1. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. உங்களுக்கு விக்கிரகங்களையும் கொத்துவேலை உருவங்களையும் செய்துகொள்ளாமலும், நினைவுத்தூண் முதலியன நாட்டாமலும், உங்கள் நாட்டில் தொழுவதற்கான சிறப்புள்ள கல்லை நிறுத்தாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
2. நமது ஓய்வு நாட்களை அனுசரியுங்கள். நமது பரிசுத்த இடத்தின் மீது பயபக்தியாய் இருங்கள்.
3. நாமே ஆண்டவர். நீங்கள் நமது கட்டளைப்படி நடந்து, நமது சட்டங்களையும் காத்து வருவீர்களாயின், உங்களுக்குப் பருவகாலங்களிலே மழை பொழியச் செய்வோம். நிலமும் தன் பலனை விளைவிக்கும்.
4. மரங்களும் கனி கொடுக்கும்.
5. விளைச்சலைப் போரடித்து முடியுமுன்பே திராட்சைப்பழம் பறிக்கும் காலம் வரும். திராட்சைப்பழம் பறிக்கும் காலம் முடியுமுன்பே விதைப்புக் காலம்வரும். நீங்கள் நிறைவோடு உண்டு, ஓர் அச்சமுமின்றி நாட்டில் குடியிருப்பீர்கள்.
6. நாம் உங்கள் எல்லைகளில் சமாதானத்தைத் தந்தருள்வோம். உங்களை அச்சுறுத்தி உங்கள் தூக்கத்தைக் குலைத்து விடுவோர் இரார். கொடிய விலங்குகளையும் நீக்கி விடுவோம். வாளும் உங்கள் எல்லைகளை அணுகுவதில்லை.
7. உங்கள் பகைவர்களைத் துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன் விழுவார்கள்.
8. உங்களில் ஐவர் நூறு அந்நியரையும், உங்களில் நூறுபேர் அவர்களுள் பத்தாயிரம் பேரையும் துரத்துவார்கள். உங்கள் பகைவர்கள் உங்கள் முன்னிலையில் வாளால் வெட்டுண்டு விழுவார்கள்.
9. நாம் உங்கள் மேல் கருத்தாயிருந்து உங்களைப் பலுகிப் பெருகச் செய்வோம். நீங்கள் விருத்தியடைவீர்கள். நமது உடன்படிக்கையையும் உங்களுடன் உறுதிப்படுத்துவோம்.
10. பழைய தானியங்களை உண்டு, புதிய தானியங்களுக்கு இடம் உண்டாகும்படி பழையதை விலக்குவீர்கள்.
11. உங்கள் நடுவில் நமது உறைவிடமாகிய கூடாரத்தை நிறுவுவோம். நாம் உங்களை வெறுப்பதில்லை.
12. உங்கள் கடவுளாகிய நாம் உங்கள் நடுவில் எப்போதும் இருப்போம். நீங்கள் நமது குடிகளாக இருப்பீர்கள்.
13. நீங்கள் எகிப்தியருக்கு அடிமையாயிராதபடி, அவர்கள் நாட்டிலிருந்து உங்களை விடுதலையாக்கி, உங்கள் கழுத்து விலங்குகளை முறித்தெறிந்து, உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்த உங்கள் கடவுளாகிய் ஆண்டவரே நாம்.
14. ஆனால், நீங்கள் நமக்குச் செவிகொடாமலும், நமது கட்டளையெல்லாம் அனுசரியாமலும்,
15. நமது சட்டங்களைப் பொருட்படுத்தாது நமது நீதிமுறைகளையும் புறக்கணித்து நம்மாலே கட்டளையிடப்பட்டவைகளை நிறைவேற்றாமலும் நமது உடன்படித்தையை வீணாக்குவீர்களாயின்,
16. நாம் உங்களுக்குச் செய்வது என்னவென்றால்: உடனே வறுமையால் உங்களை வாட்டி வருத்தி, உங்கள் கண்களை எரித்து, உயிரை அழித்துவிடும் காய்ச்சலால் தண்டிப்போம்; நீங்கள் விதைக்கும் விதை வீணாய்ப்போகும்; உங்கள் பகைவர்கள் அதன் வலனை உண்பார்கள்.
17. உங்களுக்கு விரோதமாய் நம்முடைய முகத்தைத் திருப்புவோமாகையால் உங்கள் பகைவர் முன் விழுவீர்கள்; உங்கள் பகைவரோ உங்களை அடிமைப்படுத்தி ஆள்வார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் நீங்கள் ஓடிப்போவீர்கள்.
18. இவையெல்லாம் நாம் செய்தும் இன்னும் நீங்கள் நமக்குக் கீழ்ப்படியாவிட்டால், உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களை நாம் ஏழு மடங்கு அதிகமாகத் தண்டித்து,
19. உங்கள் கல்நெஞ்சத்தின் ஆணவத்தை அடக்குவோம். உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவோம்.
20. வீணிலே வேலை செய்வீர்கள். பூமி பலன் தராது. மரங்களும் கொடா.
21. நீங்கள் நமக்குச் செவி கொடுக்க மனமில்லாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களேயாகில், நாம் உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களுக்கு ஏழு மடங்கு துன்பம் உங்கள் மேல் வரச் செய்வோம்.
22. உங்களுக்கு எதிராய் கொடிய மிருகங்களை ஏவிவிடுவோம். அவை உங்களையும் உங்கள் மந்தைகளையும் தின்று, உங்கள் மிருகங்களையும் குறைந்து போகச் செய்யும். உங்கள் வழிகளும் பாழாய்ப் போகும்.
23. அப்படி நாம் செய்யும் தண்டனையினாலும் நீங்கள் குணமாகாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களாயின்,
24. நாமே உங்களை எதிர்த்து, உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களை ஏழுமடங்கு அதிகமாய்த் தண்டிப்போம்.
25. ( எங்ஙனமென்னால் ) நமது உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் வாளை உங்கள் மேல் வரச்செய்வோம். நீங்கள் நகர்களில் ஒதுங்கின பின்னும் கொள்ளை நோயை உங்கள் நடுவில் அனுப்புவோம். நீங்கள் உங்கள் பகைவர் கைவசமாவீர்கள்.
26. அதற்கு முன்பே உங்கள் அப்பம் என்னும் ஊன்று கோலை நாம் முறித்துப் போட்டிருப்போமாதலால், பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பங்களைச் சுட்டு, உங்களுக்கு அவற்றை நிறுத்துக் கொடுப்பார்கள். நீங்கள் உண்டும் நிறைவு கொள்ள மாட்டீர்கள்.
27. இன்னும் நீங்கள் இவைகளாலும் குணப்படாமல் நம் பேச்சை உதறித் தள்ளி நமக்கு விரோதமாக நடப்பீர்களாயின்,
28. நாம் கடும் கோபத்துடன் உங்களுக்கு விரோதியாகி, உங்கள் பாவங்களின் பொருட்டு ஏழுவகைத் துன்பங்களால் உங்களைத் தண்டிப்போம்.
29. அப்போது நீங்கள் உங்கள் புதல்வர் புதல்வியருடைய மாமிசத்தை உண்பீர்கள்.
30. மேடை குன்றுகளின் மேல் நீங்கள் கட்டிய கோயில்களையும் அழிப்போம். அவற்றில் இருக்கும் விக்கிரகங்களையும் தவிடுபொடியாக்குவோம்.
31. அதனால் நாம் உங்கள் நகர்களைக் காடாக்கி உங்கள் ஆலயங்களைப் பாழாக்கி, உங்கள் மிக்க நறுமணத்தூப வகைகளின் வாசனையையும் இனி முகராதிருப்போம்.
32. உங்கள் நாட்டைப் பாழாக்குவோம். உங்கள் பகைவர்கள் அதில் குடியேறின பின் இதுபற்றி வியப்புறுவர்.
33. உங்களையோ நாம் புறவினத்தாரிடையே சிதறடித்து, உங்கள் பிறகாலே வாளை உருவி, உங்கள் நாட்டைக் காடாக்கி, உங்கள் நகர்களை நாசமாக்குவோம்.
34. ( நீங்கள் பகைவருடைய நாட்டிற்குக் கொண்டு போகப்பட்டபோது ) ஆள் நடமாட்டமில்லாத உங்கள் நாடு பாழாய்க் கிடக்கிற நாளெல்லாம் ஓய்வு கொண்டாடிக் களிகூரும்.
35. நீங்கள் அதில் வாழ்ந்து வந்த போது அது உங்கள் ஓய்வு நாட்களிலே இளைப்பாறவில்லையே; இப்போது அது சும்மா இருந்து ஓய்வு கொண்டாடும்.
36. உங்களில் உயிரோடு தப்பியிருப்பவர்கள் பகைவர்களின் நாட்டிலே குடியிருக்கும் போது திகிலடையும்படியாய் அவர்கள் மனத்திலே அச்சம் ஆட்கொள்ளச் செய்வோம். பறக்கும் இலையின் சத்தம் கேட்டு அவர்கள் அஞ்சி, வாளோ ( என்னவோ ) என்று வெருண்டு மிரண்டோடி, துரத்துவார் இல்லாமலே தரையில் விழுவார்கள்.
37. வாளுக்கு முன் அஞ்சி ஓடுவதுபோல் அவர்கள் ஓடி, தங்கள் சகோதரர்மேல் தாக்கி மோதி விழுவார்கள். உங்கள் பகைவர்களை எதிர்த்து நிற்க உங்களுக்குத் துணிவு இராது.
38. புறவினத் தாரிடையே நீங்கள் பிழைக்க மாட்டீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கி விடும்.
39. இவர்களில் சிலர் உயிர் தப்பினால், அவர்கள் பகைவர்களின் நாட்டில் தங்கள் தீச் செய்ல்கள் என்னும் தீயில் வாடி வதங்கி, தங்கள் சொந்தப் பாவங்களின் பொருட்டும் முன்னோர் செய்த பாவங்களின் பொருட்டும் துன்பப்படுவார்கள்.
40. அவர்கள் நமக்கு விரோதமாய்த் துரோகம் செய்து கட்டிக் கொண்ட தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் முன்னோரின் அக்கிரமத்தையும் அறிக்கையிடும் வரை வருந்துவார்கள்.
41. ஆகையால், தங்களுடைய விருத்தசேதன மில்லாத மனதைப்பற்றி அவர்கள் நாணிவெட்கம் அடையும் வரை நாம் அவர்களுக்கு எதிரியாகி, அவர்களைப் பகைவர்களின் நாட்டிற்குக் கொண்டு போவோம். அப்போது தங்கள் அக்கிரமங்களின் பொருட்டு அவர்கள் செபம் செய்வார்கள்.
42. அந்நேரத்தில் நாம் யாக்கோபு, ஈசாக், அபிராகம் ஆகியோருடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ள நாட்டையும் நினைவு கூர்வோம்.
43. அவர்களாலே விடப்பட்ட பின் நாடு அவர்களின் பொருட்டுப் பாழடைந்த தன் நிலையக் குறித்துத் துக்கப்பட்டாலும், அது தன் ஓய்வு நாளைக் கொண்டாடும். அவர்களோ நம்முடைய கட்டளைகளை மீறி நமது சட்டங்களை அலட்சியப்படுத்திச் செய்த பாவங்களைப்பற்றி மன்றாடுவார்கள்.
44. அவர்கள் தங்கள் பகைவர் நாட்டில் இருக்கும்போது கூட நாம் அவர்களை முற்றிலும் வெறுக்கவுமில்லை; அவர்கள் முழுதும் அழிந்துபோகும் படிக்கும், நாம் அவர்களோடு செய்த உடன்படிக்கை வீணாய்ப் போகும்படிக்கும் நாம் அவர்களைக் கைவிடவுமில்லை. ஏனென்றால், நாம் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவரல்லவா ?
45. அவர்களுடைய கடவுளாக இருக்கும் பொருட்டுப் புறவினத்தார் பார்த்து (வியப்படைய) அவர்களை நாம் எகிப்து நாட்டிலிருந்து புறப்படச் செய்தபோது, அவர்கள் முன்னோருடன் நாம் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்வோம். நாம் ஆண்டவர் (என்றார்).
46. (45b) ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் (உடன்படிக்கை செய்து) மோயீசன் வழியாய் விதித்தருளிய நீதிகளும் கட்டளைகளும் சட்டதிட்டங்களும் இவைகளேயாம்.