1. ஒருநாள் அவர் கெனேசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தபோது, திரளான மக்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர்.
2. அப்போது, ஏரிக்கரையில் இரண்டு படகுகள் இருக்கக் கண்டார். மீனவர்களோ படகை விட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தனர்.
3. அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் ஏறி, கரையிலிருந்து சற்றே தள்ளச் சொல்லி, அமர்ந்துகொண்டு படகிலிருந்தே கூட்டத்திற்குப்போதிக்கலனார்.
4. பேசி முடிந்ததும் சீமோனிடம், "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்று கூறினார்.
5. அதற்குச் சீமோன், "குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
6. அவ்வாறே செய்ததும் ஏராளமான மீன்களை வளைத்துப் பிடித்தனர். வலைகள் கிழியத் தொடங்கவே,
7. மற்றப் படகிலிருந்த தங்கள் தோழர்களுக்குச் சைகை காட்டி உதவிக்கு வருமாறு அழைத்தனர். அவர்களும் வந்து படகுகள் இரண்டையும் நிரப்ப, அவை மூழ்குவனபோல் இருந்தன.
8. இதைக்கண்ட சீமோன் இராயப்பர் இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்றார்.
9. அவரும் அவரோடிருந்த அனைவரும் அகப்பட்ட மீன் பாட்டைக் கண்டுத் திகிலுற்றனர்.
10. சீமோனுடைய கூட்டாளிகளான செபெதேயுவின் மக்கள், யாகப்பரும் அருளப்பரும் அவ்வாறே திகிலுற்றனர். இயேசுவோ சீமோனை நோக்கி, "அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்" என்றார்.
11. அவர்கள் படகுகளைக் கரைச் சேர்த்ததும், யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
12. அவர் ஓர் ஊரில் இருந்தபோது, இதோ! உடலெல்லாம் தொழுநோயாயிருந்த ஒருவன் இயேசுவைக் கண்டு முகங்குப்புற விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று மன்றாடினான்.
13. அவர் தம் கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் அவனை விட்டு நீங்கியது.
14. ஒருவருக்கும் இதைச் சொல்லவேண்டாம்" என்று அவனுக்குக் கட்டளையிட்டு, "போய், உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக மோயீசன் கற்பித்தபடி காணிக்கை செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார்.
15. அவரைப்பற்றிய பேச்சு இன்னும் மிகுதியாய்ப் பரவிற்று. அவர் சொல்வதைக் கேட்கவும், தங்கள் பிணிகள் நீங்கவும் மக்கள் திரள் திரளாக அவரிடம் வருவார்கள்.
16. அவரோ தனிமையான இடங்களுக்குச் சென்று செபஞ்செய்வது வழக்கம்.
17. ஒருநாள் அவர் போதித்துக்கொண்டிருக்கும்பொழுது கலிலேயா, யூதேயா நாடுகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் யெருசலேமிலிருந்தும் வந்த பரிசேயரும் சட்டவல்லுநரும் அமர்ந்திருந்தனர். நோய் நீக்குவதற்கென ஆண்டவருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.
18. அப்போது இதோ! திமிர்வாதம் கொண்ட ஒருவனைச் சிலர் கட்டிலோடு தூக்கி வந்து, உள்ளே கொண்டுபோய் அவர் முன்னே கிடத்த முயன்றனர்.
19. கூட்ட மிகுதியால் உள்ளே கொண்டுபோக வழியறியாது கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவனைக் கட்டிலோடு நடுவில் இயேசுவின் முன்பாக இறக்கினார்.
20. அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, "அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
21. மறைநூல் அறிஞரும் பரிசேயரும், "கடவுளைத் தூஷித்துப்பேசும் இவர் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?" என்று எண்ணினர்.
22. அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசு அவர்களிடம், " நீங்கள் உள்ளத்தில் எண்ணுவதென்ன ?
23. எது எளிது ? ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா ? ' எழுந்து நட என்பதா ?" என்று கேட்டார்.
24. "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"-- திமிர்வாதக்காரனை நோக்கி- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" என்றார்.
25. உடனே அவன் அவர்கள்எதிரில் எழுந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே வீடு சென்றான்.
26. அனைவரும் திகைப்புற்றுக் கடவுளை மகிமைப் படுத்தினர். அன்றியும் அச்சம் மேலிட்டவராய், "இன்று புதுமையானவற்றைக் கண்டோம்" என்றனர்.
27. அதன் பின் வெளியே சென்று, சுங்கத் துறையில் அமர்ந்திருந்த லேவி என்ற ஆயக்காரனைக் கண்டு, "என்னைப் பின் செல்" என்றார்.
28. அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்.
29. லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து செய்தார். ஆயக்காரரும் பிறரும் பெருங்கூட்டமாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.
30. பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் முணுமுணுத்து, அவருடைய சீடர்களிடம், "ஆயக்காரரோடும் பாவிகளோடும் நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்றனர்.
31. இயேசு அதற்கு, "மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை.
32. நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" என்று மறுமொழி கூறினார்.
33. அவர்களோ, "அருளப்பரின் சீடர் அடிக்கடி நோன்பு இருந்து செபம் செய்கின்றனர். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள்.
34. அதற்கு இயேசு, "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?
35. மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.
36. மேலும் அவர்களுக்கு ஓர் உவமை கூறினார். அதாவது, "புதிய போர்வையிலே ஒரு துண்டைக் கிழித்துப் பழைய போர்வைக்கு ஒட்டுப்போடுவார் யாருமில்லை. அவ்வாறு போட்டால் புதியதும் கிழிபடும், அதிலிருந்து கிழித்த துண்டும் பழையதோடு பொருந்தாது.
37. புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவருமில்லை. வைத்தால், புது இரசம் சித்தைகளைக் கிழித்துச் சிந்திப்போவதுமல்லாமல், சித்தைகளும் பாழாகும்.
38. ஆனால், புதுத் திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்க வேண்டும்.
39. பழைய திராட்சை இரசத்தைக் குடித்தவன் புதியதை விரும்புவதில்லை. பழையதே சிறந்தது என்பான்" என்றார்.