். ஆண்டவருடைய பலிமேடையை அவமதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே!
8. குருடான மிருகங்களைப் பலியாகக் கொடுக்கிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைக் கொண்டு வந்து பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உன் நாட்டுத் தலைவனுக்குக் கொடுத்துப் பார்; அவன் உன்மீது பூரிப்புக் கொள்வானோ? உனக்கு இன்முகம் காட்டுவானோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
9. 'இப்பொழுதோ கடவுள் உங்கள்மேல் அருள்கூரும்படி அவர் திருமுன் இறைஞ்சி நிற்கிறீர்கள்.' இத்தகைய காணிக்கையை அவருக்குக் கொடுத்திருக்க, உங்களுள் யாருக்கேனும் அவர் இன்முகம் காட்டுவாரோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
10. வீணாக நம் பீடத்தின் மீது நீங்கள் தீ வளர்க்காதபடி கதவுகளை மூடி விடுபவன் உங்களுக்குள் ஒருவன் இருக்கக்கூடாதா! உங்கள் மேல் நமக்கு அன்பே இல்லை; உங்கள் கையிலிருந்து காணிக்கையெதுவும் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
11. கதிரவன் எழும் திசையிலிருந்து மறையும் திசை வரையில் மக்களினங்கள் நடுவில் நம் திருப்பெயர் பெருமைமிக்கது; எங்கெணும் நம் திருப்பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்தப்படுகின்றன; ஏனெனில் மக்களினங்கள் நடுவில் நம் திருப்பெயர் பெருமைமிக்கது, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
12. ஆனால், ஆண்டவருடைய பலிமேடை தீட்டுப்பட்டுள்ளது என்றும், அதன்மேல் வைத்த பலியுணவு அவமதிக்கப்படலாம் என்றும் சொல்லி, நீங்கள் நமது பெயரின் பரிசுத்தத்தைக் குலைக்கிறீர்கள்.
13. 'எவ்வளவு தொல்லை!' என்று சொல்லி நம்மை இழிவுபடுத்துகிறீர்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். கொள்ளையடித்ததையும் நொண்டியானதையும் நோயுற்றதையும் கொண்டுவருகிறீர்கள்; இவற்றைத்தானே நமக்குக் காணிக்கையாய்க் கொண்டுவருகிறீர்கள்! உங்கள் கையிலிருந்து நாம் அதை ஏற்றுக்கொள்ளலாமோ, என்று கேட்கிறார் ஆண்டவர்.
14. தன் மந்தையிலிருக்கும் பழுதற்ற கடாவை நேர்ந்து கொண்டு, பழுதுள்ள ஒன்றை ஆண்டவருக்குப் பலியிடுகிற வஞ்சகள் சபிக்கப்படுக! நாமே மாமன்னர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மக்களினங்கள் யாவும் தம் திருப்பெயருக்கு அஞ்சுகின்றன.