1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி,
2. தொழு நோயாளியினுடைய சுத்திகரிப்பு நாளில் அவனுக்கடுத்த சட்டமாவது: அவனைக் குருவிடம் கொண்டு வருவார்கள்.
3. அவன் பாளையத்திற்கு வெளியே போய், தொழுநோய் குணமாயிற்றென்று கண்டால்,
4. சுத்திகரிக்கப் படவேண்டியவனுக்காக இரண்டு அடைக்கலான் குருவிகளையும், கேதுருக் கட்டையையும், இரத்தநிறநூலையும், ஈசோப்பையும் கொண்டு வந்து ஒப்புக்கொடுக்கக் குரு கட்டைளையிடுவார்.
5. பிறகு அடைக்கலான் குருவிகளில் ஒன்றை மண்பாத்திரத்திலுள்ள ஊற்று நீர் மேல் பலியிடச் செய்து,
6. உயிருள்ள மற்றக் குருவியையும் கேதுருக் கட்டையையும் இரத்தநிற நூலையும் எடுத்து, பலியிடப்பட்ட அடைக்கலான் குருவியின் குருதியில் தோய்த்து,
7. சுத்திகரிக்கப்பட வேண்டியவன் மேலே ஏழு தடவை தெளிப்பார். அதனால் அவன் சட்டப்படி சுத்தமுள்ளவனாவானேயன்றி வேறல்ல. பின் குரு உயிரோடிருக்கும் குருவியை வெளியிலே பறந்தோட விட்டு விடுவார்.
8. பிறகு அம்மனிதன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவி, உடம்பிலுள்ள மயிரெல்லாம் சிரைத்த பின் தண்ணீரில் குளிப்பான். இவ்வாறு அவன் சுத்திகரம் அடைந்து பாளையத்தில் புகுவான். ஆயினும், ஏழுநாள்வரை தனது கூடாரத்துக்கு வெளியே தங்கக்கடவான்.
9. ஏழாம் நாளிலோ அவன் தலைமயிரையும் தாடியையும் புருவங்களையும் உடம்பு முழுவதிலுமுள்ள மயிர்களையும் சிரைத்து ஆடைகளைத் தோய்த்துக் குளித்து,
10. எட்டாம் நாளிலே மறுவற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒருவயதுள்ள மறுவற்ற ஒரு பெண்ணாட்டையும் போசனப்பலிக்காக ஒரு மரக்காலின் பத்தில் மூன்று பங்கு மிருதுவான எண்ணெயில் பிசைந்த மாவையும், இவற்றுடன் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வருவான்.
11. அப்பொழுது, அம்மனிதனைச் சுத்திகரிக்கிற குரு அவனையும் அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவர் திருமுன் வைத்து,
12. ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் ஆழாக்கு எண்ணெயையும் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுப்பார். எல்லாவற்றையும் ஆண்டவர் திருமுன் ஒப்புக்கொடுத்த பின்பு, பாவ நிவாரணப் பலியும் தகனப் பலியும் பலியிடப்படும்.
13. பரிசுத்த இடத்திலேயே ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவார். ஏனென்றால், பாவ நிவாரணப் பலியைப் போலவே குற்றப் பரிகாரப் பலியும் குருவுக்கு உரியது.
14. அது மிகவும் பரிசுத்தமே. பின் குரு குற்றப் பரிகாரமாய்ப் பலியிடப்பட்ட மிருகத்தின் குருதியில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும், வலக் கைகால்களின் பெரு விரலிலும் தடவுவார்.
15. ஆழாக்கு எண்ணெயிலும் தன் இடக்கையிலே (சிறிது)வார்த்து,
16. அதில் வலக்கையின் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் ஏழு முறை தெளிப்பார்.
17. இடக் கையிலே எஞ்சியிருக்கிற எண்ணேயையோ சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும், வலக் கைகால்களின் பெருவிரலிலும், குற்ற நிவாரணத்திற்காகச் சிந்தப்பட்ட குருதியின் மேலும்,
18. அவனுடைய தலையின் மீதும் வார்பார்.
19. பின்னர் ஆண்டவர் திருமுன் அவனுக்காக வேண்டிப் பாவ நிவாரணப் பலியைச் செலுத்தி, தகனப் பலி மிருகத்தைக் கொன்று,
20. அதையும் அதைச் சேர்ந்த பான போசனப் பலியையும் பீடத்தின் மீது வைத்துக் கொள்வார். அவ்விதமாய் அம் மனிதன் சட்டப்படி சுத்தமுள்ளவனாவான்.
21. ஆனால், அவன் ஏழையாய் இருந்து (மேற்) சொன்னவற்றைச் சேகரிக்கச் சக்தியற்றவனானால், குரு அவனுக்காக மன்றாடும் பொருட்டுக் குற்றப் பரிகாரத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய ஓர் ஆட்டுக்குட்டியையும், போசனப் பலிக்காக எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மிருதுவான மாவிலே பத்திலொரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்
22. இரண்டு காட்டுப்புறாக்களையேனும் இரண்டு மாடப்புறாக்களையேனும் கொண்டு வருவான். அவற்றில் ஒன்றைப் பாவ நிவாரணப் பலிக்காகவும், மற்றென்றைத் தகனப் பலிக்காகவும்
23. தனது சுத்திகரத்தின் எட்டாம் நாளில் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவருக்கு முன்பாகக் குருவிடம் ஒப்புவித்து விடுவான்.
24. இவர் குற்றப்பரிகாரப் பலியாக ஆட்டுக்குட்டியையும் ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி அவற்றைச் சேர்த்து உயர்த்துவார்.
25. ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதன் குருதியில் சிறிது எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும் வலக்கை கால்களின் பெருவிரலிலும், தடவிய பின்னர்,
26. அந்த எண்ணெயிலே சிறிது தன் இடக்கையில் வார்த்து,
27. அதிலே வலக்கையின் விரலைத் தோய்த்து ஏழு முறை ஆண்டவர் திருமுன் தெளித்து,
28. சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் குற்றப்பரிகாரமாக இரத்தத்தைப் ( பூசிய ) இடத்தின் மேல் தொடுவார்.
29. பின் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக ஆண்டவரைச் சமாதானப்படுத்த, இடக்கையிலிருக்கிற எஞ்சிய எண்ணெயை அவனுடைய தலை மீது வார்த்துத் தடவுவார்.
30. அன்றியும், இரண்டு காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது கொண்டு வருவான்.
31. ஒன்றைக் குற்றப்பரிகாரப் பலிக்கும் மற்றொன்றைத் தகனப்பலிக்குமாக அவற்றைச் சேர்ந்த பானபோசனப் பலியோடுகூட ஒப்புக்கொடுப்பான்.
32. தனது சுத்திகரிப்பிற்கு வேண்டியவைகளைச் சேகரிக்க வசதியில்லாத தொழுநோயாளியைப் பற்றிய சட்டம் இதுவே என்றார்.
33. மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
34. நாம் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்க விருக்கிற நாட்டிலே நீங்கள் போய்ச் சேர்ந்த பின் யாதொரு வீட்டில் தொழுநோய் காணப்பட்டால் அவ்வீட்டுத்தலைவன் குருவிடம் போய்:
35. என் வீட்டிலே தொழுநோய் இருப்பது போல் தோன்றுகிறது என்று அறிவிப்பான்.
36. அப்பொழுது குரு அந்த வீடு தொழுநோயுள்ளதோ என்று போய்ப் பரிசோதிக்கு முன்பே, வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாத படிக்கு அவற்றை வீட்டினின்று வெளியேற்றும்படி கட்டளையிட்டு, அதன் பிறகே அவ்வீட்டிலுள்ள நோயைப் பார்க்கப் போவார்.
37. அப்போது அவன் வீட்டுச் சுவர்களிலே பார்க்க அலங்கோலமான வெள்ளை அல்லது சிவப்புக் கறைகள் உண்டென்றும், அவைகள் மற்றச் சுவரை விடப் பள்ளமாய்க் குழிந்திருக்கின்றனவென்றும் கண்டால்,
38. வீட்டின் வாயிலுக்கு வெளியே வந்து, உடனே கதவைப் பூட்டி வீட்டை ஏழுநாள் அடைத்து வைப்பார்.
39. ஏழாம் நாளில் திரும்பிப்போய்ப் பார்த்துத் தொழுநோய் அதிகப்பட்டிருக்கக் கண்டால்,
40. தொழுநோய் இருக்கிற கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே அசுத்தமான ஓர் இடத்தில் போடவும்,
41. அவ்வீட்டின் உட்புறத்தைச் சுற்றிலும் செதுக்கச் சொல்லி, செதுக்கப்பட்ட மண்ணை நகருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொட்டவும்,
42. வேறு கற்களை எடுத்து வந்து, பெயர்க்கப்பட்ட கற்களுக்குப் பதிலாக வைத்துக் கட்டி, வேறு மண்ணைக் கொண்டு பூசவும் கட்டளையிடக் கடவார்.
43. ஆனால், கற்களையும் பெயர்த்து மண்ணையும் செதுக்கி,
44. வேறு பூச்சும் செய்த பின், குரு உள்ளே போய், தொழுநோய் திரும்பவும் வீட்டில் வந்துள்ளதென்றும், சுவர்கள் கறைகறையாய் இருக்கின்றனவென்றும் கண்டால் அது தீராத் தொழுநோயாதலால் வீடு தீட்டாய் இருக்கும்.
45. அந்த வீடு முழுவதையும் இடித்து, அதன் கற்களையும், மரங்களையும், சாந்து, மண் முதலிய இடிசல்களையும் ( கொண்டுபோய் ) நகருக்கு வெளியே அசுத்தமான ஓர் இடத்தில் போடவேண்டும்.
46. வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாளில் அதனுள் சென்றவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
47. அந்த வீட்டிலே படுத்திருந்தவன் அல்லது சாப்பிட்டவன் தன் ஆடைகளைத் தோய்க்கக்கடவான்.
48. குரு மீண்டும் வந்து, வீடு மறுபடி பூட்டப்பட்டபின் தொழுநோய் படரவில்லையென்று கண்டால், தீட்டு அகன்று போயிற்றென்று அதைச் சுத்திகரிப்பான்.
49. அதைச் சுத்திகரிப்பதற்காக இரண்டு அடைக்கலான் குருவிகளையும் கேதுருக்கட்டையையும், இரத்தநிற நூலையும்,
50. ஈசோப்பையும் எடுத்து, ஓர் அடைக்கலான் குருவியை மண்பாத்திரத்திலுள்ள காற்று நீரின்மேல் கொன்று,
51. கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், இரத்தநிற நூலையும். உயிருள்ள அடைக்கலான் குருவியையும் எடுத்துக்கொண்டு, பலியிடப் பட்ட அடைக்கலான் குருவியின் குருதியிலும் ஊற்றுநீரிலும் இவற்றை நனைத்து, ஏழுமுறை வீட்டின்மேல் தெளித்து,
52. அதை அடைக்கலான் குருவியின் குருதியினாலும், ஊற்று நீராலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டை, ஈசோப், இரத்தநிற நூற்களாலும் சுத்திகரிப்பார்.
53. உயிருள்ள குருவியை வெளியிலே பறந்தோடவிட்டபின், குரு வீட்டிற்காக வேண்டிக்கொள்ளவார். அவ்விதமாய் அது சட்டப்படி சுத்திகரிக்கப்படும்.
54. இது எல்லாவிதத் தொழுநோய்க்கும் அடித்தழும்புக்கும்,
55. ஆடைத் தொழுநோய்க்கும், வீட்டுத் தொழுநோய்க்கும்,
56. (55b) ஊறு புண்ணுக்கும் பற்பல விதமாய் நிறம் மாறும் படலங்களுக்கும் அடுத்த சட்டம்.
57. (56) எது சுத்தம் எது அசுத்தம் என்று தெரிவிப்பதற்குக் (கட்டளையிடப்பட்ட சட்டம் இதுவேயாம்) என்றருளினார்.