1. அவர் சொல்வதைக் கேட்க ஆயக்காரரும் பாவிகளும் அவரை அணுகிய வண்ணமாயிருந்தனர்.
2. அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.
3. அப்போது அவர் பின்வரும் உவமையைக் கூறினார்:
4. "உங்களுள் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றில் ஒன்றை இழந்தால் அவன் தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பாழ்வெளியில் விட்டுவிட்டு, இழந்த ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டானா?
5. கண்டுபிடித்தபின் அதைத் தன் தோள்மேல் போட்டுக்கொண்டு,
6. மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து, என்னோடு மகிழுங்கள். ஏனெனில், இழந்துபோன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பான்.
7. அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
8. " ஒரு பெண்ணிடம் இருந்த பத்து வெள்ளிக் காசுகளுள் ஒன்று காணாமற்போய் விட்டால், விளக்கேற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை, அவள் அக்கறையோடு தேடுவதில்லையா?
9. அதைக் கண்டுபிடித்தபின், தன் தோழியரையும் அண்டை வீட்டுப் பெண்களையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள். ஏனெனில், காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்.' என்பாள்.
10. அவ்வாறே, மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
11. அவர் மேலும் கூறியதாவது: "ஒருவருக்கு மக்கள் இருவர் இருந்தனர்.
12. இளையவன் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கைக் கொடும்' என்றான். அவர் தம் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்.
13. சில நாட்களுக்குப்பின் இளைய மகன் தன் சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தைத் திரட்டிக்கொண்டு தொலைநாட்டிற்குப் பயணமானான். அவ்விடத்தில் ஊதாரித்தனமாக வாழ்ந்து, சொத்தை எல்லாம் அழித்தான்.
14. எல்லாவற்றையும் செலவழித்தபின்பு, அந்நாடெங்கும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. 'அப்போது அவன் வறுமையுறலானான்.
15. அந்நாட்டுக் குடிகளுள் ஒருவனிடம் அண்டிப் பிழைக்கச் சென்றான். அவன் அவனைப் பன்றி மேய்க்கத் தன் வயலுக்கு அனுப்பினான்.
16. பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தன் வயிற்றை நிரப்ப விரும்பினான். ஆனால், அதையும் அவனுக்கு அளிப்பாரில்லை.
17. அறிவு தெளிந்து, 'என் தந்தையின் கூலியாட்கள் எத்தனையோ பேருக்கு நிறைய உணவு இருக்க, நான் இங்குப் பசியால் மடிகிறேன்! எழுந்து என் தந்தையிடம் போவேன்.
18. போய், "அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்.
19. இனிமேல் நான் உம்முடைய மகன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். என்னை உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக நடத்தும்" என்று அவரிடம் சொல்வேன்' என்றான்.
20. அப்படியே எழுந்து தன் தந்தையிடம் வந்தான். "அவன் தொலைவில் வரும்போதே அவனுடைய தந்தை அவனைக் கண்டு மனமுருகி, ஓடிப்போய் அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.
21. மகன் அவரிடம், 'அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்' என்றான்.
22. தந்தையோ ஊழியர்களை நோக்கி, 'முதல்தரமான ஆடை கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், கால்களுக்கு மிதியடிகளையும் விரைவில் அணிவியுங்கள்.
23. கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். விருந்து கொண்டாடுவோம்.
24. ஏனெனில், இறந்துபோயிருந்த என் மகன் இவன் மீண்டும் உயிர்பெற்றுள்ளான்; காணாமற்போயிருந்தவன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்' என்றார். அவர்கள் விருந்து கொண்டாடத் தொடங்கினர்.
25. "அப்போது மூத்த மகன் வயலில் இருந்தான். வயலிருந்து திரும்பி வீட்டை நெருங்கியபொழுது நடனத்தையும் இசைமுழக்கத்தையும் கேட்டு,
26. ஊழியர்களுள் ஒருவனை அழைத்து நடப்பதென்னவென்று வினவினான்.
27. அதற்கு ஊழியன், 'உம் தம்பி வந்துவிட்டார். அவர் நலமாகத் தம்மிடம் வந்து சேர்ந்ததால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றான்.
28. அவனோ சினந்து உள்ளே நுழைய மனமில்லாதிருந்தான். எனவே, அவனுடைய தந்தை வெளியில் வந்து அவனை அழைத்தார்.
29. அவன் தன் தந்தையிடம், 'இதோ! இத்தனை ஆண்டுகளாக உமக்கு ஊழியம் செய்துவருகிறேன்; உம்முடைய கட்டளையை என்றும் மீறியதில்லை. ஆயினும் என் நண்பரோடு விருந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டிகூட நீர் எனக்குக் கொடுத்ததில்லை.
30. விலைமாதரோடு உமது சொத்தை யெல்லாம் அழித்துவிட்ட இந்த மகன் இவன் வந்தபொழுது, அவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கின்றீரே! ' என்றான்.
31. "அதற்குத் தந்தை, 'மகனே, நீ என்றும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
32. நாம் விருந்தாடி மகிழ்வது முறையே. ஏனெனில், உன் தம்பி இறந்துபோயிருந்தான், உயிர்த்துவிட்டான்; காணாமற்போயிருந்தான், கிடைத்துவிட்டான்' என்றார்."