1. அவர் ஏறெடுத்துப் பார்க்கையில், பணக்காரர் தம் காணிக்கைகளை உண்டியலில் போடுவதைக் கண்டார்.
2. வறுமைமிக்க கைம்பெண் ஒருத்தியும் இரண்டு செப்புக்காசுகளைப் போடுவதைக் கண்டு,
3. " இந்த ஏழைக்கைம்பெண் மற்றெல்லாரையும்விட அதிகம் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து கடவுளுக்குக் காணிக்கை போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்" என்றார்.
5. கோயிலைப்பற்றிச் சிலர் பேசிக்கொணடிருக்கையில், அது நல்ல கற்களாலும் பொருந்தனைக் கொடைகளாலும் அழகு செய்யப்பட்டுள்ளது என்றபோது அவர்,
6. "ஒருநாள் வரும்: நீங்கள் காணும் இதெல்லாம், கல்லின்மேல் கல் இராதபடி இடிபடும்" என்றார்.
7. "போதகரே, இவை எப்பொழுது நடக்கும்? இவை நடைபெறவிருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன?" என்று அவர்கள் அவரை வினவினர்.
8. அதற்கு அவர், "ஏமாறாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பலர் என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர், குறித்த காலம் நெருங்கிவிட்டது' என்பார்கள். அவர்கள்பின்னே போகாதீர்கள்.
9. போர்களைப் பற்றியும் குழப்பங்களைப்பற்றியும் கேள்விப்படும்போது திகிலடையாதீர்கள். இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது" என்றார்.
10. மேலும் அவர் சொன்னதாவது: "நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும்.
11. பற்பல இடங்களில் கொடிய நிலநடுக்கமும் கொள்ளைநோய்களும் பஞ்சமும் உண்டாகும்; அச்சமூட்டும் நிகழ்ச்சிகளும் வானத்தில் பெரிய அறிகுறிகளும் தோன்றும்.
12. "இதற்கெல்லாம் முன்னதாக என் பெயரின்பொருட்டு உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்.
13. எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.
14. எனவே, என்னபதில் அளிக்கலாம் என்று முன்னதாகவே எண்ணிப்பார்க்க வேண்டாம்; இதை உள்ளத்தில் இருத்துங்கள்.
15. உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்.
16. உங்கள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினரும் நண்பரும் உங்களைக் காட்டிக்கொடுப்பர். 'உங்களுள் சிலர் கொல்லப்படுவர்
17. என்பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பர்.
18. ஆயினும் உங்கள் தலைமயிர் ஒன்றுகூட விழவேவிழாது.
19. நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்.
20. "யெருசலேமைப் படைகள் முற்றுகையிடக் காணும்போது, அதன் அழிவு நெருங்கி விட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.
21. அப்போது யூதேயாவிலிருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். நகருக்குள் இருப்பவர்கள் வெளியேறட்டும். நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நகருக்குள்ளே வராதிருக்கட்டும்.
22. தண்டனையின் காலம் அது. எழுதியுள்ளதெல்லாம் அப்போது நிறைவேற வேண்டும்.
23. அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்! ஏனெனில், நாட்டிலே மிகுந்த நெருக்கடியும், இம்மக்களின்மேல் தேவகோபமும் உண்டாகும்.
24. இவர்கள் வாள்முனையில் மடிவார்கள்; புறநாடுகளுக்கெல்லாம் அடிமைகளாகக் கொண்டுசெல்லப் படுவார்கள். புறவினத்தாரின் காலம் நிறைவேறுமட்டும் யெருசலேம் புறவினத்தாரால் மிதிபடும்.
25. "கதிரவனும் நிலாவிலும் விண்மீன்களிலும் அறிகுறிகள் தென்படும். மண்ணுலகில் கடற்கொந்தளிப்பின் முழக்கத்தினால் நாடுகள் குழப்பமடைந்து இடுக்கண் உறும்.
26. உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்.
27. வானத்தின் படைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகத்தின்மீது வருவதைக் காண்பார்கள்.
28. இவை நிகழத்தொடங்கும்போது, தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
29. மேலும், அவர் அவர்களுக்குச் சொன்ன உவமையாவது: "அத்திமரத்தையும் மற்ற மரங்களையும் பாருங்கள்.
30. அவை தளிப்பதைப் பார்க்கும்பொழுது, இதோ! கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று அறிந்து கொள்ளுகிறீர்கள்.
31. அவ்வாறே, நீங்களும் இதெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது கடவுளின் அரசு அண்மையில் உள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்.
32. இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.
34. "களியாட்டத்தாலும் குடிவெறியாலும் உலகக் கவலையாலும் உங்கள் உள்ளங்கள் மந்தமடையாதபடியும், அந்நாள் எதிர்பாராமல் கண்ணிபோல் உங்களைச் சிக்கவைக்காதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்.
35. ஏனெனில், மண்ணுலகெங்கும் வாழும், அனைவர்மேலும் அந்நாள் வந்து விடியும்.
36. நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."
37. அவர் பகலிலே கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குப் போய் வெட்டவெளியில் தங்குவார்.
38. பொழுது விடிந்ததும், கோயிலில் அவர் சொல்வதைக்கேட்க மக்கள் எல்லாரும் அவரிடம் வருவார்கள்.